ஈரானின் செம்னன் பகுதியில், நேற்று சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளது. செம்னன் பகுதிக்கு தென்மேற்கே 27 கிலோ மீட்டர் தூரத்தில், 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த பூகம்பம் தாக்கியுள்ளது. இது, அணு ஆயுத சோதனையால் ஏற்பட்டதாக இருக்குமே என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.
அணு ஆயுதத்தை சோதித்ததா ஈரான்.?
ஈரானிற்கு தென்மேற்கில் 27 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள செம்னன் என்ற இடத்தில், நேற்று பூமிக்கடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில், 5.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளது. இந்த செம்னன் பகுதியில் தான், ஈரான் ராணுவத்தால் நடத்தப்படும் விண்வெளி மையம் மற்றும் ஏவுகணை மையமும் உள்ளன.
இதனால், ஈரான் ஒரு வேளை அணு ஆயுதத்தை சோதித்திருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இஸ்ரேலுடனான போர் 9-வது நாளை எட்டியுள்ள நிலையில், இந்த திடீர் பூகம்பம் ஏற்பட்டதால், அனைவருக்கும் தற்போது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை கூட, இரு நாடுகளும் பரஸ்பரம் தாக்குதல்களை நடத்தியுள்ளன.
இதனிடையே, தாங்கள் தாக்குதலுக்கு உள்ளாகும் அச்சுறுத்தல் உள்ளதால், அணு ஆயுத ஒப்பந்தம் குறித்து தற்போது எந்த பேச்சுவார்த்தையும் நடத்த முடியாது என ஈரான் தெரிவித்துவிட்டது. ஆனால், மறுபுறம் அமைதிப் பேச்சுவார்த்தையை உயிர்ப்புடன் வைத்திருக்க ஐரோப்பிய நாடுகள் முயற்சித்து வருகின்றன.
பூகம்பம் அதிகம் ஏற்படும் நாடுகளில் ஒன்று ஈரான்
எனினும், இந்த பூகம்பத்தால் குறைந்த அளவிலான சேதமே ஏற்பட்டுள்ளதாக ஈரானின் அதிகாரப்பூர்வ ஊடகம் தெரிவித்துள்ளது. அரேபிய மற்றும் யூரேசிய டெக்டோனிக் தகடுகளை ஒன்றிணைக்கும் ஆல்பைன்-இமயமலை நில அதிர்வு பெல்ட்டில் இருக்கும் காரணத்தால், உலகில் ஈரான் நில அதிர்வு செயலில் உள்ள நாடுகளில் ஒன்றாக இருக்கிறது.
ஈரானில் ஆண்டிற்கு சுமார் 2,100 பூகம்பங்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. அதில், சுமார் 16 பூகம்பங்கள் 5.0 ரிக்டர் அளவில் இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. 2006 முதல் 2015 வரை, ஈரானில் 96,000 பூகம்பங்கள் ஏற்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
இந்த பூகம்பத்திற்கு காரணம் அணு ஆயுத சோதனையா.?
பூமிக்கடியில் அணு ஆயுதங்களை சோதிக்கும் போது, அந்த வெடிப்பினால் டெக்டோனிக் அழுத்தம் ஏற்படுவதால் பூகம்பம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. ஆனால், இதற்கும், இயற்கையான பூகம்பத்தின் போது ஏற்படும் அதிர்வுக்கு வித்தியாசம் இருப்பதாக கூறப்படுகிறது. அந்த அதிர்வலைகளை சோதிக்கும் கருவியில் அதற்கான வித்தியாசம் தெரிந்துவிடும் என்றும், அதன்படி தற்போது ஏற்பட்ட பூகம்பம் இயற்கையானதுதான் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே கருத்தையே, அமெரிக்க புவியியல் ஆய்வு மற்றும் விரிவான அணு சோதனை தடை அமைப்பு ஆகியவையும் தெரிவித்துள்ளன. மேலும், இது அணு ஆயுத சோதனையாலே, ராணுவ நடவடிக்கைகளாலே ஏற்பட்டது என்ற யூகங்களையும் அவை மறுத்துள்ளன.