கொரோனா பற்றி உலகையே எச்சரித்த மருத்துவர் லி வென்லியாங்கின் 2ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. மருத்துவரின் கூற்றுகளை மறைக்கப் பார்த்த, அவர் மீதே தேசத் துரோகக் குற்றம் சாட்டிய சீனாவில் என்ன நடக்கிறது?


2 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்தான் (பிப்.7) கொரோனா நோய் குறித்து எச்சரித்த மருத்துவர் லி வென்லியாங், அதே தொற்றால் உயிரிழந்தார். 34 வயதான அவர், சீனாவில் உள்ள வுஹான் மத்திய மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். அவர் 2019 டிசம்பர் மாதம் தன்னிடம் சிகிச்சைக்கு வந்த சீன மக்கள் சிலரைப் பரிசோதித்தபோது வித்தியாசமாக உணர்ந்தார். சொல்லப்போனால், அவர்தான் முதன்முதலில் கொரோனா தொற்று வழக்கமான காய்ச்சல் மாதிரியான நோய் இல்லை என்று கண்டறிந்தார். 


அவர் உயர் அதிகாரிகளிடம் அதை எடுத்துக் கூறியபிறகும், சீன அரசு அதற்குச் செவிமடுக்கவில்லை. அவரிடம் வதந்திகளைப் பரப்புவது குற்றம் என்று கட்டாயப்படுத்தி எழுதி வாங்கியது. தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த லி வென்லியாங், ஜனவரி 10ஆம் தேதி தனக்கு இருமல் தொடர்ந்து ஏற்படுவதாக சீன சமூக வலைதளமான வெய்போவில் பதிவிட்டார். அடுத்த நாள் அவருக்குக் காய்ச்சல் ஏற்பட்டது. இரண்டே நாட்களில் அவரின் உடல் மோசமடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.


ஜனவரி 30ஆம் தேதி அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. எனினும் சிகிச்சை பலனளிக்காமல் 2020 பிப்ரவரி 7ஆம் தேதி பலியானார் லி வென்லியாங். அடுத்த 2 வாரங்களுக்குள்ளாக கொரோனா தொற்று உலகெங்கும் மளமளவெனப் பரவியது. அவர் இறந்தபின்னர் கடந்த 2 ஆண்டுகளில் உலகம் முழுவதும் 39 கோடி பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். 57 லட்சம் பேரை கொரோனா காவு வாங்கியுள்ளது.




300.99 கோடி தடுப்பூசி


2 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் தொடங்கிய கோவிட் 19 பெருந்தொற்று, உலகம் முழுக்கப் பரவி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. சீனாவில் தொற்று குறைந்து வருகிறது. 70 சதவீதம் பேருக்கு மேற்பட்ட மக்கள், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர் என்று சீன அரசு அறிவித்துள்ளது. 


சீனா, உலக சுகாதார நிறுவனத்துக்கு அளித்த தகவலின்படி கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் தேதியில் இருந்து 2022 பிப்ரவரி 4ஆம் தேதி வரை, கொரோனா தொற்றால் 1,39,891 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5,700 பேர் பலியாகி உள்ளனர். கடந்த ஜனவரி மாதப் புள்ளிவிவரத்தின்படி சீனாவில், 300.99 கோடி (3,009,901,519) தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 


சமூகப் பரவலால் பெருந்தொற்று ஒழியுமா?


எனினும் உருமாறிய கொரோனா தொற்று ஏற்பட்டு, அங்கு மீண்டும் மீண்டும் பரவலை உறுதி செய்கிறது. இதுகுறித்து சீனாவின் பிரபல தொற்று நோய் நிபுணர் வு சுன்யூ கூறும்போது, ''தடுப்பூசி செலுத்திக்கொண்டால் மட்டுமே தொற்றில் இருந்து 100 சதவீதம் தப்பிக்கலாம் என்னும் கூற்றில் உண்மையில்லை. அதேபோல சமூகப் பரவல் (herd immunity) மூலம் பெருந்தொற்றை முடிவுக்குக் கொண்டு வர நினைக்கலாம். ஆனால் கொரோனா தொடர்ந்து தன்னை உருமாற்றி, புதுப்பித்துக் கொண்டே வருவதால், இந்தக் கருத்தாக்கம் செல்லுபடி ஆகாது. 


சீனாவில் 70% கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்டாலும், மேற்குறிப்பிட்ட காரணங்களால் மக்கள் இன்னும் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். அண்மையில் தியான்ஜின் பகுதியில் திடீரெனத் தொற்று அதிகமானது. அங்கு தடுப்பூசி செலுத்திக்கொண்ட மக்களும் தொற்றுக்கு ஆளாகினர்.




சகிப்புத் தன்மையற்ற கொள்கை


ஆரம்ப காலத்தில் தடுப்பூசிகள் மூலம் எளிதாக கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்திவிடலாம் என்று நினைத்தோம். தடுப்பூசிகள் இருந்தாலும், விரிவான நடவடிக்கைகள் இல்லாமல் கொரோனாவை எளிமையாகக் கட்டுப்படுத்த முடியாது. அதனாலேயே கொரோனா தொற்று விவகாரத்தில் சகிப்புத் தன்மையற்ற கொள்கையை (zero-tolerance policy) கடைப்பிடிக்கிறோம். கட்டுப்படுத்தப்பட்ட, மூடப்பட்ட அமைப்பில் (closed loop) தொற்று எண்ணிக்கை மேலும் அதிகரிக்காமல் குறைகிறது. 


இந்தக் கொள்கை மூலமாகவே பிற நாடுகளைக் காட்டிலும் குறைவான தொற்று எண்ணிக்கையை சீனாவில் காண முடிகிறது. அமெரிக்காவில் 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தபோது, தொற்று முதன்முதலில் உருவான சீனாவில் 10 ஆயிரத்துக்கும் குறைவான மக்களே பலியாகி உள்ளனர். அதேபோல சமூக, பொருளாதார வளர்ச்சிக்கும் கொரோனா சகிப்புத் தன்மையற்ற கொள்கை பயன்படுகிறது'' என்று வு சுன்யூ தெரிவித்துள்ளார்.


 



வு சுன்யூ


எனினும் ஊடகச் சுதந்திரம் குறைவான, முறைப்படுத்தப்பட்ட செய்திகள் மட்டுமே வெளியாகும் சீனாவில், தொற்று எண்ணிக்கை வெளியுலகுக்குக் கொடுக்கப்பட்ட புள்ளிவிவரத்தைக் காட்டிலும் பல மடங்கு அதிகமாக இருக்கும் என்றே கூறப்படுகிறது.  


குளிர்கால ஒலிம்பிக்ஸ் 


சீனாவின் பெய்ஜிங் மாகாணத்தில் 2022ஆம் ஆண்டுக்கான குளிர்கால ஒலிம்பிக்ஸ் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி தொடங்கிய ஒலிம்பிக்ஸ், பிப்ரவரி 20ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அங்குள்ள வீரர்களுக்கு ரோபோக்கள் தண்ணீர், காஃபி மற்றும் உணவுகளைப் பரிமாற, தொழில்நுட்ப வசதி செய்யப்பட்டுள்ளது. ஒலிம்பிக்ஸ் விளையாட்டுக்காக பெய்ஜிங்கில் பயிற்சி பெற்ற 19 ஆயிரம் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 


ஃபிப்ரவரி 4ஆம் தேதி தொடங்கிய ஒலிம்பிக்ஸ் விளையாட்டுக்காக சுமார் 350 வீரர்கள், ஜனவரி 23ஆம் தேதியே வந்துள்ளனர். இதில் 100 வீரர்களுக்கும் மேலாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் கட்டாயத் தனிமைப்படுத்தப்பட்டனர். என்றாலும் தங்களுக்கு போதிய வசதிகள் செய்துகொடுக்கப்படவில்லை என்று வீரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 




மேலும் சிலர் மருத்துவ மற்றும் அறிவியல் காரணங்களைக் காட்டிலும் கலாச்சார மற்றும் அரசியல் காரணங்களுக்காகவே, தனிமைப்படுத்தல் விதிகள் அமல்படுத்தப்பட்டதாகவும் கூறியுள்ளனர். 


எழுந்த சர்ச்சைகள்


முன்னதாக சீனாவில் ஒலிம்பிக்ஸ் விளையாட்டு முழுமையான, பாதுகாப்பான, நெறிப்படுத்தப்பட்டதாக இருக்கும் என்று சீனா உறுதி அளித்திருந்தது. எனினும் 2 நாட்களிலேயே அந்த வாக்குறுதியை அரசு நிறைவேற்றவில்லை என்று விளையாட்டு வீரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். குளிர்காலத்தில் சூடான உணவுகளை வழங்காதது, சீனாவில் நிலவும் கடுமையான குளிரைத் தாங்கும் வகையில் போதிய வசதிகள் செய்யப்படாதது, கொரோனா தனிமைப்படுத்தல் விதிகள் காரணமாக வீரர்கள் இடர்ப்பாட்டைச் சந்தித்து வருகின்றனர். 


சீனாவில், -13 டிகிரி செல்சியஸ் குளிரில் பனிச்சறுக்கு விளையாட்டை விளையாடுமாறு ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த வீராங்கனை நிர்ப்பந்திக்கப்பட்டு, அந்த குளிர்நிலையிலேயே விளையாடி உள்ளார். 


கடந்த கோடைக்கால டோக்கியோ ஒலிம்பிக்ஸில், சுமார் 100 பேருக்குத் தொற்று ஏற்பட்ட நிலையில், குளிர்கால பெய்ஜிங் ஒலிம்பிக்ஸில் 435 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் தேசிய அளவிலான 142 விளையாட்டு வீரர்களும் அடக்கம். 




எல்லைகளில் கடும் கட்டுப்பாடு


எல்லைகளில் கடும் கட்டுப்பாட்டை விதித்துள்ள சீனா, வணிக மக்களுக்கும் அவர்களின் குடும்பத்துக்கும் குறைந்த அளவிலான விசாக்களையே அனுமதித்துள்ளது. அவ்வாறு வருபவர்கள் 3 வாரங்கள் வரை தனிமைப்படுத்தப்படுகின்றனர். உள்ளூர் மக்களுக்கும் தீவிரமான கொரோனா பரிசோதனைகள், அடையாள சரிபார்ப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. எங்கெல்லாம் கொரோனா தொற்று சற்று அதிகரிக்கிறதோ, அங்கெல்லாம் உள்ளூர்மட்ட அளவில், ஊரடங்குகள் விதிக்கப்படுகின்றன. 


உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தடுப்பூசி செயல்பாட்டின் போதாமை, அதீத மக்கள் தொகையால் அதிகரிக்கும் தொற்றூப் பரவல் அச்சம், மருத்துவமனைகளில் குறைவாக உள்ள வசதிகள் ஆகிய காரணங்களால், சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளன. 




வுஹானில் நடந்தது மீண்டும் பெய்ஜிங்கில் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளதாக ஹாங்காங் பல்கலைக்கழக வைராலஜி நிபுணர் ஜின் டாங் யான் தெரிவிக்கிறார்.


மருத்துவரிடமும் வழக்கறிஞரிடமும் பொய் சொல்லக்கூடாது என்பார்கள். கொரோனா விவகாரத்தில் உண்மையை மூடி மறைக்கலாம் என்று நினைத்த பல நாட்டு அரசுகள், பாதிப்பு அதிகமான பின்னர் இக்கட்டான சூழ்நிலைக்கு ஆளாகின. சீனாவும் அதற்கு விதிவிலக்கல்ல. உலக மக்களின் உயிர் சம்பந்தப்பட்ட விவகாரத்தில், அரசு வெளிப்படையாக நடந்து கொண்டால் மட்டுமே சர்ச்சைகள் அடங்கும்.