இந்தாண்டின் தொடக்கத்தில் இருந்தே, உலகின் பல்வேறு பகுதிகளில் நில நடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இதனால், சில உலக நாடுகள் நிலைகுலைந்துள்ளதுடன், மற்ற நாடுகளும் பீதியடைந்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளான துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி அதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் சிக்கி 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மரணம் அடைந்தனர்.


உலக நாடுகளை உலுக்கும் நிலநடுக்கம்:


இதேபோல, கடந்த நவம்பர் மாதம் 3ஆம் தேதி, இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே அதிர வைத்தது. நேபாளத்தில் மையம் கொண்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4ஆக பதிவாகியிருந்தது. 2015ஆம் ஆண்டுக்கு பிறகு, நேபாளத்தில் ஏற்படும் மிக மோசமான நிலநடுக்கும் இதுவாகும்.


இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் இந்தியாவின் தலைநகரான டெல்லியிலும் எதிரொலித்தது. டெல்லி, உத்தரபிரதேசம், ஹரியானா ஆகிய மாநிலங்களிலும் எதிரொலித்தது. 


நேபாளத்தை தொடர்ந்து இலங்கையில் நிலநிடுக்கம்: 


இந்த நிலையில், இலங்கை அருகே இன்று சக்திவாய்ந்த நிலநிடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது. இலங்கை தலைநகர் கொழும்புவில் நிலநடுக்கம் அதிகம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கைக்கு தென்கிழக்கே 800 கிமீ தொலைவில் உள்ள இந்திய பெருங்கடலில் 10 கிமீ ஆழத்தில் நிலநடுக்கும் பதிவாகியிருப்பதாக இலங்கை புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.


இந்த நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எந்த ஆபத்தும் இல்லை என இலங்கை புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கை அருகே ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து, தமிழ்நாட்டு மக்களிடையே அச்சம் நிலவி வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்செந்தூர் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது அதேபோல, எந்த விதமான சுனாமி எச்சரிக்கையும் இதுவரை விடப்படவில்லை.