Donald Trumps Inauguration: அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்க உள்ள நிகழ்ச்சியின், விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்பு விழா
கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில், முன்னாள் அதிபரும், தொழிலதிபருமான டொனால்ட் ட்ரம்ப் அபார வெற்றி பெற்றார். இதைதொடர்ந்து, இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக நாளை அவர் பதவியேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே திட்டமிட்டுள்ளபடி, இந்த பதவியேறு விழாவானது ஒரு பிரமாண்ட பேரணியுடன் தொடங்க உள்ளது. இந்நிலையில், விழாவானது எங்கு? எப்போது? தொடங்கும், நேரலையில் எங்கு காணலாம்? போன்ற விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
பிரமாண்ட பேரணி:
ஜனவரி 19 ஆம் தேதி, ஆர்லிங்டன் தேசிய கல்லறையில் உள்ள அறியப்படாத சிப்பாயின் கல்லறையில் மலர் வளையம் வைக்கும் விழா நடைபெறும். இதைத் தொடர்ந்து, ட்ரம்ப் வாஷிங்டன், டி.சி.யில் உள்ள கேபிடல் ஒன் அரீனாவில் MAGA “வெற்றிப் பேரணியை” நடத்துகிறார். இந்த பேரணி, ஆதரவாளர்களை உற்சாகப்படுத்துவதையும், டிரம்பின் “அமெரிக்காவே முதன்மை” என்ற கோட்பாட்டை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. பேரணியைத் தொடர்ந்து மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் இரவு உணவிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பதவியேற்பு விழா நாளின் நிகழ்ச்சிகள்:
- பதவியேற்பு விழா நடைபெற உள்ள நாளை காலையில் ட்ரம்ப் தனது மனைவி மெலனியா, மகன்கள் எரிக் மற்றும் பரோன், மகள் இவான்கா மற்றும் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் உடன் சேர்ந்து, வெள்ளை மாளிகைக்கு அருகில் உள்ள செயின்ட் ஜான்ஸ் எபிஸ்கோபல் தேவாலயத்தில் நடைபெறும் தனியார் பிரார்த்தனையில் கலந்துகொள்ள இருக்கின்றனர்
- பிரார்த்தனையை தொடர்ந்து பதவிக்காலம் முடிவடைய உள்ள அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோருடன் வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் தேநீர் அருந்துவார்.
- அங்கிருந்து விடைபெற்று அமெரிக்க துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜே.டி.வான்ஸுடன் இணைந்து, ட்ரம்ப் பதவியேற்பு விழாவுக்காக கேபிடல் கட்டிடத்திற்கு செல்வார்.
- ட்ரம்பின் பதவியேற்பு விழாவானது இந்திய நேரப்படி, இரவு 10.30 மணிக்கு தொடங்க உள்ளது
- தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் டொனால்ட் ட்ரம்பிற்கு அமெரிக்க அதிபராக பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்
- பதவியேற்பு விழாவைத் தொடர்ந்து ஒரு தொடக்க உரை நடைபெறும்,. அதில், அடுத்த நான்கு ஆண்டுகளில் அமெரிக்க மக்களுக்காக செய்ய தான் என்ன திட்டுமிட்டிருக்கிறேன் என்பதை ட்ரம்ப் விளக்குவார்
- அடுத்ததாக பென்சில்வேனியா அவென்யூவில் அதிபரின் அணிவகுப்பும் நடைபெறும். இதில் சுமார் 7,500 பேர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- aணிவகுப்பை தொடர்ந்து அதிபர், துணை அதிபர், செனட் தலைவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களுடன், தொடக்க விழாக்களுக்கான கூட்டு காங்கிரஸின் கமிட்டி (JCCIC) வழங்கும் கொண்டாட்ட மதிய விருந்துக்காக அமெரிக்க தலைநகரில் உள்ள சிலை மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்
- இதையடுத்து வெள்ளை மாளிகையில் உள்ள அதிபருக்கான ஓவல் அலுவலகத்திற்கு சென்று, நிர்வாக உத்தரவுகளுக்கான கோப்புகளில் கையொப்பமிடலாம்
- தொடர்ந்து, ஜனவரி 21ம் தேதி காலை 11 மணியளவில் வாஷிங்டன் தேசிய கதீட்ரலில் தேசிய பிரார்த்தனை சேவை நடைபெறும். இது பதவியேற்பு கொண்டாட்டங்களின் அதிகாரப்பூர்வ முடிவைக் குறிக்கிறது.
நேரலையை எங்கு காணலாம்?
பதவியேற்பு விழா, உலகளாவிய அணுகலுக்காக பல்வேறு தளங்களில் நேரடியாக ஒளிபரப்பபட உள்ளது. அதன்படி, ஏபிசி, என்பிசி மற்றும் சிஎன்என் போன்ற முக்கிய அமெரிக்க அடிப்படையிலான செய்தி சேனல்கள் பதவியேற்பு விழாவை நேரடியாக பல்வேறு தளங்களில் ஸ்ட்ரீமிங் செய்ய உள்ளன. ஃபாக்ஸ் நியூஸ், எம்எஸ்என்பிசி, பிபிசி மற்றும் அல் ஜசீரா உள்ளிட்ட முக்கிய நெட்வொர்க்குகள் நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்ப உள்ளன.
பதவியேற்புக்கான இடத்தில் மாற்றம்:
அமெரிக்க அதிபர்கள் பாரம்பரியமாக கேபிடல் கட்டிடத்தின் வளாகத்தில் தான் பதவியேற்பார்கள். ஆனால், நாளை கடுமையான குளிர் நிலவ வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளதால், கடைசி நேரத்தில் பதவியேற்பு விழாவானது கேபிடல் ரோட்டுண்டாவிற்குள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க 22,000 டிக்கெட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. ஆனால், புதிய அறிவிப்பின்படி விழா நடைபெறும் கட்டிடத்திற்குள் வெறும் 600 பேர் மட்டுமே பங்கேற்க முடியும். ஆதரவாளர்கள் வாஷிங்டனின் கேபிடல் ஒன் விளையாட்டு அரங்கில் இருந்து நிகழ்வ கண்டுகளிக்கலாம் எனவும், பதவியேற்ற ப்றகு ஆதரவாளர்களை சந்திப்பேன் என்றும் உறுதி அளித்துள்ளார். விழாவில் இசைநிகழ்ச்சியில் முக்கிய அங்கம் வகிக்கும் என கூறப்படுகிறது.
சிறப்பு விருந்தினர்கள்:
பதவியேற்பு விழாவில் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் உடன், கோடீஸ்வரர்களான எலான் மஸ்க், ஜெஃப் பெசோஸ் மற்றும் மார்க் ஜுக்கர்பெர்க், சீன சமூக ஊடக நிறுவனமான டிக்டோக்கின் தலைவரான ஷோ செவ் கலந்துகொள்வார்கள் என்று அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் அதிபர்களான பில் கிளிண்டன், ஜார்ஜ் டபிள்யூ. புஷ் மற்றும் பராக் ஒபாமா ஆகியோர் கலந்துகொள்ள இருக்குஇன்றனர். இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியும் இந்த விழாவில் பங்கேற்க உள்ளார்.