சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் மேற்குப் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவானது. இதனை ஐரோப்பிய மத்தியதரைகடல் நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் மையப்புள்ளி பூமிக்கு அடியில் 80 கிமீ தொலைவில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை.


கடந்த மாதம் 6ஆம் தேதி (செப்.6 2022) இதே சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 12க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். அந்த அதிர்ச்சியில் இருந்து அம்மாகாண மக்கள் மீள்வதற்குள் மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.


சீனாவைப் பொறுத்தவரையில் அந்நாட்டின் அதிகாரப்பூர்வ ஊடகமான சினுவா செய்தி நிறுவனமே தகவல்களை வெளியிடுமென்பதால் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் பற்றிய தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.


நிலநடுக்கம் எப்படி ஏற்படுகிறது?


நிலநடுக்கம் அல்லது பூகம்பம், அல்லது பூமியதிர்ச்சி,  என்பது பூமிக்கடியில் அழுத்தம் அதிகமாகி அதனால் சக்தி வெளியேற்றப்பட்டு, தளத்தட்டுகள் (Plates) நகர்வதனால் இடம்பெறும் அதிர்வைக் குறிக்கும். இந்த அதிர்வு நிலநடுக்கமானியினால் (seismometer) ரிக்டர் அளவை மூலம் அளக்கப்படுகிறது. 3 ரிக்டருக்கும் குறைவான நிலநடுக்கங்களை உணர்வது கடினமாகும். அதேவேளை 7 ரிக்டருக்கும் கூடுதலான அதிர்வுகள் பலத்த சேதத்தை ஏற்படுத்தக்கூடும்.


பூமியின் மேற்பரப்பு (Lithosphere) பெரும் பாளங்களாக அமைந்துள்ளது. இவை நகரும் பிளேட்டுகளாக இருக்கிறது. நிலப்பரப்பிலும், நீரின் அடியிலுமாக உள்ள இவற்றில் ஏழு பிளேட்டுகள் மிகப் பெரியதாகவும், குறைந்தது ஒரு டஜன் சிறிய பிளேட்டுகளும் உள்ளன. இந்த ஏழு பெரும் பிளேட்டுகளில் ஐந்து கண்டங்களும் பசிபிக் முதலிய சமுத்திரப் பகுதிகளும் அடக்கம். இந்தப் பிளேட்டுகள் சுமார் 80 கி.மீ. வரை தடிமன் கொண்டதாக இருக்கிறது. இதனடியில் பாறைகள் கொதிக்கும் குழம்பாக இருப்பதாலும், பூமியின் சுழற்சி வேகத்தில் இந்தப் பாறைக் குழம்பு நகர்வதாலும், மேலே இருக்கும் பிளேட்டுகள் ஒன்றுடன் ஒன்று உராய்வதுடன் நகர்ந்தும் செல்கிறது. இந்தப் பிளேட்டுகள் ஒரு வருடத்திற்கு ஒரு செ.மீ. முதல் சுமார் 13 செ.மீ. வரை நகர்கிறது. இது நமது உலக வேகத்திற்கு மிக நுண்ணியதாக இருந்தாலும் இந்த பிளேட்களின் லேசான உராய்வும் கூட பெரும் பூகம்பம் ஏற்படுத்தக் கூடியவை. ஒரு நிலநடுக்கம் நிலச்சரிவுகளையும் சிலசமயம் எரிமலை செயல்பாட்டையும் அதிகரிக்கச் செய்யும்.


நிலநடுக்கம் கடலுக்கு அடியில் மையம் கொண்டால் அது சுனாமியாக வெளிப்படும். 2004 டிசம்பரில் தமிழகம் முதன்முறையகா சுனாமி எனப்படும் ஆழிப் பேரலையில் கோர முகத்தைப் பார்த்தது என்பது நினைவுகூரத்தக்கது. எரிமலை வளையம் அல்லது பசிபிக் எரிமலை வளையம் (Pacific Ring of Fire) என்பது பசிபிக் பெருங்கடலைச் சுற்றி அமைந்துள்ள அடிக்கடி நிலநடுக்கம் மற்றும் எரிமலை கொந்தளிப்பு ஏற்படும் பகுதியாகும். குதிரை லாட வடிவ அமைப்பிலுள்ள இதன் நீளம் 40,000 கிமீ ஆகும். இந்த எரிமலை வளையத்தில் 472 எரிமலைகள் உள்ளன. உலகிலுள்ள உயிர்த்துடிப்புள்ள எரிமலைகளில் 50 விழுக்காடு இங்கு உள்ளன. உலகின் 90% நிலநடுக்கங்களும் 81% பெரிய நிலநடுக்கங்களும் இப்பகுதியிலேயே ஏற்படுகின்றன.