உலக பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து முதலிடம் வகிக்கும் டெஸ்லா நிறுவனத்தின் எலான் மஸ்க், உலகின் பல முக்கிய பிரச்னைகளில் தனது கருத்துகளை வெளிப்படையாக தெரிவித்து வருகிறார்.
உக்ரைன், ரஷிய நாடுகளுக்கிடையே நடைபெற்று வரும் போரை முடிவுக்கு கொண்டு வர தனது யோசனையை தெரிவித்திருந்த நிலையில், சீன - தைவான் பிரச்னைக்கும் தீர்வை முன்வைத்துள்ளார் மஸ்க்.
சீன - தைவான் பிரச்னையை பொறுத்தவரை, தைவான் கட்டுப்பாட்டில் உள்ள சில பகுதிகளை சீனாவுக்கு வழங்கும் பட்சத்தில் இந்த சச்சரவு முடிவுக்கு வரலாம் என மஸ்க் கூறியுள்ளார்.
இதுகுறித்து ஃபைனான்ஷியல் டைம்ஸ் செய்தி நிறுவனத்திற்கு வெள்ளிக்கிழமை அன்று பேட்டி அளித்த அவர், "எனது பரிந்துரை என்னவென்றால் தைவானுக்கான ஒரு சிறப்பு நிர்வாக மண்டலத்தை உருவாக்குவது ஏற்று கொள்ளக்கூடிய நியாயமான முடிவாக இருக்கும். ஆனால், அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்யாது.
அது சாத்தியம் என நான் நினைக்கிறேன். உண்மையில், அவர்கள் ஹாங்காங்கை விட கடுமை இல்லாத ஒரு ஏற்பாட்டைக் கொண்டிருக்கலாம். தைவான் மீதான மோதல் தவிர்க்க முடியாதது என்று எண்ணுகிறேன். அதன் காரணமாக டெஸ்லாவில் மட்டுமல்ல, ஐபோன் தயாரிப்பாளரான ஆப்பிள் மற்றும் பரந்த பொருளாதாரத்திலும் அதன் சாத்தியமான தாக்கம் ஏற்படலாம்" என்றார்.
சீனா குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு மஸ்க் இந்த பதிலை அளித்துள்ளார். சீனாவில் உள்ள ஷாங்காயில் மிக பெரிய டெஸ்லா மின்சார கார் தொழிற்சாலை உள்ளது இதில், கவனிக்க வேண்டிய விஷயம். உலகளவில் 50 விழுக்காடு டெஸ்லா கார்கள் ஷாங்காய் தொழிற்சாலையில்தான் தயாரிக்கப்படுகிறது.
முன்னதாக, உக்ரைன் கிரிமியாவை நிரந்தரமாக ரஷியாவுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும் என்றும், ரஷிய கட்டுப்பாட்டுப் பகுதியின் தலைவிதியை தீர்மானிக்க ஐநாவின் கீழ் புதிய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும், உக்ரைன் இந்த நடுநிலைமையை ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் மஸ்க் ஐடியை கொடுத்திருந்தார்.
ஆனால், இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. மஸ்கின் கருத்து ட்விட்டரில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது.
தைவானை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கு சீனா நீண்ட காலமாக முயற்சி செய்து வருகிறது. ஜனநாயக ரீதியில் ஆட்சி செய்யப்படும் தைவான் தனது மாகாணங்களில் ஒன்று என்றும் அதை ராணுவத்தின் மூலம் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் திட்டத்தையும் சீனா நிராகரிக்கவில்லை.
சீனாவின் கருத்தை தைவான் அரசாங்கம் கடுமையாக எதிர்த்து வருகிறது. நாட்டில் உள்ள 23 மில்லியன் மக்கள் மட்டுமே தங்களின் எதிர்காலத்தை தீர்மானிக்க முடியும் என்றும் தைவான் கூறி வருகிறது.