ஆயிரம் பன்றிகள் இறக்க காரணமான அமெரிக்கப் பெண்ணை கைது செய்து சிறையில் அடைத்தது காவல்துறை. சமூக வலைதளத்தில் நெட்டினசன்களின் உரையாடலால் காவல் துறை கவனத்திற்கு சென்ற சம்பவத்தால் பன்றிப் பண்ணையினை பராமரித்து வந்த 33 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் சாக் கவுண்டி மாகாணத்தில் உள்ள ஒரு பன்றிகள் பண்ணையில் சுமார் ஆயிரம் பன்றிகள் சரியான பராமரிப்பு இல்லாமல் இறந்துள்ளது. முறையான நேரத்தில் குடிநீரும், உணவும் அளிக்கப்படாததால் தான் பன்றிகள் இறந்து விட்டதாக குற்றச்சாட்டு சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் மிகவும் அதிகமாக விவாதிக்கப்பட்டது. இதனை அடுத்து அங்கிருந்த விலங்குகள் நலவாரியம் தானகவே முன் வந்து, காவல் துறையுடன் அந்த பன்றிகள் பராமரிப்பு பண்ணைக்குச் சென்றுள்ளனர். அங்கு இருந்த இரண்டு கொட்டகையில் சுமார் 1,000 பன்றிகள் இறந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்த பண்ணையினை பராமரித்து வந்த 33 வயதான பெண்ணை அழைத்து விசாரித்ததில், பன்றிகள் இறந்ததிற்கும் தனக்கு எந்த தொடர்பும் இல்லை, நான் தற்போது விடுப்பில் இருக்கிறேன் என தெரிவித்துள்ளார். ஆனால் பன்றிகள் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியது. பரிசோதனையின் அடிப்படையில் பன்றிகள் இறந்து ஒரு வாரத்திற்கும் மேலாக, ஆகிறது என்றும், அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் பன்றிகள் இறந்திருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 33 வயதான அந்த பண்ணைப் பராமரிப்பு பெண் பொய் சொல்வதும், பன்றி இறக்க காரணமாக இருந்துள்ளார் என்பதும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இதனால் பன்றிப் பண்ணையினை பராமரித்து வந்த பெண்ணை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் கைது செய்யப்பட்டதை அடுத்து சமூக வலைதள வாசிகள் அந்தப் பெண்ணையும், தண்ணீர் இல்லாமல், உணவு இல்லாமல் 90 டிகிரி வெப்பநிலையில் உடல் அழுகும் வரை சிறை படுத்த வேண்டும் என ஒரு தரப்பும், நினைத்துப் பார்க்கவே மோசமாக உள்ள சித்திரவதையான தண்டனை என்பது மனித குலத்திற்கே அறுவருப்பானது மற்றும் தீயது என ஒரு தரப்பினரும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த பன்றிப் பண்ணையின் உரிமையாளரான கோரி ஏ.ஜி.ஆர் எனும் தனியார் நிறுவனம், காவல் துறையினைரிடம் இறந்த பன்றிகளின் ஒட்டுமொத்த மதிப்பு என்பது, ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் அமெரிக்க டாலர்கள் வரும் என தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்