மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளான விமானம் என்ற தலைப்பே வியப்பைத் தருகிறதா? ஆனால் உண்மை அதுதான். கத்தார் ஏர்வேஸுக்கு சொந்தமான போயிங் ரக விமானம் ஒன்று அமெரிக்காவின் சிகாகோ விமான நிலையத்தில் மின் கம்பத்தில் மோதியதில் அதன் ஒரு பக்க றெக்கை சேதமடைந்துள்ளது. மின் கம்பத்தில் மோதியவாறு விமானம் நிற்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி உள்ளது.


விமான நிலையங்களில் விமானங்கள் இறங்கும்போதும், டேக் ஆஃப் ஆகும்போதும் விபத்துக்கள் நடப்பது வழக்கமானதே. எத்தனை எத்தனை பாதுகாப்பு நடவடிக்கை எடுத்தாலும் கூட அந்த பிரமாண்ட வாகனம் சில நேரங்களில் விபத்துக்குள்ளாகிவிடுகிறது.


அப்படித்தான் கத்தார் ஏர்வேஸுக்கு சொந்தமான போயிங் 777F ரக சரக்கு விமானம் ஒன்று மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. சிகாகோ ஓ ஹேர் விமான நிலையத்தில் தான் இந்த விபத்து நடந்துள்ளது.


வைரலாகும் புகைப்படம்:
இதனையடுத்து, A7-BFH  என்ற பதிவு எண் கொண்ட கத்தார் ஏர்வேஸின் போயிங் 777F ரக சரக்கு விமானத்தின் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதனைப் பகிர்ந்த ட்விட்டராட்டி ஒருவர், ஐயகோ! கத்தார் ஏர்வேஸின் போயிங் 777-FDZ (A7-BFH) சரக்கு விமானம் சிகாகோ விமான நிலையத்தில் ஒரு மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது என்று பதிவிட்டு புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.






சிகாகோ விமான நிலையத்தில் இருந்து மாஸ்ட்ரிட்ச் விமான நிலையத்திற்கு அந்த விமானம் செல்வதாக இருந்தது. ஆனால் விமானத்தை திருப்பும் போது ஏற்பட்ட விமானியின் தவறான கணிப்பு அல்லது தொலைதொடர்பில் ஏற்பட்ட இடைவெளியால் விமானம் விபத்துக்குள்ளானதாக தெரிகிறது. இருப்பினும் ஒரு பிரமாண்ட விமானம் இப்படி ஒரு மின் கம்பத்தில் முட்டி நிற்பதைப் பார்க்கும் போது வருத்தமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


இந்த விபத்து தொடர்பாக கத்தார் ஏர்வேஸ் விமான நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் "கத்தார் ஏர்வேஸின் சரக்கு விமானம் QR8141 விபத்துக்குள்ளானது உறுதி செய்யப்படுகிறது. இந்த விமானம் அமெரிக்காவின் அட்லான்டா நகரில் இருந்து சிகாகோவுக்குச் சென்றது. சிகாகோ விமான நிலையத்தில் அதை நிறுத்திவைக்க முயன்றபோது எதிர்பாராத விதமாக விமானத்தின் ஒரு பக்க றெக்கை மின் கம்பத்தில் மோதியது. இதனால் றெக்கை சேதமடைந்துள்ளது. விபத்தில் எந்த ஒரு சிப்பந்தியும் காயமடையவில்லை. இருப்பினும் இந்த விபத்து குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ரன்வே 10C யில் விமானத்தை நிறுத்த முயன்றபோதே இந்த விபத்து நடந்துள்ளது. விபத்துக்கான துல்லியமான காரணம் தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை அதிகாரிகள் தீர விசாரணை நடத்தி முடிவுக்கு வருவார்கள்" என்று கூறியுள்ளது.