பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் மீது முட்டை வீசப்பட்டச் சம்பவம் அடங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் நேற்று லயான் எனும் நகரில் நடந்த உணவுத் திருவிழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளச் சென்றார்.


அப்போது, அவர் மீது திடீரென ஒரு முட்டை வீசப்பட்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த முட்டை அவர் மீது உடைந்து விழாமல் அவரின் தோளில் பட்டு கீழே விழுகிறது. ஒரு விநாடி திகைத்துப்போன அதிபர் நிலைமையை உணர்ந்து கொண்டார். உடனே அதிபரின் மெய்க்காப்பாளர்கள் இருவர் அவரை சுற்றிவளைத்து ஆசுவாசப்படுத்தி நிலைமையை எடுத்துரைக்கின்றனர். அதற்குள் முட்டை வீச்சில் ஈடுபட்ட நபரை போலீஸார் அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தினர்.






பெருந்தன்மையுடன் செயல்பட்ட மேக்ரோன்..


போலீஸார் அந்த நபரை அழைத்துச் செல்ல அதிபர் இமானுவேல் மேக்ரோனோ, அந்த நபருக்கு என்னிடம் தெரிவிப்பதற்கு ஏதாவது இருந்தால் அவரை அனுமதியுங்கள் என்று கூறினார். முட்டை வீசிய நபரின் நோக்கம் என்னவென்பது தெரியவில்லை. கடந்த ஜூன் மாதம் அதிபர் மேக்ரோன் கன்னத்தில் ஒருவர் அறைந்தார். அந்த நபருக்கு 4 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. வன்முறையையும், சிறுமையான செயல்களையும் தான் ஒருபோதும் அங்கீகரிக்க மாட்டேன் என அதிபர் மேக்ரோன் கூறினார்.


பிரான்ஸில் பொதுமக்களோடு மக்களாக கூட்டங்களுக்குள் அரசியல் பிரமுகர்கள் கலந்து பழகும் நிகழ்வு கிரவுட் பாத் என்று அழைக்கப்படுகிறது. பிரான்ஸ் நாட்டில் இன்னும் 6 மாதங்களில் தேர்தல் நடைபெறவிருக்கிறது. தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது பற்றி இதுவரை மேக்ரோன் ஏதும் தெரிவிக்காவிட்டாலும் கூட இனி அவர் அது தொடர்பான அறிவிப்பை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


பிரான்ஸில் இது புதிதல்ல..


தலைவர்கள் மீது முட்டை உள்ளிட்ட பொருட்களை வீசி எறிவது புதிதல்ல. 2012 ஆம் ஆண்டு அதிபராக இருந்த பிரான்காயிஸ் ஹாலண்டே மீது மாவுப் பொட்டலம் வீசப்பட்டது. அதேபோல், கடந்த 2016 ஆம் ஆண்டு பொருளாதாரத் துறை அமைச்சராக இருந்த இமானுவேல் மேக்ரோன் மீது முட்டை வீசப்பட்டது. டிசம்பர் 2016ல் அப்போதைய பிரதமர் மேனுவல் வால்ஸ் மீது மாவுப் பொட்டலம் வீசப்பட்டது. கடைசியாகக் கடந்த 2017 ஆம் ஆண்டு பிரதமர் பிரான்காய்ஸ் ஃபிலான் மீது மாவு வீசப்பட்டது.


உலகம் முழுவதுமே பல்வேறு நாடுகளிலும் இதுபோன்று தலைவர்கள் மீது முட்டை, தக்காளி, மை, செருப்பு என வீசும் பழக்கம் பரவலாக இருக்கிறது.


2018ல் ஈராக்கில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் ஜூனியர் புஷ் மீது அடுத்தடுத்து ஷூ வீசப்பட்டது. ஆனால் அது அவர் மீது படவில்லை. இந்தியாவிலும் கூட சீக்கிய இளைஞர் ஒருவர் நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் மீது ஷூ வீசிய சம்பவம் நடந்திருக்கிறது.