அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் வரி மற்றும் செலவு மசோதாவை, அருவருக்கத்தக்கது என எலான் மஸ்க் கடுமையாக விமர்சித்துள்ளார். அந்த மசோதா, அமெரிக்க மக்களை கடன் சுமையில் தள்ளும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அரசு பதவியில் இருந்து விலகிய எலான் மஸ்க்
அமெரிக்காவின் அதிபராக ட்ரம்ப் வெற்றி பெறுவதற்காக, உலக பணக்காரரும், ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களின் உரிமையாளருமான எலான் மஸ்க் பெரும் பங்காற்றினார். அதன் பிறகு, அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற பின், அரசின் செலவினங்களை கட்டுப்படுத்தவும், சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும், அரசாங்க செயல்திறன் துறை(DOGE) என்ற புதிய துறையை உருவாக்கி, அதற்கு தலைவராக எலான் மஸ்க்கை நியமித்தார்.
ஆரம்பத்தில் பல்வேறு அதிரடிகளை அரங்கேற்றி வந்த மஸ்க், கடும் விமர்சனங்களுக்கும் உள்ளானார். எனினும், அவர் தொடர்ந்து பல்வேறு சீர்திருத்த முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். ட்ரம்ப்பும் அவருக்கு முழு ஆதரவு அளித்து வந்தார்.
இந்நிலையில், முழுவதுமாக அரசுத் துறையில் கவனம் செலுத்தியதால், எலான் மஸ்கின் டெஸ்லா உள்ளிட்ட நிறுவனங்கள் சிக்கலில் சிக்கின. இதையடுத்து, அரசு துறையின் மீதான கவனத்தை குறைத்துக் கொண்டு, தனது நிறுவனங்கள் மீது கவனம் செலுத்தப் போவதாக மஸ்க் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், சமீபத்தில் அரசுப் பதவியை துறந்துவிட்டு சென்றார். இதனால், ட்ரம்ப்புக்கும் மஸ்க்கிற்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.
இத்தகை சூழலில்தான், தற்போது ட்ரம்ப்பின் மசோதாவை கடுமையாக விமர்சித்துள்ளார் எலான் மஸ்க்.
மஸ்க் வைத்த விமர்சனம் என்ன.?
அமெரிக்க அரசின் வரி மற்றும் செலவு மசோதா குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள எலான் மஸ்க், “என்னை மன்னிக்கவும், என்னால் இதற்கு மேல் என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இந்த மிகப்பெரிய, மூர்க்கத்தனமான காங்கிரஸின் செலவு மசோதா அருவருக்கத்தக்கதாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இதற்கு வாக்களித்தவர்கள் வெட்கப்பட வேண்டும் எனவும், நீங்கள் தவறு செய்துவிட்டீர்கள் என்பது உங்களுக்கே தெரியும் என்றும் கூறியுள்ளார்.
மேலும், ஏற்கனவே 2.5 ட்ரில்லியன் டாலர்கள் அளவிற்கு பற்றாக்குறை உள்ள பட்ஜெட்டை இந்த மசோதா மிகப்பெரிய அளவில் அதிகரிக்கச் செய்யும் என்றும் காங்கிரஸ் அமெரிக்காவை திவாலாக்கி வருகிறது என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார் எலான் மஸ்க்.
வெள்ளை மாளிகையின் பதில் என்ன.?
மஸ்க்கின் இந்த கருத்துக்கு பதிலளித்துள்ள வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட், இந்த மசோதாவின் மீது மஸ்க் எத்தகைய நிலைப்பாட்டில் இருந்தார் என்பது அதிபருக்கு ஏற்கனவே தெரியும் என்றும், மஸ்க்கின் கருத்து அதிபர் ட்ரம்ப்பின் முடிவில் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்றும் கூறியுள்ளார்.
ட்ரம்ப் இந்த மசோதாவை தனது பொருளாதார திட்டத்தின் முக்கிய பகுதியாக கருதுகிறார். ஆனால், நிதி ஆலோசகர்கள், வல்லுனர்கள் பலரும் இந்த மசோதாவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.