தாய்லாந்து நாட்டில் குட்டியானை ஒன்று சுவரை உடைத்து உணவை எடுத்துச் சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தாய்லாந்து நாட்டின் சலர்கியாட்பட்டானா கிராமத்தில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. நம்மூரிலும் அவ்வப்போது நீலகிரி, கோத்தகிரி, முதுமலை, கிருஷ்ணகிரி என வனத்தை ஒட்டிய பகுதிகளில் யானைகள் ஊருக்குள் புகுந்த செய்தியைப் படித்திருப்போம். ரேஷன் கடையை உடைத்து அரிசியை எடுத்துச் சென்ற யானை செய்திகூட படித்திருப்போம்.


ஆனால், தாய்லாந்து நாட்டின் இந்த குட்டி யானை ஒருபடி மேலே சென்று வீட்டின் சுவரை உடைத்து அதுவும் துல்லியமாக அடுப்பங்கரை சுவரை உடைத்து தனக்குத் தேவையான உணவை எடுத்துச் சென்றுள்ளது.






கடந்த 19ம் தேதி நடந்த இந்தச் சம்பவத்தை வீட்டின் உரிமையாளர் தனது செல்போனில் படமாக்க. கடந்த வாரத்தின் வைரல் வீடியோவாக இது யூடியூப், ஃபேஸ்புக், ட்விட்டரைக் கலக்கியது. வீட்டுக்குள் யானை புகுந்து உருட்டும்போது சற்றும் தளராமல் அதனை வீடியோ எடுத்த இளம் பெண்ணுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.


அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள காட்சியின் விவரம் இதுதான்..


யானை ஒன்று வீட்டின் அடுப்பங்கரை சுவரை உடைத்து தும்பிக்கையை நம்பிக்கையுடன் உள்ளே செலுத்தி உணவுப் பொருட்களை தேடுகிறது. அங்கே கிடைக்கும் சில பாக்கெட்டுகளை லாவகமாக எடுத்துக் கொள்கிறது. அந்தப் பைகளில் அரிசி இருந்துள்ளது. அவற்றை மட்டும் எடுத்துக் கொண்ட யானை வேறு எந்த தொந்தரவும் செய்யாமல் சென்றுவிடுகிறது. இந்தக் காட்சி இணையத்தில் வைரலாக ஊடகங்கள் அந்த யானையின் பூன்சூவே (Boonchuay) எனக் கண்டுபிடித்து வெளியிட்டது.


இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், பூன்சூவே அருகிலுள்ள கேங் க்ரச்சான் தேசியப் பூங்காவில் வசிக்கிறது. இந்தக் குட்டி யானைக்கு இதே வேலை தானாம். அவ்வப்போது இயற்கையாக அமைந்துள்ள அந்த வனவிலங்குப் பூங்காவிலிருந்து எஸ்கேப் ஆகி அருகிலுள்ள கிராமங்களுக்குள் புகுந்துவிடுமாம். கடைசியாக இரண்டு மாதங்களுக்கு முன்னர் கூட இது மாதிரி ஒரு ரெய்டு விட்டிருக்கிறது பூன்சூவே. 


யானைகள் பலவிதம்..


யானைகள் இரண்டு இனங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவை ஆப்பிரிக்க மற்றும் ஆசிய யானை இனங்களாகும். ஆசிய யானைகள் இலங்கை, இந்தியன், சுமத்ரான் மற்றும் போர்னியோ என நான்கு துணை இனங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. தாய் யானைகள் இந்திய யானைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. தாய்லாந்து யானை இனம், தாய்லாந்து நாட்டின் அதிகாரப்பூர்வ தேசிய விலங்கு ஆகும். ஒரு காலத்தில் தாய்லாந்தில் 100,000 வளர்ப்பு யானைகள் இருந்ததாகவும், 2007 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் தாய்லாந்தில் 3,456 வளர்ப்பு யானைகள் மற்றும் சுமார் ஆயிரம் காட்டு யானைகள் இருந்தன என்றும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.  


ஒவ்வொரு யானைக்கும் போதுமான உணவை உறுதிப்படுத்த குறைந்தது 100 கி.மீ 2 பரப்பளவு தேவைப்படுகிறது. தாய்லாந்தில் சட்டவிரோதமாக வனங்கள் அழிக்கப்பட்டு வருவதால் யானைகளின் எண்ணிக்கையும் குறைந்து அவை இதுபோன்ற ஊருக்குள் புகுந்து உணவுக்கு அலையும் நிலை ஏற்பட்டு வருவதாக அந்நாட்டு வன உயிரி ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.