தாலிபன் கட்டுப்பாட்டில் ஆப்கன் வந்து இரு வாரங்களுக்கு மேல் ஆகிறது. 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு  வரை தாலிபன் கட்டுப்பாட்டில் ஆப்கன் இருந்தது. அதனை தொடர்ந்து அமெரிக்கா உதவியுன் ஆட்சி நடந்தது. சரியாக 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தாலிபன் கட்டுப்பாட்டில் ஆப்கன் வந்திருக்கிறது.


20 ஆண்டுகளாக தாலிபன் அமைப்பை கட்டுகோப்புடன் வைத்திருப்பதற்கு பணம் தேவை. அந்த பணம் தாலிபன்களுக்கு எப்படி கிடைத்தது என்னும் செய்திகள் தற்போது வெளியாக தொடங்கி இருக்கின்றன. போதை மருந்துதான் முக்கியமான வருமானம். ஆப்கானித்தானில் ஓபியம் மற்றும் ஹெராயின் பயிரடுதல் பெரும் வருமானத்தை கொடுத்தது. இதுதவிர அரபு நாடுகள் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து கிடைக்கும் பரிசளிப்புகள், முறைகேடான சுரங்கங்கள் மூலம் கனிமங்களை எடுத்து விற்பனை செய்தல் மற்றும் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் வரி வசூல் செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானம் ஆகியவற்றின் மூலமே தாலிபன் தாக்கு பிடித்திருக்கிறார்கள். இதன் மூலம் சில ஆண்டுகளில் அதிகபட்சம் 100 கோடி டாலர்கள் கூட வருமானம் ஈட்டியிருக்கலாம் என செய்திகள் வெளியாகி இருக்கின்றன. தோராயமாக ஆண்டுக்கு 30 கோடி டாலர் முதல் 160 கோடி டாலர் வரையில் இவர்களின் ஆண்டு வருமானம் இருக்ககூடும் என கணிக்கப்பட்டிருக்கிறது.


சர்வதேச அளவில் முறைகேடாக விற்கப்படும் ஒபியம் 95 சதவீதம் ஆப்கானில் இருந்தே அனுப்பபடுகிறது. சவுதி அரேபியா, யூ.ஏ.இ. கத்தார் ஆகிய நாடுகள் ஆண்டுக்கு மூலம் கிடைக்கும் நன்கொடை 50 கோடி டாலர் இருக்ககூடும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது.




தற்போதைய நிலைமை:  தாலிபான்கள் வெளியேறிய பிறகு அமெரிக்கா மற்றும் சர்வதேச நிதி அமைப்புகளின் உதவியுடன் ஆப்கன் வளர்ச்சி அடைந்து வந்தது. தாலிபான்கள் வெளியேறிய போது இருந்த பொருளாதாரத்தை விட தற்போது மூன்று மடங்கு பெரிய பொருளாதாரமாக ஆப்கன் இருக்கிறது.


நான்கில் மூன்று பங்கு சர்வதேச நிதி உதவியுடனே ஆபகன் வளர்ச்சி அடைந்து வந்தது. ஆனால் தற்போது தாலிபன்கள் ஆட்சியை பிடித்திருப்பதால், சர்வதேச சமூகம் நம்ப மறுக்கிறது. அமெரிக்கா 9.5 பில்லியன் டாலர் வங்கி சொத்துகளை முடக்கி வைத்திருக்கிறது, ஐஎம்எப் உதவியை நிறுத்தி இருக்கிறது. ஐரோப்பிய நாடுகளும் உதவியை நிறுத்தி இருக்கிறது.


இந்த இடைவெளியை சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் நிரப்பகூடும் என்னும் தகவல்கள் உலா வருகின்றன. ஆப்கானிஸ்தானில் போதுமான கனிமவளங்கள் இருப்பதால் அதற்காக இந்த நிதி உதவியை இந்த நாடுகள் செய்யக்கூடும் என சர்வதேச பத்ரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.


இந்த சூழலால் விலைவாசி கடுமையாக உயர்ந்திருக்கிறது. ஆப்கன் நாணய கடுமையாக சரிந்திருக்கிறது. பணம் இல்லாதால் வங்கிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் நாட்டில் பணப்பற்றாக்குறை கடுமையாக நிலவுகிறது. கிட்டத்தட்ட தற்போதைய வங்கி முறை திவாலும் நிலையில் இருப்பதாகவே தெரிகிறது. ஒரு வேளை வங்கிகள் திறந்தால் பணத்தை எடுப்பதற்காக மக்கள் கூட்டம் அதிகளவில் வரும் என்பதும் வங்கிகளை திறக்காததற்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. இதனால் வங்கிகள் திறக்காத்தால் பணப்பரிமாற்றம் நடக்கவில்லை. மக்களிடம் பணம் இல்லை. பெரும் அழிவு நடப்பதற்கான ஆரம்பகாலத்தில் இருப்பதாக அங்குள்ள மக்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர். நாட்டில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் ஏழ்மையில் இருக்கும்போது தற்போதைய சூழல் பெரும் வறட்சியும் கடுமையான சிக்கலையும் உருவாக்ககூடும்.




இந்த நிச்சயமற்ற சூழல் இருப்பதால் நூற்றுக்கணக்கான மக்கள் தரைமார்க்கமாக பாகிஸ்தான் மற்றும் ஈரானுக்கு செல்கின்றனர். பாகிஸ்தான் எல்லைகளை மூடுவதாக அறிவித்திருக்கிறது. இன்னும் விமான நிலையம் செயல்படவில்லை. இந்த நிலையில் இன்று (செப் 3) புதிய அரசு அமைய இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.


தாலிபன்கள் போரில் வென்று பொருளாதார நெருக்கடியை பரிசாக பெற்றிருக்கிறார்கள்.