அமெரிக்காவில், அதிபர் ட்ரம்ப்புடன் ஏற்பட்ட மோதலையடுத்து, எலான் மஸ்க் புதிய கட்சியை தொடங்கியுள்ளார். இது குறித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, அவர் மஸ்க்கை கிண்டல் செய்துள்ளார். அவர் என்ன கூறினார் என்பதை தற்போது பார்க்கலாம்.

எலான் மஸ்க்கை கிண்டலடித்த ட்ரம்ப்

உலக பணக்காரரும், தொழிலதிபருமான எலான் மஸ்க் ‘அமெரிக்க கட்சி‘ என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். இது குறித்து, எலானின் முன்னாள் நண்பரும், அமெரிக்க அதிபருமான ட்ரம்ப்பிடம் கருத்து கேட்கப்பட்டது. அது குறித்து பேசிய அவர், மஸ்க்கின் இந்த முடிவை அபத்தமாகவே பார்ப்பதாக தெரிவித்தார்.

தேர்தலில் எங்கள் குடியரசுக் கட்சி அபார வெற்றி பெற்றது. ஜனநாயகக் கட்சி தோல்வியை சந்தித்தது. ஆனாலும், அமெரிக்காவில் இரு கட்சி முறையே தொடர்ந்து வருகிறது என்று கூறிய அவர், மூன்றாவது கட்சியை தொடங்குவது குழப்பத்தையே ஏற்படுத்தும் என்று தெரிவித்தார்.

மேலும், மூன்றாவது கட்சி எல்லாம் அமெரிக்க அரசியலில் எடுபட்டதே இல்லை, அதனால், மஸ்க் மகிழ்ச்சியாக செயல்படலாம் எனவும், அந்த கட்சியை வைத்துக்கொண்டு ஜாலியாக விளையாடலாம் என்றும் கிண்டலடித்துள்ளார் ட்ரம்ப்.

ட்ரம்ப் வெளியிட்ட பதிவு என்ன.?

இந்த விவகாரம் தொடர்பாக, ட்ரம்ப் தனது சமூக வலைதளத்தில் ஒரு பதிவையும் போட்டுள்ளார். அதில், எலான் மஸ்க் தனது கட்டுப்பாட்டை முழுவதும் இழந்துவிட்டார், அவரை பார்த்தால் எனக்கு பரிதாபமாக இருக்கிறது என்று கூறியுள்ளார். மேலும், கடந்த 5 வாரங்களாக எலான் மஸ்க் தனது தடம் மாறி பயணித்து வருகிறார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

3-ம் கட்சியாக வந்தவர்கள் வென்றதில்லை, One Big Beautiful Bill மசோதா உண்மையில் ஒரு சிறந்த மசோதா தான், ஆனால் அனைவரும் மின்சார கார்களை வாங்க வேண்டும் என்ற விதியை நாங்கள் ரத்து செய்துவிட்டதால், எலான் மஸ்க்கின் திட்டத்திற்கு அது எதிராக இருக்கிறது என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.

மேலும், அவரது திட்டத்திற்கு தொடக்கத்திலிருந்தே நான் எதிர்ப்பு தெரிவித்து வந்தேன்.. இனி மக்களுக்கு என்ன விருப்பமோ அதை வாங்கலாம்.. பெட்ரோல், ஹைப்ரிட் அல்லது பிற தொழில்நுட்ப வாகனங்களை அவர்கள் வாங்கலாம், ஆனால் மஸ்க்கிற்கு அது பிடிக்கவில்லை, குறுகிய காலத்தில் அனைவரும் மின்சார கார்களை வாங்க வேண்டும் என்று அவர் விரும்புவதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.

அதோடு, தனது நண்பர் ஒருவரை நாசா தலைவராக நியமிக்க வேண்டும் என்று மஸ்க் விரும்பியதாகவும், ஆனால், அவர் ஜனநாயகக் கட்சி ஆதரவாளர் என்பதால் தாங்கள் எதிர்த்ததாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க மக்களை பாதுகாப்பதே எனது முதல் பொறுப்பு என்று ட்ரம்ப் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ட்ரம்ப் வெளிப்படையாக இப்படி எல்லாவற்றையும் கூறியுள்ளதால், இருவருக்கும் இடையேயான மோதல் உச்சகட்டத்திற்கு செல்லும் நிலையே ஏற்பட்டுள்ளது. இதற்கு தீர்வு என்ன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.