ஆப்பிள் நிறுவனம் தனது ஒட்டுமொத்த உற்பத்தியின் பெரும் பகுதியை இந்தியாவிற்கு மாற்ற திட்டமிட்டிருந்த நிலையில், இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தை நிறுவ வேண்டாம் என ஆப்பிள் நிறுவன சிஇஓ டிம் குக்கிடம், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐ ஃபோன் உற்பத்தியில் கலக்கும் இந்திய தொழிற்சாலை

செல்ஃபோன் என்றாலே முதன்மையாக இருப்பது ஐ ஃபோன் தான். தரத்திலும் சரி, விலையிலும் சரி, டாப் அது தான். உலக அளவில் மக்களிடம் அதிக மவுசு கொண்டது ஐ ஃபோன் என்றே கூறலாம். ஒரு முறை ஐ ஃபோனை பயன்படுத்தும் வாடிக்கையாளர், அதன் பிறகு வேறு ஃபேன்களுக்கு மாறுவதில்லை. இந்த அளவிற்கு மக்களை கவர்ந்துள்ள ஐ ஃபோனை தயாரித்துவரும் ஆப்பிள் நிறுவனம், தனது பெரும்பாலான உற்பத்திக்கு சீனாவையே நம்பியுள்ளது.

ஆனாலும், இந்தியாவில் ஐ ஃபோன்களை தயாரித்து வரும் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் பெங்களூரு தொழிற்சாலை, விரைவில் செயல்படத் தொடங்கும் என்றும், அதிகபட்சமாக சுமார் 2 கோடி ஐ ஃபோன்களை தயாரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் சுமார் 70 சதவீத ஏற்றுமதிக்கான உற்பத்திக்கு, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் ஐ ஃபோன் விநியோகச் சங்கிலிதான் பங்களிப்பை கொடுத்துவருகிறது. இது ஒட்டுமொத்த வெளிநாட்டு ஏற்றுமதியில் 50 சதவீதத்திற்கு நெருக்கமாக உள்ளது.

உலக அளவில், மொத்த ஐ ஃபோன் உற்பத்தியில், இந்தியா 20 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை வழங்கி வருகிறது. அதே நேரம், இந்திய சந்தைகளிலும ஆப்பிள் நிறுவனத்தின் வளர்ச்சி ஸ்திரமாக வளர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 

மொத்த உற்பத்தியை இந்தியாவுக்கு மாற்ற ஆப்பிள் திட்டம்

ஏற்கனவே ஆப்பிள் நிறுவனத்திற்கு பெரும் ஆதரவை இந்தியா வழங்கி வரும் நிலையில், அந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த உற்பத்தியையும் இந்தியாவிற்கு கொண்டுவர, ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியானது.

ஆப்பிள் நிறுவனம், அதன் பெரும்பாலான உற்பத்திக்கு தற்போது சீனாவையே நம்பியுள்ளது. அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தகப் போர் முற்றிய நேரத்தில், உற்பத்தியை இந்தியாவிற்கு மாற்றுமாறு ஆப்பிள் நிறுவனத்திற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்பட்டது.

அதனால், சீனாவை நம்பியிருப்பதை குறைக்கும் வகையில், இந்தியாவிலேயே மொத்த ஐ ஃபோன் உற்பத்தியையும் மேற்கொள்ள ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டு வருவதாக கூறப்பட்டது.

அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப் - ஆப்பிள் சிஇஓ-விற்கு எச்சரிக்கை

இந்நிலையில், தற்போது அதற்கு நேர்மாறாக, ஆப்பிள் நிறுவனத்தை இந்தியாவில் தொடங்காதீர்கள் என, ஆப்பிள் சிஇஓ டிம் குக்கிடம், ட்ரம்ப் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து கூறியுள்ள ட்ரம்ப், “டிம் குக்குடன் ஒரு சின்ன பிரச்னை ஏற்பட்டதாகவும், அவரிடம், நீங்கள் என நண்பர், நான் உங்களை மிகவும் நன்றாகவே நடத்துகறேன், ஆனால் நீங்கள் பல பில்லியன் டாலர்களை இந்தியாவில் முதலீடு செய்கிறீர்கள். இந்தியா முழுவதும் கட்டிடங்கள் கட்டுவதாக கேள்விப்பட்டேன். நீங்கள் இந்தியாவில் கட்டிடம் கட்டுவதை நான் விரும்பவில்லை“ என்று தெரிவித்ததாக கூறியுள்ளார்.

மேலும், “இந்தியாவை கவனித்துக்கொள்ள விரும்பினால், நீங்க இந்தியாவில் கட்டிடம் கட்டலாம். ஆனால் நீங்கள் அமெரிக்க நிறுவனம். இந்தியாவில் கட்டிடம் கட்டக் கூடாது. ஏனென்றால், இந்தியா உலகத்திலேயே அதிக வரி விதிக்கும் நாடுகளில் ஒன்று. அதனால், இந்தியாவில் உங்கள் பொருட்களை விற்பது மிகவும் கடினம்“ எனவும் டிம் குக்கிடம் கூறியதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அதோடு, நீங்கள் பல வருடங்களாக சீனாவில் கட்டிய எல்லா தொழிற்சாலைகளையும் நாங்கள் பொறுத்துக்கொண்டுள்ளோம். ஆனால் தற்போது இந்தியாவல் கட்டுவதை நாங்கள் விரும்பவில்லை. இந்தியா தங்களைத் தாங்களே கவனித்துக் கொள்ளட்டும். நீங்கள் அமெரிக்காவை பாருங்கள் என்று டிம் குக்கை, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் நண்பன் என்று கூறிக்கொள்ளும் ட்ரம்ப், இப்படி இந்தியாவில் நடக்கும் நல்ல விஷயத்தை தடுக்கலாமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை, இந்தியா - பாகிஸ்தான் சண்டையை தான் நிறுத்தியதாக ட்ரம்ப் கூறியதை இந்தியா மறுத்ததால், பழி வாங்க இப்படி செய்கிறாரோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.