சூடானில் ராணுவத்துக்கும் துணை ராணுவப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அங்கு கலவரம் மூண்டுள்ளது. இதனால் அங்குள்ள இந்தியர்கள் பத்திரமாக பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளது.


உள்நாட்டு கலவரம் சூடான்:


ஆப்ரிக்கா நாடான சூடானில் பல ஆண்டுகளாகவே உள்நாட்டுக் கலவரம் நடந்து வருகிறது. அங்கு நீண்ட காலமாக அதிபராக இருந்த ஒமர் அல் பஷீருக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்தது. ஆனால் அந்தப் புரட்சிக்குப் பின்னர் அவர்கள் எதிர்பார்த்தபடி ஜனநாயக முறையில் ஆட்சி அமையவில்லை. மாறாக அங்கு ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது. ராணுவ ஆட்சியிலும் மக்கள் நிம்மதியாக இல்லை.


அங்கு வறுமையும் தண்ணீர்ப் பஞ்சமும் தலை விரித்தாடுகிறது. ஒரு சில பகுதிகளில் விவசாயம் செழிப்பாக இருக்க வேளாண் வருமானம் முழுவதும் ராணுவத்தினரால் சுரண்டப்படுகிறது. அது மட்டுமல்லாமல் எண்ணெய் வளங்கள் மூலமாக வரும் வருமானமும் மக்களுக்கு முழுசாக நலத்திட்டங்களாக சென்று சேர்வதில்லை. இப்படி நாட்டில் ஒரு ஜனநாயக ஆட்சி இல்லாத நிலையில் இன்று அங்கு மிகப்பெரிய கலவரம் வெடித்துள்ளது.


ராணுவம் - துணை ராணுவம் மோதல்:


சூடான் நாட்டின் துணை ராணுவப் படைகளில் ஒன்றான ரேபிட் ரெஸ்பான்ஸ் ஃபோர்ஸ் என்ற குழு இன்று ராணுவத்திற்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டது. அந்தக் குழுவானது முதலில் கார்த்தோம் விமான நிலையத்தைக் கைப்பற்றியது. பின்னர் அதிபர் மாளிகையையும் கைப்பற்றியதாக அறிவித்தனர். இதனால் சூடான் முழுவதும் கலவரம் மூண்டுள்ளது. ஒருபுறம் ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் இடையே மோதல் நடக்கிறது. இன்னொரு புறம் மக்களும் ராணுவ ஆட்சிக்கு எதிராக கிளர்ந்து எழுந்துள்ளனர். சூடானில் கலவரம் மூண்டுள்ள நிலையில் அங்குள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியர்கள் யாரும் வெளியில் செல்ல வேண்டாம். வீட்டிலேயே இருக்கவும். அடுத்த அறிவிப்புகாக காத்திருக்கவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.






சர்ச்சைகளின் கூடாரம் சூடான்..


சூடான் பேருக்கு ஏற்ற மாதிரி பல்வேறு சர்ச்சைகளால் சூடான நாடாகத் தான் இருக்கிறது. ஆஃப்ரிக்காவின் வடக்குப் பகுதியில் உள்ள சூடான் இக்கண்டத்திலேயே மிகப்பெரிய நாடு என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு வாழும் மக்களில் பெரும்பாலானோர் இஸ்லாத்தைப் பின்பற்றுகின்றனர்.


சூடானின் நீண்ட கால அதிபராக இருந்தவர் ஒமர் அல் பஷீர். இவர் கடந்த 1989 ஆம் ஆண்டு தொடங்கி 2019 ஆம் ஆண்டு வரை ஆட்சி அதிகாரித்தில் இருந்தார். முன்னாள் ராணுவ அதிகாரியான ஒமர் 1989-ல் ராணுவத்தின் ஆட்சிக்கவிழ்ப்பில் அதிகாரத்தை பிடித்தார். அவரது ஆட்சி உள்நாட்டு கிளர்ச்சிகளால் நிரம்பியது. நாட்டின் தெற்கு பகுதியில் ஏற்பட்ட உள்நாட்டு கிளர்ச்சியின் காரணமாக கடந்த  2011 தெற்கு சூடான் சுதந்திரம் பெற்றது.  


போர்க்குற்றங்கள்:


போர் குற்றங்களை செய்ததாகவும் மனிநேயமற்ற குற்றங்கள் நிகழ்த்தியதாகவும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஒமர் அல் பஷீர் மீது குற்றம் சாட்டியுள்ளது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் சர்வதேச பிடி ஆணையை வழங்கியபோதிலும் 2010, 2015 தேர்தல்களில் ஒமர் சூடானில் தொடர்ச்சியாக வென்றார். இருப்பினும் அவரது கடைசி வெற்றி என்பது முக்கிய எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணித்ததால் கிடைத்தது.