கோவிட் பெருந்தொற்றிற்கு பிறகு மனிதர்களின் சராசரி வாழ்நாள் வெகுவாக குறைந்துவிட்டதாக ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைகழகம் நடத்திய ஆய்வின் மூலமாக தெரியவந்துள்ளது. 


2020ம் ஆண்டுக்கான அதிகாரப்பூர்வ இறப்பு பதிவுகளின் அடிப்படையில் ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா மற்றும் சிலி போன்ற 29 நாடுகளில் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வு முடிவுகள் சர்வதேச தொற்றுநோயியல்  இதழில் வெளியிடப்பட்டது. அதன்படி ஆய்வு நடத்தப்பட்ட 29 நாடுகளில் 27 நாடுகளில் 2020ம் ஆண்டு சராசரி வாழ்நாள் எண்ணிக்கை குறைந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மருத்துவத்துறையில் ஏற்பட்ட முன்னேற்றத்தின் காரணமாக சராசரி ஆயுட்காலம் பல வருடங்களாகவே அதிகரித்து வந்த வண்ணம் இருந்த நிலையில் இருந்த நிலையில் தற்போது குறைந்துள்ளது. 


2015ம் ஆண்டு ஏற்கெனவே குறிப்பிட்ட வகை காய்ச்சல் பரவியதன் காரணமாக சராசரி வாழ்நாள் எண்ணிக்கையில் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் 2015ம் ஆண்டைக் காட்டிலும் 2020ம் ஆண்டில் 15 நாடுகளை சேர்ந்த பெண்களும், 10 நாடுகளை சேர்ந்த ஆண்களும் குறைவான சராசரி வாழ்நாளைக் கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது.




ஸ்பெயின், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ், இத்தாலி, பெல்ஜியம் போன்ற மேற்கத்திய ஐரோப்பிய நாடுகளில் ஆயுட்காலம் இவ்வளவு பெரிய அளவில் குறைந்தது இரண்டாம் உலகப்போரின்போதுதான் என இந்த ஆய்வில் பங்கேற்ற எழுத்தாளர் ஜோஸ் மானுவல் அபுர்டோ தெரிவித்தார். இந்த நாடுகளுக்கு சராசரி வாழ்நாளை அதிகரிக்க சராசரியாக 5.6 வருடங்கள் எடுத்துக்கொண்டதாகவும் ஆனால் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக அந்த முன்னேற்றம் தற்போது அழிக்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்தார். 


ஆய்வு நடத்தப்பட்ட 29 நாடுகளில் பெண்களின் சராசரி ஆயுட்காலத்தைவிட ஆண்களின் ஆயுட்காலம் குறைவதும் கண்டறியப்பட்டது. அதிலும் குறிப்பாக அமெரிக்க ஆண்களின் சரசாரி வாழ்நாள் 2019ஐக் காட்டிலும் 2.2 ஆண்டுகள் குறைந்துவிட்டது தெரியவந்துள்ளது. அதேபோல இரண்டாவதாக, லித்துவேனியா நாட்டை சேர்ந்த ஆண்களின் சரசாரி வாழ்நாள் 1.7 ஆண்டுகள் குறைந்துவிட்டது.




கொரோனா இறப்புகளைக் கணக்கிடுவதில் உலகம் முழுக்க குழப்பங்கள் இருந்ததை ஏற்றுக்கொள்வதாகவும் இன்னும் உண்மையான இறப்பு எண்ணிக்கை சரியாக தெரிந்திருக்கும்பட்சத்தில், சராசரி ஆயுள் குறைந்திருப்பது பல நாடுகளுக்கு இன்னும் பெரிய அதிர்ச்சியாக இருந்திருக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 
உலகளவில் கொரோனா  பெருந்தொற்றின்  தாக்கங்களை நன்கு புரிந்துகொள்ள குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் மற்றும் அனைத்து நாடுகளும் உண்மையான தரவுகளை வெளியிட வேண்டும் என்றும் ஆய்வாளர் கேட்டுக் கொண்டார்.


புதிதாக ஒரு குழந்தை பிறக்கிறதென்றால் தற்போதைய இறப்பு விகிதம் அவர்களின் வாழ்நாள் முழுவதும் தொடரும்பட்சத்தில் அது அவர்களுடைய  சராசரி ஆயுட்காலத்தையும் பாதிக்கும். ஆனால் இதன்மூலம் ஒவ்வொருவரின் உண்மையான ஆயுட்காலத்தை கணிப்பது சிரமம் என்பது குறிப்பிடத்தக்கது.