Elon Musk: உலக பெரும் பணக்காரரான எலான் மஸ்க் தனக்கு குழந்தைகளை பெற்று கொடுக்குமாறு, நிறுவன பெண் ஊழியர்களை கேட்டுக் கொண்டதாக் கூறப்படுகிறது.


எலான் மஸ்க் மீது பாலியல் குற்றச்சாட்டு:


எக்ஸ் சமூக வலைதளம்  மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் போன்ற நிறுவனங்களின் உரிமையாளரான எலான் மஸ்க், தனது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தில் முன்னாள் பயிற்சியாளராக இருந்த ஒரு ஊழியருடன் பாலியல் உறவில் இருந்ததாகவும், பின்னர் அந்த பெண் மஸ்கின் நிர்வாகக் குழுவில் சேர்ந்தார் என்றும் தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் (WSJ) செய்தி வெளியிட்டுள்ளது. மஸ்க் மற்றொரு பணியாளரை தனக்கு குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும்படி கேட்டதாகவும் கூறப்படுகிறது. அதை செய்ய அந்த பெண் ஊழியர் மறுத்ததால் அவருக்கு சம்பள உயர்வு மறுக்கப்பட்டது மற்றும் அவரது செய்ல்பாடு விமர்சனத்திற்கு ஆளானதாகவும் கூறப்படுகிறது. WSJ இன் பிரத்தியேக அறிக்கையின்படி, ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் மின்சார வாகன (EV) தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகிய இரண்டிலும் எலான் மஸ்க் பின்பற்றும் பணியிட கலாச்சாரம், பெண் ஊழியர்களை ”அசெளகரியமாக உணர வைத்தது” என்று தெரிவித்துள்ளது.


பெண் ஊழியர்கள் மீது கூடுதல் கவனம்?


டெஸ்லாவில் பெண் ஊழியர்களை மேற்கோள்காட்டியுள்ள அந்த அறிக்கை, அவர் பெண்களுக்கு "அதிகப்படியான கவனத்தை" கொடுத்ததாக அல்லது அவர்களைப் பின்தொடர்ந்ததாக குறிப்பிட்டுள்ளது. இதற்கிடையில், SpaceX விமானப் பணிப்பெண் ஒருவர், 2016 ஆம் ஆண்டில், மஸ்க் தன்னிடம் அவரது ஆசயை வெளிப்படுத்தியதாகவும், பாலியல் செயல்களுக்கு ஈடாக குதிரையை வாங்கிக் கொடுக்க முன்வந்ததாகவும் குற்றம் சாட்டினார். இதேபோன்று மற்றொரு பெண் ஊழியருடனான குறுஞ்செய்தி உரையாடல்களும் வெளியாகியுள்ளன.


மஸ்கின் நிறுவனத்தில் அங்கு பாலியல் துன்புறுத்தல் பற்றிய நகைச்சுவைகள் பொதுவானவை, ஆண்களை விட பெண்களுக்கு குறைவான ஊதியம் மற்றும் புகார் செய்த தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர் என கூறப்படுகிறது. அவர்களின் புகார்களில், ”பணியிடத்தில் பாலியல் தொடர்பான கருத்துகள் மற்றும் பிற வகையான துன்புறுத்தல்கள் பொறுத்துக்கொள்ளப்பட்ட அல்லது சாதாரண நிகழ்வு என்பது போன்ற பாலியல் கலாச்சாரத்தை அவர் உருவாக்கியதாக குற்றம் சாட்டியுள்ளனர்.


போதைப்பொருள் பயன்பாடு:


முன்னதாக, மஸ்க் எல்எஸ்டி, கோகோயின், எக்ஸ்டசி, காளான்கள் மற்றும் கெட்டமைன் உள்ளிட்ட பல்வேறு போதைப் பொருட்களை  தனது நிறுவன ஃபோர்ட் உறுப்பினர்களுடன் பயன்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


பத்திரிகையாளர் டான் லெமன் உடனான உரையாடலின் போது, ​​மஸ்க், மனச்சோர்வு நிகழ்வுகளை எதிர்த்துப் போராட, முதன்மையாக மருத்துவமனைகளில் மயக்க மருந்தாகப் பயன்படுத்தப்படும் கெட்டமைன் என்ற மருந்தைப் பயன்படுத்தியதாக ஒப்புக்கொண்டார். அவர் மருந்துக்கான சட்டப்பூர்வ மருந்துச்சீட்டை வைத்திருப்பதாகவும், "ஒரு வாரத்திற்கு ஒருமுறை ஒரு சிறிய அளவு அல்லது அது போன்ற ஏதாவது ஒன்றை" குறைவாகவே உட்கொள்வதாகவும் அவர் வெளிப்படையாக பேசினார்.