Worlds Largest Airport: 2.9 லட்சம் கோடி ரூபாய் செலவில் உலகின் மிகப்பெரிய விமான நிலையம் துபாயில் கட்டப்பட உள்ளது.


உலகின் மிகப்பெரிய விமான நிலையம்:


துபாயின் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ரஷீத் அல்-மக்தூம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், 34.85 பில்லியன் டாலர் மதிப்பிலான (இந்திய மதிப்பில் ரூ.2.9 லட்சம் கோடி) அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்தின் புதிய பயணிகள் முனையங்களுக்கான வடிவமைப்புகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். அல் மக்தூம் சர்வதேச விமான நிலையம் 26 கோடி பயணிகளைக் கையாளும் திறன் கொண்ட உலகின் மிகப்பெரிய விமான நிலையம் இருக்கும் என்று ஷேக் முகமது  பெருமிதம் பேசியுள்ளார்.






விமான நிலையத்தின் வசதிகள் என்னென்ன?


புதிய விமான நிலையாமனது துபாய் சர்வதேச விமான நிலையத்தை விட ஐந்து மடங்கு பெரியதாக இருக்கும். வரும் 10 ஆண்டுகளில் துபாய் சர்வதேச விமான நிலையத்தின் அனைத்து செயல்பாடுகளும் அல் மக்தூமுக்கு மாற்றப்படும். ஐந்து இணை ஓடுபாதைகளுடன், விமான நிலையம் 400 முனைய வாயில்களுக்கு இடமளிக்க உள்ளது. விமானத் துறையில் வேறு எங்கும் இல்லாத புதிய விமான தொழில்நுட்பங்கள் முதல் முறையாக இங்கு பயன்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 70 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் கட்டமைக்கப்படும் இந்த விமான நிலையத்தில் இருந்து, ஆண்டுக்கு 120 மில்லியன் டன் எடையிலான சரக்குகளை கையாளும் வசதிகள் உருவாக்கப்பட உள்ளன.


கட்டமைக்கப்படும் புதிய நகரம்: 


துறைமுகம், அதன் நகர்ப்புற மையம் மற்றும் அதன் புதிய உலகளாவிய வணிக மையம் ஆகியவற்றால், துபாயின் புதிய விமான நிலையம் உலகின் விமான நிலையமாக இருக்கும் என ஷேக் முகமது தெரிவித்துள்ளார். தெற்கு துபாய் விமான நிலையத்தைச் சுற்றி ஒரு முழு நகரம் உருவாக்கப்பட உள்ளது. 10 லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் அங்கு கட்டப்படும். உலகின் முன்னணி தளவாடங்கள் மற்றும் வான்வழி போக்குவரத்து சேவைகள் இங்கிருந்து செயல்படும் . எதிர்கால சந்ததியினருக்காக நாங்கள் ஒரு புதிய திட்டத்தை உருவாக்கி வருகிறோம், எங்கள் குழந்தைகள் மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கு தொடர்ச்சியான மற்றும் நிலையான வளர்ச்சியை உறுதி செய்கிறோம் என துபாய் அரசு தெரிவித்துள்ளது. துபாயை உலகின் பிற பகுதிகளுடன் இணைக்கும் அனைத்து விமான சேவை நிறுவனங்களுடன் இணைந்து, முன்னணி விமான நிறுவனமான எமிரேட்ஸ் மற்றும் அதன் பட்ஜெட் நிறுவனமான ஃப்ளைதுபாய்க்கான புதிய மையமாக இந்த விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது.