வங்கதேசத்தில் இருந்து 200 மேற்பட்டோர் அகதிகளாக வடகிழக்கு மாநிலமான மிசோரத்தின் தெற்குகோடி மாவட்டமான லாவ்ங்ட்லாய்க்கு பெயர்ந்துள்ளனர். வங்கதேச ராணுவத்திற்கு குக்கி சின் தேசிய படைகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலால் உயிருக்கு அஞ்சி அவர்கள் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளனர்.
குக்கி சின் தேசிய முன்னணி என்ற அரசியல் கட்சியின் ஆயுதப்படைப் பிரிவு தான் குக்கி சின் தேசியப் படை. இந்தப் படை வங்கதேசத்தின் இனக் குழுவான குக்கி சின் மைசோ சமூகத்தினரால் உருவாக்கப்பட்டது. இவர்கள் வங்கதேசத்திலிருந்து தனி நாடு கோரி போராடும் ஒரு இனக் குழுவாகும்.
இந்நிலையில் இன்று திங்கள்கிழமை இந்தக் குழுவுக்கும் வங்கதேச ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து 125 பெண்கள், குழந்தைகள் உள்பட 274 பேர் தங்களது கிராமங்களில் இருந்து பெயர்ந்து மிசோரம் மாநிலத்தின் லாவ்ங்ட்லாய் மாவட்டத்தின் சிமினாசோரா கிராமத்தில் தஞ்சமடைந்துள்ளது. மொத்தம் 7 கிராமங்களைச் சேர்ந்த 247 பேர் மிசோரத்தில் தஞ்சமடைந்துள்ளனர். அவர்களுக்கு லாவ்ங்ட்லாய் மாவட்ட நிர்வாகமும் சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இணைந்து மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்து வருகின்றன.
இதற்கிடையில் வங்கதேசத்தில் உள்ள ஜோரோ Zo Reunification Organisation (ZORO) ஜோ மீள் இணைப்பு அமைப்பு குகி சின் மைசா இனக்குழுவின் அப்பாவி பொதுமக்கள் மீது வங்கதேச ராணுவம் நடத்தியுள்ள தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. ஜோரோ என்ற இந்த அமைப்பு இந்தியா, மியான்மர், வங்கதேசத்தில் உள்ள சின் குக்கி மைசா பழங்குடிகளை ஒருங்கிணைக்க பாடுபட்டு வருகிறது. வங்கதேசம் மியான்மர் நாட்டில் செயல்படும் அரக்கன் ராணுவத்துடன் ரகசிய கூட்டு ஒப்பந்தம் புரிந்து அதன்படி இந்த இன அழிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதாக ஜோரோ அமைப்பு தெரிவித்துள்ளது. வங்கதேச ராணுவத்தின் அதிரடி படையும், ஏஏ எனப்படும் மியான்மரின் அரக்கன் ஆர்மியும் இணைந்து இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாகவும் கடந்த வாரம் சாய்க்ஹியாங் ஒட்டிய கிராமங்களில் தாக்குதல் நடத்தி 9 அப்பாவி மக்களை கடத்திச் சென்றதாகவும் ஜோரோ அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. இவ்விவகாரத்தில் சர்வதேச சமூகத்தின் தலையீட்டையும் ஜோரோ கோரியுள்ளது.
மிசோரம் மாநிலத்தின் மாணவர்கள் கூட்டமைப்பான எம்எஸ்யு (MSU), எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கும், இந்தியா வங்கதேச எல்லை வாயிலாக உயிருக்கு அஞ்சி தஞ்சம் கோரி வரும் அகதிகளைத் தடுக்க வேண்டாம் என்று கோரியுள்ளது.
இதுபோன்று அகதிகள் அண்டை நாடுகளில் இருந்து வருவதால் உள்நாட்டு பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது என்று கூறியே குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியன கொண்டு வரப்பட்டன. குடியுரிமை சட்டத் திருத்தத்தில் 5 ஆண்டுகள் இந்தியாவில் தொடர்ந்து வாழும் இசுலாமியர் அல்லாதவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வகை செய்கிறது. இந்த சட்ட திருத்த மசோதா, 1955 இந்தியக் குடியுரிமைச் சட்டத்தில் சில சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ள வகை செய்கிறது.
ஆனால், அகதிகளாக வருபவர்களை சக மனிதர்களாகப் பார்க்கவேண்டும், மத ரீதியிலோ, இன ரீதியிலோ, எந்த நாட்டிலிருந்து வருபவர்கள் என்ற ரீதியிலோ அவர்களைப் பிரித்துப் பார்க்கக்கூடாது என்பதுதான் சரியான பார்வையாக இருக்கும். வாழ்க்கையை இழந்து, சொந்த நாட்டில் வாழ முடியாமல், வேறு நாட்டுக்கு வருபவர்களிடம் பாகுபாடு காட்டுவது அகதிகளுக்கு நன்மை செய்வது ஆகாது என்று கூறி எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.