Donald Trump: அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பிற்கு எதிரான 34 குற்றச்சாட்டுகளும் உண்மை என,  அமெரிக்க நீதிமன்றம் அறிவித்துள்ளது. அந்நாட்டு வரலாற்றில் குற்றவியல் தண்டனை பெற்ற முதல் முன்னாள் அமெரிக்க அதிபர் என்ற மோசமான வரலாற்றில் இடம்பெற்றுள்ளார். ஆனால், அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதற்கான பரப்புரையில் ஈடுபட எந்த தடையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


டிரம்ப் குற்றவாளி என அறிவிப்பு:


டிரம்பிற்கு எதிரான சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில், அவர் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் உண்மை என நியூயார்க் நடுவர் மன்றம் அறிவித்துள்ளது. ஐந்து மாதங்களில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அதில் வென்று மீண்டும் வெள்ளை மாளிகையை கைப்பற்ற டிரம்ப் தீவிரமாக களமாடி வருகிறார். இந்த சூழலில் தான், பணமோசடி வழக்கில் டிரம்ப் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு இருப்பது அவருக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இந்த வழக்கில் ஜுலை 11ம் தேதி தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


மேல்முறையீடு செய்ய திட்டம்:


ஆபாச நட்சத்திரமான ஸ்டோர்மி டேனியல்ஸை அமைதிப்படுத்துவதற்காக  வழங்கப்பட்ட பண விவரத்தை,  மறைப்பதற்காக வணிகப் பதிவுகளை பொய்யாக்கிய 34 குற்றச்சாட்டுகளிலும் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார். ஒவ்வொரு குற்றச்சாட்டிற்காகவும் அவருக்கு தலா 4 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்படமால் என கூறப்படுகிறது. இதனிடையே, தீர்ப்பை எதிர்த்து டிரம்ப் மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,நான் ஒரு அப்பாவி,  உண்மையான தீர்ப்பு தேர்தல் முடிவில் வாக்காளர்களிடமிருந்து வரும். நடந்து முடிந்துள்ள விசாரணை மோசமான மற்றும் அவமானகரமானது. அரசியல் எதிரியை காயப்படுத்த பைடன் நிர்வாகம் இதை செய்துள்ளது” என சாடினார்.


பைடன் தரப்பு வரவேற்பு:


டிரம்ப் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதை அதிபர் பைடன் தரப்பு வரவேற்றுள்ளது. இதுதொடர்பான அறிக்கையில்,”சட்டத்திற்கு மேலானவர்கள் என யாரும் இல்லை. முன்னெப்போதும் இல்லாத அளவில் நமது ஜனநாயகத்திற்கு டிரம்ப் ஆபத்தானவராக இருக்கிறார். டொனால்ட் டிரம்ப் எப்போதுமே தனது ஆதாயத்திற்காக சட்டத்தை மீறுவதால் விளைவுகளை சந்திக்க மாட்டார் என்று தவறாக நம்புகிறார். ஆனால் இன்றைய தீர்ப்பு அமெரிக்க மக்கள் ஒரு எளிய யதார்த்தத்தை எதிர்கொள்வதை மாற்றவில்லை.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அமெரிக்க அதிபர் தேர்தல்:


விஸ்கான்சினில் உள்ள மில்வாக்கியில் ஜுலை 15ம் தேதி குடியரசுக் கட்சியின் தேசிய மாநாடு நடைபெற உள்ளது. அதில், நவம்பர் 5ம் தேதி நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ஜோ பைடனுக்கு எதிரான,  கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக டிரம்ப் முறையாக பரிந்துரைக்கப்பட உள்ளார். அதற்கு நான்கு நாட்களுக்கு முன்னதாக ஜூலை 11-ம் தேதி ட்ரம்பின் தண்டனை விவரம் அறிவிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.