இந்தாண்டின் தொடக்கத்தில் இருந்தே, உலகின் பல்வேறு பகுதிகளில் நில நடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இதனால், சில உலக நாடுகள் நிலைகுலைந்துள்ளதுடன், மற்ற நாடுகளும் பீதியடைந்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளான துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி அதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் சிக்கி 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மரணம் அடைந்தனர்.


நிலநடுக்கத்தால் அலறி அடித்து ஓடிய மக்கள்:


இதேபோல, கடந்த நவம்பர் மாதம் 3ஆம் தேதி, இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே அதிர வைத்தது. நேபாளத்தில் மையம் கொண்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4ஆக பதிவாகியிருந்தது.


இந்த நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டின் மிண்டானாவோ தீவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான தகவலை ஐரோப்பிய - மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ளது. நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.5ஆக பதிவாகியுள்ளது. இதை தொடர்ந்து, ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


சுனாமி எச்சரிக்கையால் பரபரப்பு:


இதுகுறித்து பிலிப்பைன்ஸ் நில அதிர்வு அமைப்பு வெளியிட்ட தகவலில், "உள்ளூர் நேரப்படி, பிலிப்பைன்ஸில் இன்று நள்ளிரவு (1600 GMT) சுனாமி தாக்கப்படலாம். அது, மணிக்கணக்கில் தொடரலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.


 






"ஒரு மீட்டர் (3 அடி) உயரமுள்ள சுனாமி அலைகள் ஜப்பானின் மேற்கு கடற்கரையை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1:30 மணிக்கு (சனிக்கிழமை 1630 GMT) தாக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என ஜப்பான் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவாகியுள்ளது என அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


கடந்த மாதம், தெற்கு பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.7ஆக பதிவானது. இதில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். கடந்த மே மாதம், ஜப்பான் மேற்கு மாகாணமான இஷிகாவாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில்  6.3 ஆக பதிவாகிய நிலநடுக்கம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இஷிகாவா மாகாணத்தில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் அதி தீவிர நிலநடுக்கம் ஏற்பட்டது. 


ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும்.  பசிபிக் பெருங்கடலில் தென்கிழக்கு ஆசியா தொடங்கி பசிபிக் படுகை முழுவதும் நீண்டுள்ள பகுதியில் எரிமலை வெடிப்புகள் மற்றும் பூகம்பங்கள் அதிகம் நிகழும். இந்த பகுதிகள் "Ring of Fire" என அழைக்கப்படுகிறது.