Elon Musk: உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், எக்ஸ் மெயில் திட்டத்தை அறிமுகப்படுத்த விருப்பம் தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்க் போட்ட ட்வீட்:
உலகின் பெரும் பணக்காரரும், எக்ஸ் தளத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க், கூகுளின் மின்னஞ்சல் செயலியான ஜிமெயிலுக்கு போட்டியாக மின்னஞ்சல் அம்சத்தை விரைவில் கொண்டு வரலாம் என்று சூசகமாக தெரிவித்துள்ளார். DogeDesigner என்ற பெயரில் இயங்கும் X கணக்கில் வெளியான, "Xmail நன்றாக இருக்கும்" என்ற பதிவு இணையத்தில் வேகமாக வைரலானது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கக் கூடிய எலான் மஸ்கும் அந்த பதிவை கண்டு ரிடிவீட் செய்துள்ளார். அதில், "ஆம், செய்ய வேண்டிய விஷயங்களின் பட்டியலில் உள்ளது" என்று எழுதினார்.
மெயில் மார்க்கெட்:
செப்டம்பர் 2024 நிலவரப்படி, உலகளாவிய மின்னஞ்சல் சந்தையில் ஆப்பிள் மெயில் 53.67 சதவீத பங்கையும், ஜிமெயில் 30.70 சதவீதத்தையும் கொண்டுள்ளது. மற்ற குறிப்பிடத்தக்க போட்டியாளர்களாக Outlook (4.38 சதவீதம்), Yahoo! மெயில் (2.64 சதவீதம்), மற்றும் கூகுள் ஆண்ட்ராய்டு (1.72 சதவீதம்) இருப்பதாக டைம்ஸ் நவ் வேர்ல்ட் தெரிவித்துள்ளது. இருப்பினும், உலகின் மிகப் பெரிய பணக்காரர் மற்றும் வருங்கால அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவரின் நெருங்கிய கூட்டாளியான, எலான் மஸ்கால் ஆதரிக்கப்படும் ஒரு புதிய மின்னஞ்சல் அம்சம், ஜிமெயில் மற்றும் ஆப்பிள் மெயில் இரண்டிற்கும் ஒரு கடுமையாக போட்டியாளராக "எக்ஸ்மெயில்" திகழலாம் என கூறப்படுகிறது.
எலான் மஸ்கிற்கு குவியும் ஆதரவு
ஜிமெயிலுக்கு போட்டியாக எக்ஸ்மெயிலை அறிமுகப்படுத்தலாம் என்ற எலான் மஸ்கின் கருத்துக்கு சமூக வலைதளங்களில் பெரும் ஆதரவு குவிந்து வருகிறது.
அதன்படி ஒரு எக்ஸ் தள பயனாளர், “xPhone வந்தால் எப்படி இருக்கும்? நாங்கள் அனைவரும் 1 க்கு தயாராக இருக்கிறோம்" என குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு பயனாளரோ, “ஆமாம், தயவு செய்து இதை விரைவில் நடக்கச் செய்யுங்கள். எல்லாவற்றிலும் கூகுளை நம்பி இருப்பதால் கழுத்தை நெரிப்பதை போன்று உணர்ந்து நோய்வாய்ப்பட்டு சோர்வடைந்துள்ளேன். நீங்கள் டிவிட்டருக்கு விடுதலை அளித்ததை போல மின்னஞ்சலையும் விடுவியுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.