நெடுஞ்சாலையில் மணிக்கு 144 கிலோ மீட்டர் வேகத்தில் காரில் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஜோடியை ஜெர்மன் போலீசார் கைது செய்துள்ளனர்.
ஓடும் காரில் தோழியுடன் சில்மிஷம்:
கார் என்பது போக்குவரத்திற்கான ஒரு வாகனம் என்பதை தாண்டி, ஒரு பொழுதுபோக்கு அம்சகாமவும் மாறியுள்ளது. சாலை விதிகளை பின்பற்றாமல் அதிவேகமாக ஓட்டுவது, ஆபத்தான முறையில் தறிகெட்டு செலுத்துவது போன்ற பழக்கங்கள் அதிகரித்துள்ளது. இதனால் ஆங்காங்கே பல விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் நிகழ்ந்து வருகின்றன. இந்நிலையில் தான், நெடுஞ்சாலையில் அதிவேகமாக காரை ஓட்டியபடியே உடன் சேர்ந்து பயணித்த தோழியுடன் ஒருவர் சில்மிஷத்தில் ஈடுபட்ட அதிர்ச்சிகர சம்பவம் ஜெர்மனியில் அரங்கேறியுள்ளது.
தறிகெட்டு ஓடிய கார்:
ஜெர்மனியில் பிரபலமான ஆட்டோபான் (Autobahn) நெடுஞ்சாலையில் கார் ஒன்று அதிவேகத்தில் பயணித்துக் கொண்டிருந்தது. மணிக்கு சுமார் 144 கிலோமீட்டர் வேகத்தில் சென்ற கார் சாலையில் அங்கும் இங்கும் அலைபாய்ந்தபடி கட்டுப்படின்றி செல்ல பிற வாகனங்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. இதனை கண்டு ஆத்திரமடைந்த சிலர் காரை பின்தொடர்ந்து சென்றுள்ளனர். அப்போது, காரை அதிவேகமாக செலுத்தியபடியே அதில் இருந்த பெண்ணுடன் ஒருவர் உல்லாசமாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து காவல்துறைக்கும் உடனடியாக தகவல் தெரிவித்துள்ளனர்.
மடக்கி பிடித்த போலீசார்:
கார் பயணித்த வழியை கண்காணித்த போலீசார், சர்வீஸ் லேனில் மடக்கி பிடிக்க தயாராகினர். கார் குறிப்பிட்ட இடத்திற்கு வந்ததும் தடுத்து நிறுத்திய போலீசார், உள்ளே இருந்த இருவரையும் கைது செய்தனர். விசாரணையில் டோர்ட்முண்ட் நோக்கி சென்ற ஃபோர்ட் காரை ஓட்டி வந்த 37 வயது ஆண், தனது 33 வயது தோழியுடன் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதற்காக 5 ஆண்டுகள் தண்டனை கிடைக்கும் வகையில் அந்த நபர் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். அவர்களின் இந்த பொறுப்பற்ற செயலால் அதிருஷ்டவசமாக சாலையில் எந்த விபத்தும் ஏற்படவில்லை. இருப்பினும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஜெர்மன் சட்டம் சொல்வது என்ன?
ஜெர்மன் தண்டனைச் சட்டம் 315B-ன் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. குற்றம் உறுதி செய்யப்பட்டால் 5 ஆண்டுகள் வரை தண்டனை நிச்சயம் கிடைக்கும் என கூறப்படுகிறது. ஜெர்மனியில் உள்ள ஆட்டோபான் நெடுஞ்சாலை என்பது உலக அளவில் மிகவும் பிரபலமான சாலையாகும். இது ஒரே நேர்கோட்டில் மிகவும் நீளமான சாலையாக உள்ளது. இந்த சாலையில் பயணிக்க வரையறுக்கப்பட்ட வேகம் எதுவும் கிடையாது. எனினும், சாலை முழுக்க அப்படி பயணிக்க முடியாது. சில இடங்களில் குறிப்பிட்ட அளவு வேகத்தில் மட்டுமே பயணிக்க முடியும்.
கடந்த ஜூலை மாதம் ஒரு வாகன ஓட்டி இந்த சாலையில் அனுமதிக்கப்பட்ட அளவான 124 மைல் வேகத்திற்கு பதிலாக, மணிக்கு 200 மைல் வேகத்தில் ஓட்டி சிக்கினார். அவருக்கு இந்திய மதிப்பில் ரூ. 92,000 அபராதம் விதிக்கப்பட்டதோடு, மூன்று மாதம் வாகனம் ஓட்ட தடையும் விதிக்கப்பட்டது.