இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், அமெரிக்கர்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் செல்வதைத் தவிர்க்க வேண்டும் அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.


இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மகாராஷ்டிரா, டெல்லி, உத்தரப்பிரதேசம், தமிழ்நாடு, கேரள உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. இதில், சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


நாட்டில் கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு ஒரு  லட்சத்திற்கும் மேல் பதிவாகி வருவது அச்சத்தை ஏற்படுத்துகிறது. இதனால், இங்கிலாந்து உள்ளிட்ட சில நாடுகள் இந்தியாவில் பயணம் செய்ய பல்வேறு கெடுபிடிகளை விடுத்துள்ளது.


இந்நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், அமெரிக்கர்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் செல்வதைத் தவிர்க்க வேண்டும் அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.




இதுதொடர்பாக  அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் தெரிவிக்கையில், ‘இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால், அமெரிக்கர்கள் அங்கு செல்வதை தவிர்க்க வேண்டும். தடுப்பூசி போட்டிருந்தாலும் பயணம் செய்வது ஆபத்தை ஏற்படுத்தும். நோய்த் தொற்று பாதிப்பு ஏற்படவும் நோயைப் பரப்பும். எனவே, இந்திய சுற்றுப்பயணத்தை தவிர்க்க வேண்டும். கண்டிப்பாகவும், அவசியமாகவும் இந்தியாவிற்கு பயணிக்க வேண்டி இருந்தால் இந்தியா செல்லும் முன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்’ என அறிவுறுத்தியுள்ளது. 



சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதனையடுத்து, பல உலக நாடுகளுக்கு இந்த வைரஸ் வேகமாக பரவியது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடங்களில். இந்த தொற்றால் ஏராளாமான மக்கள் பாதிக்கப்பட்டனர். பல நாடுகளுக்கு பொருளாதார பிரச்னை ஏற்பட்டது.



கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு ஓராண்டு கடந்த நிலையிலும், தொற்று பரவல் குறையாமல் அதிகமாகி வருகிறது. தற்போது, பல நாடுகளில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது.


இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் உலகளவில் கொரோனா தொற்றால் 14 கோடியே 26 லட்சத்து 87 ஆயிரத்து 165 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்து 42 ஆயிரத்து 205 ஆக அதிகரித்துள்ளது.



குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 12 கோடியே 11 லட்சத்து 89 ஆயிரத்து 37 ஆக உள்ளது . ஒரு கோடியே 83 லட்சத்து 47ஆயிரத்து 144 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில்,  ஒரு லட்சத்து 81 ஆயிரத்து 40 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.




கொரோனா தொற்று பாதிப்பு பட்டியலில் இருக்கும் அமெரிக்காவில் புதிதாக 50 ஆயிரத்து 893 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரேநாளில் 472 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். 


கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்தியா 2வது இடத்திலும் பிரேசில் 3வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
 
 
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை நேற்று 1.50 கோடியை தாண்டியது குறிப்பிடத்தக்கது.