"மாற்றம் ஒன்றே மாறாதது", என்பதினை மெய்ப்பிக்கும் செயலாக கொலம்பிய அதிபர் தேர்தலில் தங்களுக்கு வேண்டிய மாற்றத்தினை தங்களின் வாக்குகளின் மூலமாக நிகழ்த்தியுள்ளனர் அந்நாட்டு மக்கள். கொலம்பிய வரலாற்றிலேயே இல்லாத வகையில் முதன்முறையாக இடதுசாரி கொள்கை கொண்ட தலைவரை தங்களது அதிபராக தேர்ந்தெடுத்துள்ளனர். கிட்டத்தட்ட 50.5 சதவீத வாக்குகளைப் பெற்று தற்போதைய செனட்டரும் பொருளாதார வல்லுநருமான 62 வயது கஸ்டாவோ பெட்ரோ (Gustavo petro) தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ரியல் எஸ்டேட் மில்லினியர் ருடால்ஃபோ ஹெர்னாண்டஸை (Rodolfo Hernandez) வீழ்த்தியிள்ளார்.



தன் மகளுடன் கஸ்டோவோ பெட்ரோ


அதிபரான கிளர்ச்சியாளர்


கஸ்டாவோ பெட்ரோ கொலம்பியாவின் முதல் இடதுசாரி இயக்கத்தை சேர்ந்த அதிபராவர். கொலம்பிய அதிபர் தேர்தல் வரலாற்றிலேயே அதிகமான வாக்கு சதவீதத்தினை பெற்றுள்ள இவர் முன்னாள் கொரில்லா போராளி என்பதும் கிளார்ச்சியாளர் என்பதும் கவனிக்கத்தக்கதாகும். தற்போது செனட் உறுப்பினாராக இருக்கும் பெட்ரோ மூன்றாவது முயற்சியில் தான் வெற்றி வாகையினை சூடியுள்ளார். தற்போது செயல்பாட்டில் இல்லாத M-19 எனும் கொரில்லாக் குழுவின் முன்னாள் உறுப்பினரான பெட்ரோ சிறை சென்று பின்னர் பொது மன்னிப்பினை பெற்றவர் என்பது கூடுதல் தகவல். அதன் தொடர்ச்சியாக அரசியலில் இருந்து கொண்டே பொருளாதாரத்திலும் ஈடுபாட்டுடன் செயல்பட்டு வந்துள்ளார்.


இதுவரையில் கொலம்பியாவின் ஆட்சியாளர்கள் அமெரிக்காவுடன் நெருக்கமான உறவினையே கையாண்டு வந்துள்ள நிலையில், அமெரிக்காவின் சித்தாந்தத்திற்கு எதிரான சித்தாந்தத்தினை தனது அடிப்படைக் கொள்கையாக கொண்டுள்ளார் காஸ்டாவோ பெட்ரோ.  அமெரிக்காவுடனான உறவினை எவ்வாறு கையாளப் போகிறார் பெட்ரோ என்பதினை பொருத்தே கொலம்பியாவின் எதிர்காலத்தினை நிர்மாணிக்க போகிறார் என்பதினை கணிக்க முடியுமென சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.



கொலம்பிய அதிபராக தேர்வாகியுள்ள கஸ்டாவோ பெட்ரோ மற்றும் துணை அதிபர் ஃபிரான்ஸியா மார்கஸ்


முதல் கருப்பின துணை அதிபர்


தென் அமெரிக்க நாடுகளிலேயே முதல் முறையாக கொலம்பியா-தான் கருப்பினத்தை சேர்ந்த வழக்கறிஞர் மற்றும் சுற்றுச்சூழல்வாதியான ஃபிரான்ஸியா மார்கஸை தங்களது துணை அதிபராக தேர்ந்தெடுத்துள்ளனர். நாட்டின் வளத்தினை கொள்ளையடிக்கும் சுரங்க மாஃபியாவிற்கு எதிரான இவரது செயல்பாட்டினால் அவர் மீது கொலைவெறி தாக்குதல் சில ஆண்டுகளுக்கு முன் நிகழ்த்தப்பட்டிருந்த நிலையில் இவர் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.


மாற்றத்தினை நோக்கி கொலம்பியா


தேர்தல் வெற்றிக்கு பின்னர் பேசிய கஸ்டாவோ பெட்ரோ ”தமது அரசு அனைவருக்குமான அரசு;  எதிர்க்கட்சியினருக்கு சமமரியாதையை வழங்கும் அரசாகவும் இருக்கும்” என தெரிவித்துள்ளார். மேலும், ”எப்போதுமே ஆரோக்கியமான பேச்சிற்கும், கொலம்பியாவை சிறந்த முறையில் கட்டமைப்பதற்கும் இணைந்து பங்காற்ற அதிபர் மாளிகைக்குள் சித்தாந்த வேறுபாடின்றி அனைத்து தரப்பினருக்கும் இடமுண்டு” என்றும் தெரிவித்துள்ளார். இத்தகைய கருத்து அவரின் எதிர்கால அரசியல் பார்வையை சொல்வது போல் அமைந்துள்ளது. அரசியல் ரீதியிலான துன்புறுத்தலோ சட்ட ரீதியிலான துன்புறுத்தலோ இந்த ஆட்சியில் இருக்காது என்றும், தெருவில் இறங்கி கொண்டாடும் மக்கள் நன்றாக கொண்டாடட்டும் அக்கொண்டாட்டங்களின் வாயிலாக அவர்கள் இதுநாள் வரை அனுபவித்து வந்த துன்பங்கள் இந்த வெற்றியின் மூலம் தவிடுபொடியாகட்டும் எனச் சொல்லி இருக்கிறார். நிச்சயம் தனது ஆட்சி மக்களுக்கான ஆட்சி தான் என்பதினை பறைசாற்றும் விதமாக இதனை அவர் கூறி இருக்கிறார் எனக் கருதப்படுகிறது.



வெற்றிக்கு பிறகு கொலம்பிய தேசியக் கொடியை உயர்த்திப் பிடிக்கும் ஆதரவாளர்கள்


பணவீக்கத்தாலும், போதைப் பொருளாலும், அதீத வன்முறைக் கலாச்சாரத்தாலும், பல்வேறு போதைப்பொருள் விற்பனைக் குழுக்களின் ஆக்கிரமிப்பில் உள்ள கொலம்பியாவில் கஸ்டாவோ பெட்ரோவின் வெற்றி மாற்றத்தினை நிகழ்த்தும் என்ற நம்பிக்கையிலேயே மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபடுகிறார்கள் என்று பார்க்கப்படுகிறது. இதுவரையில் இல்லாத இடதுசாரி சிந்தையோட்டத்தினையும் கொள்கைகளையும் மக்கள் அங்கீகரித்துள்ளனர். நிறைந்த அரசியல் அனுபவமுள்ள பெட்ரோ அதனை சாத்தியப்படுத்துவார் என்பது மக்களின் நம்பிக்கை. அந்நம்பிக்கை வெல்லட்டும்.