பேரம் பேசி பொருளை வாங்குவது அல்லது பேரம் பேசுவது என்பது பொதுவான விஷயமாகிவிட்டது. நாம் எந்தப் பொருள்களை வாங்குவதற்குக் கடைகளுக்குச் சென்றாலும் விற்பனையாளர்கள் தெரிவிக்கும் விலையை நிச்சயம் ஏற்றுக்கொள்ள மாட்டோம். முதலில், அவர்களிடம் பேரம் பேசி விலையை குறைக்கத்தான் முயல்வோம். இல்லை கொஞ்சம் கூடுதலாகப் பணம் கொடுத்து இரண்டு பொருள்களாக வாங்க நினைப்போம். ஒரு சிலர் பேரம் பேசித்தான் பொருள்களை வாங்கிச்செல்ல வேண்டும் என்ற மனநிலையில் இருப்பார்கள். ஆனால் இங்கு சற்று வித்தியாசமாக நாய் ஒன்று சாலையோரங்களில் ஆப்பிள்களை விற்பனை செய்யும் ஒரு பெண்மணியிடன் பேரம் பேசிவிட்டு இன்னொரு கர்ப்பிணி நாயுடன் செல்லும் வேடிக்கையான வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டதோடு வைரலாகியும் வருகிறது.






இன்றைய சூழலில் மனிதர்கள் நாய்களோடு வாக்கிங் செல்வது மட்டும் இன்றி அவற்றைக் கடைகளுக்குச் சென்றுப் பொருள்களை எப்படி வாங்க வேண்டும்? என்று கற்றுக்கொடுத்து விடுகின்றனர். அப்படித்தான் நாய் ஒன்று அதன் வாயில் கூடைப்பையுடன் ஆப்பிள் வாங்குவதற்காகக் கடைக்கு சென்றுள்ளது. அங்கு சாலையோரத்தில் ஆப்பிள் விற்பனை செய்துக்கொண்டிருந்த பெண்ணிடம் கூடையைக் கொடுத்ததுமே, அப்பெண் பணத்தினை எடுத்துக்கொண்டு அதற்கான ஆப்பிள்களை பையில் போட்டுக்கொடுத்தார்.


ஆனால் அவர் கொடுத்த ஆப்பிள்களின் எண்ணிக்கையில்  திருப்தியடையாத அந்த நாய், கூடையில் வைத்திருந்த ஆப்பிள்களைத் தொட்டு மேலும் ஆப்பிள் வேண்டும் என்று அதன் சைகை மொழியில் பேரம் பேசியது. அப்பெண்ணுக்கும் கொஞ்ச நேரம் புரியாமல் இருந்தாலும் பின்னர் நாய் என்ன சொல்லவருகிறது என்று புரிந்துகொண்டதோடு, ஒரு ஆப்பிளை கூடுதலாக பையில் வைத்தார். இதனையடுத்துதான் அந்த நாய் கூடையினை எடுத்துக்கொண்டு கர்ப்பிணியாக இருக்கும் மற்றொரு நாயுடன்  மகிழ்ச்சியாய் சென்றுவிட்டது. சாலையோர வியாபாரிடம் பேரம் பேசிய வேடிக்கையான நாயினை வீடியோ எடுத்த ஒருவர் அதனை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.



ஐந்தறிவு ஜீவனான செல்ல நாய் செய்த ரசிக்கத்தக்க இந்த வேடிக்கையான வீடியோ கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதையடுத்து இதுவரை 2.7 மில்லியன் பார்வையாளர்கள் இரண்டு நாள்களில் இந்த வீடியோவைப் பார்த்து ரசித்துள்ளனர். மேலும் இந்த வீடியோவைப்பார்த்தவர்கள் உங்களது தேவையானது கிடைத்துவிட்டதா? இனி மகிழ்ச்சியோடு செல்லுங்கள் என்பது போன்ற பல்வேறு கருத்துக்களை டிவிட்டர் வாயிலாக பகிர்ந்து வருகின்றனர்.