புகைபிடிப்பதால் புற்றுநோய், இதய பிரச்னைகள், நுரையீரல் பிரச்னைகள் போன்றவை ஏற்படுகிறது. அதுமட்டுமல்லாமல், பார்வையிழப்பை ஏற்படுத்துவதில் புகையிலை முக்கியப்பங்கு வகிக்கிறது என ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.
புகையிலை தீமைகள்:
புகைபிடித்தல் கண்ணின் மையப்பார்வையை (macula) கடுமையாக பாதிக்கிறது. புகைப்பிடிப்பவர்களுக்கு வயது தொடர்பான மாகுலர் டிஜெனரேஷன் (AMD) ஏற்படுவதற்கான ஆபத்து புகைப்பிடிக்காதவர்களை விட ஐந்து முதல் ஆறு மடங்கு அதிகமாக இருப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
உலகில் வயது வந்தவர்களில் நான்கில் ஒருவர் புகையிலை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. புகையிலையை பயன்படுத்துவதில் ஆண்கள், பெண்களுக்கு இடையே பெரிய வேறுபாடு இருக்கிறது. ஆண்களை பொறுத்தவரையில், மூன்றில் ஒரு ஆண், புகையிலை பயன்படுத்துபவராக இருக்கிறார். ஆனால், பெண்களை பொறுத்தவரையில் அது மிக குறைவு.
புகையிலை பயன்பாட்டுக்கு எதிராக நடவடிக்கை:
பத்தில் ஒன்றுக்கும் குறைவான பெண்ணே புகையிலை பயன்படுத்தி வருதவாக கூறப்படுகிறது. இப்படி, உலக சுகாதாரத்தில் புகையிலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக, புகையிலை பயன்பாட்டுக்கு எதிராக பல்வேறு நாடுகள் நடவடிக்கை எடுத்து வருகின்னறன.
அதன் தொடர்ச்சியாக, கனடா அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. புகையிலை பயன்பாட்டுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புகையிலை எதிர்ப்பு வாசகங்களை ஒவ்வொரு சிகரெட்டில் அச்சிட உள்ளது கனடா. ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் புகையிலை எதிர்ப்பு வாசகங்கள் அச்சிடப்பட உள்ளது.
ஒவ்வொரு சிகரெட்டிலும் புகையிலை எதிர்ப்பு வாசகங்கள்:
"புகையிலை குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும்", "சிகரெட் பயன்பாடு புற்றுநோயை ஏற்படுத்துகிறது", "ஒவ்வொரு பஃபிலும் விஷம் இருக்கிறது" போன்ற புகையிலை எதிர்ப்பு வாசகங்கள் ஒவ்வொரு சிகரெட்டிலும் இடம்பெற உள்ளது. பொதுவாக, சிகரெட் பெட்டிகளில் இதுபோன்ற வாசகங்கள் இடம்பெறுவது உண்டு.
ஆனால், முதல்முறையாக, ஒவ்வொரு சிகரெட்டிலும் விழிப்புணர்வு வாசகங்கள் அச்சிடப்பட உள்ளது. இதுகுறித்து கனடா சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், "புகைபிடிக்கும் பெரியவர்கள் புகைபிடிப்பதை விட்டுவிடவும், இளைஞர்கள் மற்றும் புகையிலை பயன்படுத்தாதவர்களை நிகோடின் அடிமைத்தனத்திலிருந்து பாதுகாக்கவும் புகையிலையின் ஈர்ப்பை மேலும் குறைக்கவும் கனடா அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிகரெட்டுகளில் அச்சிடப்படும் எச்சரிக்கை வாசகங்களை புகைப்பிடிப்பவர்கள் தவிர்க்கவே முடியாது" என்றார்கள்.
வரும் 2035ஆம் ஆண்டுக்குள், கனடாவில் புகையிலை பயன்பாட்டை 5 சதவிகிதம் குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கனடா சுகாதாரத்துறை அமைச்சர் ஜீன்-யவ்ஸ் டுக்லோஸ் வெளியிட்ட அறிக்கையில், "புகையிலை பயன்பாடு கனடாவின் மிக முக்கியமான பொது சுகாதாரப் பிரச்சனைகளில் ஒன்றாகத் தொடர்கிறது. மேலும், நோய் மற்றும் அகால மரணம் ஏற்படுவதற்கான முக்கிய காரணமாகும்" என்றார்.
புகையிலை விழிப்புணர்வு விதி வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. ஆனால், பல்வேறு கட்டங்களாக அமல்படுத்தப்பட உள்ளது.