Elon Musk : ஊழியர்களுக்கு,  எலான் மஸ்க் நள்ளிரவு 2.30 மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். அதில் குறைந்தபட்சம் வாரத்திற்கு 40 மணி நேரம் பணியாற்ற வேண்டும் என எலான் மஸ்க் வலியுறுத்தியுள்ளார்.


மின்னஞ்சல்


ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கிய பிறகு பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும் தொடர்ந்து, தனது ட்விட்டர் பக்கத்தில் தான் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், ட்விட்டர் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் தனது ஊழியர்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி இருந்தார். கடந்த புதன்கிழமை நள்ளிரவு 2.30 மணிக்கு அனுப்பிய மின்னஞ்சல் விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. 


பணிநீக்கம் நடவடிக்கை


முன்னதாக, எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கியதில் இருந்து அதில் பணியாற்றி வந்த ஆயிரக்கணக்கான ஊழியர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்வது, புதிய அம்சங்களை அறிவிப்பதும் வழக்கமாகவே வைத்திருந்தார். இதுமட்டுமின்றி, இந்தியாவில் செயல்பட்டு வந்த 3 ட்விட்டர் அலுவலகங்களில் 2 அலுவலகங்களை எலான் மஸ்க் மூடியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 டெல்லி, மும்பையில் இருந்த ட்விட்டர் அலுவகம் மூடப்பட்டுள்ளது. தற்போது பெங்களூருவில் மட்டும் இயங்கி வருவதாக கூறப்படுகிறது. மூடப்பட்ட அலுவலகங்களில் பணியாற்றிய வரும் ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை செய்ய வேண்டும் என எலான் மஸ்க் உத்தரவிட்டிருந்தார்.


40 மணி நேரம் பணியாற்ற வேண்டும்


இந்நிலையில், ட்விட்டர் நிறுவனத்தின் சான்ஃபிரான்சிஸ்கோ அலுவலகம் நேற்று ஊழியர்கள் இல்லாமல் காலியாக இருந்தது. இதனால் கடந்த புதன்கிழமை நள்ளிரவு 2.30 மணிக்கு எலான் மஸ்க் ஊழியர்களுக்கு மின்னஞசல் ஒன்று அனுப்பியுள்ளார். அதில் "Office is Not Official” என்று குறிப்பிட்டிருந்தார்.  மேலும், ஊழியர்கள் குறைந்தபட்சம் வாரத்திற்கு 40 மணி நேரம் பணியாற்ற வேண்டும் என்று அந்த மின்னஞ்சலில் குறிப்பிட்டிருந்தார்.


ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றுவதை எலான் மஸ்க் தொடக்கத்தில் இருந்தே மறுப்பு தெரிவித்து வந்தார். ஆனாலும், ஒரு சில காரணங்களுக்கு வீட்டில் இருந்தே பணியாற்றும்படி சமீபத்தில் உத்தரவிட்டிருந்தார். கடந்த ஆண்டு டெஸ்லா நிறுவன தலைவரான எலான் மஸ்க், ஊழியர்கள் வாரத்திற்கு குறைந்தபட்சம் 40 மணி நேரம் அலுலவகத்தில் பணியாற்ற வேண்டும். பணியாற்றவில்லை என்றால் பணிநீக்கம் செய்யப்படுவர் என்று தெரிவித்து இருந்தார்.


டிவிட்டரை வாங்கிய எலான் மஸ்க்:


ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கிய பிறகு பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும் தொடர்ந்து, தனது ட்விட்டர் பக்கத்தில் தான் வெளியிட்டு வருகிறார். இதன் காரணமாகவே பல்வேறு முக்கிய நபர்களும், பிரமுகர்களும் எலான் மஸ்கை பின் தொடர்ந்து வருகின்றனர். ஆனால், தற்போது அவர் செயல்பாடுகள் முற்றிலும் வித்தியாசமாக உள்ளது. இது சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.