ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த ஆண்டு நடக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட டிரம்ப் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், குற்ற வழக்கில் டிரம்ப் கைதாகி இருப்பது உலக அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது.
தலைவலியாக மாறிய சம்பவம்:
கடந்த 2016 ஆம் ஆண்டு, ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த சம்பவம் ட்ரம்புக்கு பெரிய தலைவலியாகவும், அவரது அரசியல் எதிர்காலத்தையே பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது.
குற்ற வழக்கில் சிக்கிய முதல் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் ஆவார். குற்ற வழக்கு பதிவு செய்ததை தொடர்ந்து முதல்முறையாக மக்கள் மத்தியில் பொதுக்கூட்டத்தில் பேசிய டிரம்ப், பல திடுக்கிடும் தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
மூன்றாம் உலக போர் குறித்து பேசிய அவர், பைடன் அரசாங்கத்தின் கீழ் உலகம், அணு ஆயத மூன்றாம் உலகப் போரை எதிர்கொள்ளும் வாய்ப்பு உள்ளது என்றும் தற்போதைய அமெரிக்க அரசு நாட்டை அழித்து வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், "அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவோம் என பல்வேறு நாடுகள் வெளிப்படையாக மிரட்டி வருகின்றன.
நான் அதிபராக பதவி வகித்தபோது, மற்ற நாடுகள் இதுபோன்று பேசியதில்லை. இது தொடர்பாக ஆலோசனை செய்தது இல்லை. இது பைடன் நிர்வாகத்தின் தலைமையின் கீழ் முழுமையான அணுசக்தி மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும். நம்பினாலும் நம்பாவிட்டாலும் நாம் அதிலிருந்து வெகு தொலைவில் இல்லை.
பைடன் மீது சரமாரி குற்றச்சாட்டு:
ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அதிபர் ஜோ பைடனின் கீழ் அமெரிக்கா இப்போது குழப்பத்தில் உள்ளது. நமது பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருகிறது. பணவீக்கம் கட்டுக்குள் இல்லை. சீனாவுடன் ரஷ்யா இணைந்துள்ளது. நம்ப முடிகிறதா? சவுதி அரேபியா ஈரானுடன் இணைந்துள்ளது.
சீனா, ரஷியா, ஈரான், வட கொரியா ஆகியவை இணைந்து அச்சுறுத்தும் மற்றும் அழிவுகரமான கூட்டணியாக உருவாகியுள்ளது. என்னுடைய தலைமையில் இது ஒருபோதும் நடந்திருக்காது" என்றார்.
உக்ரைன் போர் குறித்து பேசிய அவர், "நான் உங்கள் அதிபராக இருந்திருந்தால் இது ஒருபோதும் நடந்திருக்காது. ரஷியாவும் உக்ரைனை தாக்காது. அந்த உயிர்கள் அனைத்தும் காப்பாற்றப்படும். அந்த அழகான நகரங்கள் அனைத்தும் அப்படியே இருந்திருக்கும். நமது நாணயம் வீழ்ச்சியடைந்து வருகிறது. விரைவில் உலகத் தரமாக இருக்காது. இது 200 ஆண்டுகளில் நமது மிகப்பெரிய தோல்வியாக இருக்கும்" என்றார்.
டொனால்ட் ட்ரம்ப் மீது ஏற்கனவே பல பெண்கள் பாலியல் புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ ஆதாரங்களும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.