உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தைக் கையகப்படுத்தியதில் இருந்து தொடர்ந்து தலைப்புச் செய்திகளில் இடம்பெற்று வருகிறார். கடந்த அக்டோபர் 27ஆம் தேதி, எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியது தொடங்கி தினம் ஒரு பிரச்சினை, குழப்பம் எனத் தொடர்ந்து வருகிறது.
ட்விட்டரின் தலைமை செயல் அதிகாரியாக எலான் மஸ்க் பொறுப்பேற்று பிறகு அவர் மேற்கொள்ளும் மாற்றங்களும் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
குறிப்பாக, முக்கிய விவகாரங்களில் ட்விட்டரில் கருத்துக்கணிப்பு நடத்தி, அந்த முடிவுகளின் அடிப்படையில் முடிவு எடுத்து வருகிறார் மஸ்க்.
அதன்படி, ட்விட்டரில் இருந்து வெளியேற்றப்பட்ட அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப், ட்விட்டரில் மீண்டும் சேர்த்து கொள்ளப்படாலாமா என கருத்துக்கணிப்பு நடத்தி, அந்த முடிவுகள் அடிப்படையில் அவரின் கணக்கின் மீது விதிக்கப்பட்ட தடை திரும்பப்பெறப்பட்டது.
ட்விட்டரில் அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வரும் நிலையில், நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து விலக வேண்டுமா? என ட்விட்டரில் மஸ்க் கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளார்.
இதுகுறித்து அவரின் ட்விட்டரின் பக்கத்தில், "ட்விட்டரின் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டுமா? கருத்துக்கணிப்பு முடிவுகளை பின்பற்றுவேன்" என அவர் பதிவிட்டிருந்தார்.
அவர் வெளியிட்டுள்ள மற்றொரு ட்விட்டர் பதிவில், "முன்னோக்கிச் செல்கையில், முக்கிய கொள்கை முடிவுகளுக்கு வாக்கெடுப்பு நடத்தப்படும்" என பதிவிட்டுள்ளார்.
அதில், தற்போது வரை, பதவி விலக வேண்டும் என 57.2 சதிவிகித்தனர் வாக்களித்துள்ளனர். பதவி விலகக் கூடாது என 42 சதவிகிதத்தினற் வாக்களித்துள்ளனர்.
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், மஸ்டோடன் உள்ளிட்ட பிற குறிப்பிட்ட சமூக ஊடக தளங்களில் பிற கணக்குகளை விளம்பரப்படுத்தப் பயன்படுத்தப்படும் கணக்குகளைத் தடை செய்வதாக மஸ்க் நேற்று அறிவித்திருந்தார்.
இதுகுறித்து ட்விட்டர் சப்போர்ட் வெளியிட்ட பதிவில், "எங்கள் பயனர்களில் பலர் மற்ற சமூக வலைதளங்களில் இருப்பதை நாங்கள் அங்கீகரிக்கிறோம். இருப்பினும், ட்விட்டரில் சில சமூக வலை தளங்களின் இலவச விளம்பரத்தை இனி அனுமதிக்க மாட்டோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.