துருக்கி நாட்டில் உள்ள டூஸ்ஸில் உள்ள ஒரு தேசிய பூங்காவில் மயக்க தேனை சாப்பிட்டு போதையில் விழுந்துக்கிடந்த கரடிக்குட்டி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.


போதையின் உச்சத்தில் கரடி :


போதை தேன் என்பது துருக்கியில் டெலி பால் என அழைக்கப்படும் போதை தேனை சாப்பிட்ட கரடி ஒன்று போதையில் அந்த பகுதில் விழுந்துகிடந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி இஸ்தான்புல்லிற்கு கிழக்கே 130 மைல் தொலைவில் உள்ள Düzce என்னும் உயிரியல் பூங்காவில் கரடி குட்டி ஒன்று விசித்திரமான நிலையில் அமர்ந்திருப்பதை வன விலங்கு பராமரிப்பாளர்கள் கண்டுள்ளனர். மயங்கி விழுந்த அந்த கரடியை மீட்டு அது அங்கிருந்த ட்ரக்கில் ஏற்றப்பட்டது. வெளியாகியுள்ள வீடியோவில் கரடிக்குட்டி  சரிந்து அமர்ந்திருக்கிறது. திசைதிருப்பப்பட்ட நிலையில் அந்த கரடிக்குட்டி விசித்திரமாக பார்ப்பது , குழப்பத்தில் இருப்பதை காண முடிகிறது. இதற்கு காரணம் அந்த பகுதியில் கிடைக்கும் மேட் ஹனி என்னும் மாயத்தேன்தான். அதனை கரடி சாப்பிட்டதால்தான் இப்படியான விசித்திர மனநிலையில் இருந்திருக்கிறது.







மாயத் தேன் :


மேட் ஹனி என்பது பார்பதற்கு சிகப்பு நிறத்தில் , குறைந்த கசப்பு சுவையுடன் இருக்கும். இந்த தேன் குறிப்பிட்ட வகை ரோடோடென்ட்ரான் பூக்களிலிருந்து வருகிறது.  இந்தப் பூக்களின் தேனில் கிரேயனோடாக்சின் என்ற நியூரோடாக்சின் உள்ளதால்  இதனை குறைந்த அளவு உட்கொள்ளும் போது மருந்தாக செயல்படுகிறது. அதிக அளவில் உட்கொண்டால் அதீத போதை ஏற்படுவதுடன் வாந்தி, வயிற்றுப்போக்கு, சுய நினைவு இழப்பு போன்ற பல உபாதைகளையும்  ஏற்படுத்தும் என்கின்றனர். இதனை உட்கொள்ளும் தேனீக்களும் கூட அதீத உயரம் வரை பறக்குமாம் . போதை தெளிந்த பின்னர்தான் கூடு திரும்பும் என்கின்றனர்.துருக்கி மருத்துவமனையில் மாய தேன் சாப்பிட்டவர்கள் அடிக்கடி மருத்துவமனைக்கு வருவதும் இயல்புதான் என்கின்றனர்.




 


இயல்புநிலைக்கு திரும்பிய கரடி :


சுயம் மறந்த கரடிக்குட்டியை அங்கிருந்த பூங்கா ரேஞ்சர்கள் கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.சிகிச்சை அளிக்கப்பட்டு பெயர் வைக்கப்படாத கரடிக்குட்டிக்கு அவர்கள் பால்கிஸ் என பெயரும் வைத்துள்ளனர்.கரடிக்குட்டி தற்போது நலமுடன் இருப்பதாகவும், கூடிய விரைவில் அது காட்டுக்குள் விடுவிக்கப்படுவார் என்றும் அமைச்சகம் ட்வீட் செய்துள்ளது.