பெண்கள் மீதான வன்முறைகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்த போதும், பாகிஸ்தானில் பெண்கள் மீதான வன்முறைச் சம்பவங்களின் பதிவுகளின் எண்ணிக்கை கடந்த 3 ஆண்டுகளாக குறைந்து வருவதாக பாகிஸ்தானின் செய்தி நிறுவனம் ஒன்று கூறியுள்ளது.


‘தி நியூஸ்’ என்ற பாகிஸ்தான் செய்தி நிறுவனம், பாகிஸ்தான் ஒன்றிய அரசின் மனித உரிமைகள் அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் அடிப்படையில் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மனித உரிமைகள் அமைச்சகம், கடந்த மூன்று ஆண்டுகளாக 70 சதவிகித அளவில், பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் குறைந்துள்ளதாக கூறியுள்ளது.



எனினும், பெண்கள் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டிருக்கும் ஹெல்ப்லைன்களில் இருந்து வரும் புள்ளி விவரங்கள் வேறு சித்திரத்தைத் தருகின்றன. இந்தத் தரவுகள் பெண்களின் உரிமைகள் மோசமாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும், குறிப்பாக பஞ்சாப், சிந்த் முதலான மாகாணங்களில் பெண்கள் மீது அதிகளவில் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்து வருவதாக காட்டுகின்றன.


சமீப காலங்களில், பெண்கள் மீதான வன்முறைச் சம்பவங்களின் அதிகரிப்பால் பாகிஸ்தான் அரசு மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் பொது இடங்களில் பெண்கள் மீது நிகழ்ந்துள்ளன.


கடந்த ஜூலை மாதம், பாகிஸ்தானில் முன்னாள் அரசு அதிகாரியின் மகள் நூர் முகத்தம் கொடூரமாகத் தாக்கப்பட்டு, அதன் பிறகு தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். கொலை செய்த குற்றவாளியைக் கைது செய்வதிலும் பாகிஸ்தான் காவல்துறை சுணக்கம் காட்டியது. இது சர்வதேச அளவில் திரும்பிப் பார்க்கப்பட்டு, பாகிஸ்தான் அரசுக்கும், சமூகத்திற்கும் பெண்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள் மீது வெளிச்சம் காட்டியது. 



நூர் முகதம் கொலையாளி


 


கடந்த வாரம் பாகிஸ்தானின் சுதந்திர தினத்தின் போது, சுமார் 400 ஆண்களால் டிக்டாக் பெண் பிரபலம் ஒருவர் கடுமையாகத் தாக்கப்பட்டார்.  நூர் முகத்தம் முதல் தற்போது தாக்கப்பட்ட டிக்டாக் பிரபலம் வரை, பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகளவில் நடைபெற்று வருகின்றன. சுதந்திர தினத்தின் போது, லாகூர் பகுதியில் ரிக்‌ஷாவில் பயணித்துக் கொண்டிருந்த பெண் மீது வன்முறை நிகழ்ந்ததும் பலராலும் சுட்டிக் காட்டப்படுகிறது. லாகூர் பெண் மீதான வன்முறைச் சம்பவம் பற்றிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. இதில் ஒரு ஆண் ரிக்‌ஷா மீது குதித்து, பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவது பலராலும் கண்டிக்கப்படுகிறது.


பாகிஸ்தான் நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான நிலைமை மோசமடைந்து கொண்டிருக்க, அரசு தரப்பில் இப்படியான தரவுகள் வெளியாகியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. பெண்களுக்குப் பாதுகாப்பு மறுப்பது, குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்காமல் இருப்பது, பெண்களின் நடமாட்டத்தைச் சமூகமே தீர்மானிப்பது என பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் குறையாமல் இருப்பதைச் சுட்டிக்காட்டி, பல்வேறு சமூக ஆர்வலர்கள் அரசை எதிர்த்து குரல் கொடுத்து வருகின்றனர்.