சாவிலும் இணைபிரியா தம்பதி:


அமெரிக்காவில் வயதான தம்பதி ஒன்று அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தைச் சேர்ந்தவர் ஹூபர்ட் மேலிகோட். இவரது மனைவி ஜூன். இவர்களுக்கு திருமணமாகி 79 ஆண்டுகள் ஆகிறது. இருவருக்கும் 3 பிள்ளைகள், 7 பேரப் பிள்ளைகள், 11 கொள்ளுப் பேரன், பேத்திகள் உள்ளனர்.


இந்நிலையில் அண்மையில் ஜூன் உடல் நிலை சரியில்லாமல் போயுள்ளார். இதனால் அவரை குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை தாளாத ஹூபர்ட் சில நேரங்களிலேயே அவரும் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டார். உடனே குடும்பத்தினர் அவரையும் ஜூன் அனுமதிக்கப்பட்ட அதே மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இருப்பினும் இருவரும் சில மணி நேர வித்தியாசத்தில் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.


79 ஆண்டுகால இல்லறம்:


இது குறித்து ஹூபர்ட், ஜூன் தம்பதியின் மூத்த மகன் சாம் கூறுகையில், என் அப்பா, அம்மாவுக்கு திருமணமாகி 79 ஆண்டுகள் ஆகிவிட்டன. இருவருக்குமே 100 வயது கடந்த நிலையில் அண்மையில் என் அம்மா ஜூன் உடல்நிலை பாதிக்கப்பட்டார். அப்போது எனது தாயை ஓஹியோவில் உள்ள ஹாமில்டன் ஹாஸ்பைஸ் மருத்துவமனையில் சேர்த்தோம். இதனைப் பார்த்த என் தந்தையின் உடல்நலனும் பாதிக்கப்பட்டது. அவரால் அவரது மனைவி மருத்துவமனையில் கிடப்பதை காண பார்க்க முடியவில்லை.


சில நாட்களிலேயே அப்பாவையும் நாங்கள் அம்மா இருந்த மருத்துவமனையில் சேர்த்தோம். இருவருமே ஒரே அறையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஐந்து நாட்கள் அம்மா, அப்பா இருவருமே எந்த நினைவுமில்லாமல் இருந்தனர். நவம்பர் 30 ஆம் தேதி இரவு 9 மணிக்கு அப்பா உயிர் தூக்கத்திலேயே பிரிந்தது. அம்மாவைப் பார்த்து இதயம் நொறுங்கியே அவர் இறந்திருப்பார் என்று நாங்கள் நினைக்கிறோம். அப்பா இறந்து 20 மணி நேரத்தில் டிசம்பர் 1 அன்று அம்மாவும் இறந்தார். 


அப்பாவும் அம்மாவும் ஒன்றாக வாழ்ந்தனர். ஒன்றாகவே சென்றுவிட்டனர். எனக்கு வருத்தமாக இருந்தாலும் இதுபோன்ற பிராப்தம் எத்தனை பேருக்குக் கிடைக்கும் என்பதை நினைத்து நான் மகிழ்ச்சி கொள்கிறேன். அவர்கள் நிறைவாக வாழ்ந்தனர். இறைவனடியிலும் அவர்கள் ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்தனை செய்கிறேன். அம்மாவும் அப்பாவும் தங்கள் வாழ்நாளில் குடும்பத்தினை நேசித்து வாழ்ந்தனர். இறைவனுக்கு சேவை செய்து வாழ்ந்தனர் என்று சாம் கூறினார்.


20 வயதில் மலர்ந்த காதல்...


79 ஆண்டு இல்லற வாழ்வு; இறப்பிலும் கைகோர்த்த தம்பதிஹூபர்ட்டும் ஜூனும் கென்டக்கி நகரில் 1941 ஆம் ஆண்டு ஒரு தேவாலயத்தில் தான் முதன்முதலில் சந்தித்துள்ளனர். அப்போது ஜூனுக்கு வயது 19. ஓராண்டு கழித்து ஜூனுக்கு 20 வயது இருந்தபோது ஹூபர்ட் அவரிடம் தனது காதலை சொல்லியுள்ளார். அமெரிக்க கடற்படையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஹூபர்ட் விடுமுறைக்காக வந்தபோது ஜூனிடம் தனது காதலை சொல்லியுள்ளார். ஜூனைக் கண்டதுமே அவருக்கு இவர் தான் தனக்கு பொருத்தமான வாழ்க்கைத் துணையாக இருப்பார் என்று உளப்பூர்வமாக தோன்றியதாக ஹூபர்ட் ஒரு பேட்டியில் கூறியிருந்ததை அவரது மகன் சாம் நினைவு கூர்ந்தார்.




கடற்படை பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் ஹாமில்டன் ஓஹியோவுக்கு குடி பெயர்ந்தார். அங்கே டைபோல்ட் இன்க் என்றொரு தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியில் சேர்ந்துள்ளார். திருமணத்திற்குப் பின்னர் ஜூன் வேலைக்குச் செல்லவில்லை. தனது 3 பிள்ளைகளையும் கவனிக்கலானார். ஜூன் வீட்டை பராமரிப்பது, பெண் குழந்தைகளுக்கான ஆடைகள் தைப்பது, தோட்டத்தைப் பேணுவது, பதப்படுத்தப்பட்ட உணவுகளை செய்வது என்று பல்வேறு பணிகளையும் திறம்பட செய்யும் ஒரு பெண்ணாக இருந்துள்ளார்.


இந்த ஆண்டு ஜூன் மாதம் தான் இருவரும் தங்களின் 79 ஆவது திருமண நாளை கொண்டாடியுள்ளனர். அந்தக் கொண்டாட்டத்தின் போது அவர்களிடம் பலரும் நீண்ட, மகிழ்ச்சியான திருமண வாழ்விற்கு என்ன காரணம் என்று கோரியுள்ளனர். அப்போது இருவருமே நாங்கள் வாக்குவாதத்தில் ஈடுபட மாட்டோம் என்று கூறியுள்ளனர். இந்த ஜோடியின் மரணம் ஓஹியோ மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.