அமெரிக்க அதிபராகப் பதவியேற்றதில் இருந்தே ட்ரம்ப் பல்வேறு அதிரடிகளை அரங்கேற்றி வருகிறார். அந்த வகையில் பல்வேறு நாடுகள் மீது உச்சபட்ச அளவிலான வரி விகிதத்தை விதித்தார். இது பல்வேறு விமர்சனங்களுக்கு வித்திட்டாலும் தன்னுடைய அறிவிப்பை ட்ரம்ப் விலக்கிக் கொள்ளவில்லை.

Continues below advertisement

இந்த நிலையில் அமெரிக்காவின் வரி வருமானத்தில் இருந்து ஒவ்வொரு அமெரிக்கருக்கும் குறைந்தபட்சமாக 2 ஆயிரம் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.77 லட்சம்) பகிர்ந்து அளிக்கப்படும் என்று டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். எனினும் உயர் வருமானம் கொண்டவர்களுக்கு மட்டும் இந்தத் தொகை அளிக்கப்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  

உலகின் பணக்கார நாடு அமெரிக்கா

இதுகுறித்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை அன்று) தனது "ட்ரூத் சோஷியல்" தளத்தில் பதிவிட்ட ட்ரம்ப், ‘’வரி விகிதங்கள் அமெரிக்காவை உலகின் பணக்கார மற்றும் மிகவும் மதிக்கப்படும் நாடாக மாற்றி உள்ளன. இதனால் வரி வருவாயில் இருந்து ஒவ்வொரு அமெரிக்கருக்கும் குறைந்தது 2,000 டாலர்கள் செலுத்தப்படும். ஆனால்அதிக வருமானம் ஈட்டுபவர்களை இந்தத் திட்டத்தில் இருந்து விலக்குகிறோம். வரி விகிதங்களை எதிர்ப்பவர்கள் முட்டாள்கள்" என்றும் விமர்சித்தார்.

Continues below advertisement

ஒப்புதல் தேவை

எனினும் வரி வருவாயை நேரடியாக குடிமக்களுக்கு விநியோகிக்கும் அமெரிக்க அதிபரின் யோசனைக்கு காங்கிரஸின் ஒப்புதல் தேவைப்படும். இந்த ஆண்டு தொடக்கத்தில், மிசௌரி குடியரசுக் கட்சி செனட்டர் ஜோஷ் ஹாவ்லி இதேபோன்ற ஒரு திட்டத்தை முன்மொழிந்தார். அதன்படி, பெரும்பாலான அமெரிக்கர்களுக்கும் அவர்களது குழந்தைகளுக்கும் 600 டாலர்கள் அளவுக்கு வரி தள்ளுபடி செய்யப்படும் என்றும் ட்ரம்ப்பின் வரி விகிதங்கள் இந்த நாட்டிற்குத் திரும்பக் கொண்டுவரும் செல்வத்தில் இருந்து அமெரிக்கர்கள் பயனடைவர் என்று தெரிவித்தார்.

கடனை அடைக்க வரி வருவாய்

முன்னதாக தனியார் நாளிதழுக்கு கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் அளித்த பேட்டியில், நிர்வாகத்தின் முக்கிய முன்னுரிமை, வரி வருவாயை வைத்து 38.12 டிரில்லியன் டாலர் தேசிய கடனை அடைக்க பயன்படுத்துவதுதான் என்று தெரிவித்து இருந்தார்.

வெளியாகாத முழு விவரங்கள்

எனினும் இந்தத் தொகை எப்படி, எப்போது விநியோகிக்கப்படும் என்ற விவரங்களையோ, வருமான வரம்புகளுக்கு என்னென்ன அளவுகோல்கள் இருக்குமா என்பதை ட்ரம்ப் தெளிவுபடுத்தவில்லை.