எலான் மஸ்க் ட்விட்டரை 44 பில்லியன் டாலர்களுக்கு வாங்குவதாக கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தார். ஆனால், ட்விட்டர் நிர்வாகத்திடம் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அந்த முடிவை ஒத்திவைப்பதாக தெரிவித்திருந்தார். 


இதனையடுத்து, ட்விட்டர் தரப்பில் மஸ்க் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இது தொடர்பான விசாரணை விரைவில் வரவிருந்த நிலையில், ட்விட்டரை கடந்த வியாழக்கிழமை எலான் மஸ்க் கையகப்படுத்தினார். ட்விட்டர் சிஇஓ பரக் அக்ரவால், சட்ட நிபுணர் விஜய கட்டே, தலைமை நிதி அதிகாரி நெட் சீகல் உள்ளிட்ட நான்கு பேரை ட்விட்டரில் இருந்து நீக்கினார்.


இதையடுத்து, ட்விட்டரின் உள்ளடக்கத்தை கட்டுப்படுத்தும் முடிவுகளை (content moderation decisions) மேற்பார்வையிட கொள்கை ஆலோசனைக் குழுவை உருவாக்குவதாக தெரிவித்துள்ளார். இந்த குழு "பல்வேறு கண்ணோட்டங்களை" பிரதிபலிக்கும் என்றும் எலான் மஸ்க் கூறியிருந்தார். இப்படி, ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து மஸ்க் பல அதிரடிகளை மேற்கொண்டு வருகிறார்.


இதற்கு மத்தியில், ஜாலியான ட்விட் ஒன்றை மஸ்க் இன்று பதிவிட்டுள்ளார். தனக்கு மகிழ்ச்சி தரும் விஷங்களை அவர் பகிர்ந்துள்ளார். அதில், "சுடப்பட்ட ரொட்டியும் பேஸ்ட்ரிகளும்தான் தன் வாழ்க்கையின் மிகப் பெரிய சந்தோஷங்கள்" என அவர் பதிவிட்டுள்ளார். இந்த பதிவுக்கு 4.5 லைக்குகள் கிடைத்துள்ளது.


 






இதற்கு மத்தியில், வெறுப்பு பேச்சுக்கு எதிராக ட்விட்டர் நடவடிக்கை எடுக்கும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இனி, உண்மை செய்திகள் முழுவதுமாக சரி பார்க்கப்படும் என்றும் அரசின் அழுத்தம் காரணமாக எதிர்கட்சிகளின் குரல் நசுக்கப்படாது என நம்புவதாக அவர் கூறியுள்ளார்.


மேலும், ட்விட்டர் பக்கம் தவறாக கையாளப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். வரைபடம் ஒன்றை வெளியிட்டு, தனக்கு புதிய ஃபாலோயர்கள் அதிகரிக்காமல் இருந்ததை மேற்கோள் காட்டியிருந்தார். கடந்த 2021ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் முதல் 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை, அவருக்கு புதிதாக ஃபாலோயர்கள் அதிகரிக்கவே இல்லை. 


இதில், தங்கள் தரப்பில் எந்த தவறும் நடைபெறவில்லை என குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ட்விட்டர் மறுத்து வருகிறது. ஆனால், இது தொடர்பாக, 20 முறை கோரிக்கை வைக்கப்பட்டதாக ராகுல் காந்தி கூறியுள்ளார். கடந்த 2021ஆம் ஆண்டு, ஜனவரி முதல், ட்விட்டரில் ராகுல் காந்தியின் புதிய பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தது. ஆனால், பிப்ரவரி 2022 க்குப் பிறகு, அவர் எண்ணிக்கை அதிகரிக்காமல் இருந்ததையே அந்த வரைபடம் எடுத்துரைக்கிறது.