USA Tariff: புதிய வரிகள் ரத்து செய்யப்பட்டால் பெரும் பேரழிவை ஏற்படுத்தும் என, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சருஇத்துள்ளார்.
”பேரழிவை ஏற்படுத்தும்” என ட்ரம் வார்னிங்
உலக நாடுகள் மீது புதியதாக அமல்படுத்தப்பட்ட வரிகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உறுதிபடுத்தியுள்ளார். ஒருவேளை அவற்றை நீக்கினால், அது நாட்டிற்கு பேரழிவை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளார். சர்வதேச வர்த்தகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள ட்ரம்பின் புதிய வரி அறிவிப்புகளில் பெரும்பாலானவை சட்டவிரோதமானது என, அமெரிக்க நீதிமனறம் தீர்பளித்த அடுத்த சிறிது நேரத்திலேயே அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். அதேநேரம், தற்போதைய சூழலில் இந்த வரி அப்படியே தொடருமெனவும், ட்ரம்ப் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ட்ரம்ப் சொல்வது என்ன?
நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக தனது சமூக வலைதள கணக்கில் ட்ரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், “ஒரு உயர் பாகுபாடான மேல்முறையீட்டு நீதிமன்றம் நமது வரிவிதிப்புகளை நீக்க வேண்டும் என்று தவறாகக் கூறியது, ஆனால் இறுதியில் அமெரிக்கா வெற்றி பெறும் என்பது அவர்களுக்குத் தெரியும். இந்த வரிவிதிப்புகளை நீக்கினால் அது நம்மை நிதி ரீதியாக பலவீனப்படுத்தும், நமது உற்பத்தியாளர்கள், விவசாயிகள் மற்றும் மற்ற அனைவரையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் மிகப்பெரிய வர்த்தக பற்றாக்குறைகள், நியாயமற்ற வரிகள் மற்றும் பிற நாடுகள், நண்பர் அல்லது எதிரிகளால் விதிக்கப்படும் வரி அல்லாத வர்த்தக தடைகளை அமெரிக்கா இனி பொறுத்துக்கொள்ளாது. இந்த முடிவு ஏற்றுக்கொள்ளப்பட்டால், அமெரிக்காவையே அழித்துவிடும். தொழிலாளர்களுக்கு உதவவும், 'அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட' பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களை ஆதரிக்கவும் இந்த வரிகள் சிறந்த கருவியாகும்” என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற தீர்ப்பில் இருப்பது என்ன?
ட்ரம்பின் வரி விதிப்பு நடவடிக்கைகள் சட்டவிரோதமானது என மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதில், டிரம்ப் வரிகளை விதிப்பதன் மூலம் தனது அதிகாரத்தை மீறியதாகவும், அதன் மூலம் வர்த்தக பேச்சுவார்த்தைகளில் வெளிநாட்டு அரசாங்கங்களுக்கு அழுத்தம் கொடுப்பதில்பயன்படுத்தி வருகிறார் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், அறிவிக்கப்பட்ட தேசிய அவசரநிலையின் போது அதிபருக்கு பரந்த அதிகாரங்கள் இருந்தாலும், அந்த அதிகாரங்களில் வெளிப்படையாக வரிகளை விதிப்பது அல்லது இதுபோன்ற பரஸ்பர வரிகளை விதிப்பது ஆகியவை அடங்காது என்று நீதிமன்றம் விளக்கமளித்துள்ளது.
அதேநேரம், உச்சநீதிமன்றத்தினை அணுக ட்ரம்ப் நிர்வாகத்திற்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதால், தற்போதைய சூழலில் வரிகள் ஏதும் ரத்து செய்யப்படாது. குறிப்பாக இந்தியா மீது விதிக்கப்பட்டுள்ள 50 சதவிகித வரிகள் அப்படியே தொடர உள்ளது. மற்ற நாடுகளை போன்று இந்தியாவிற்கு 25 சதவிகிதம் வரி விகிதத்தோடு, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதற்காக அபராதமாக கூடுதலாக 25 சதவிகிதம் வரியும் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.