நடைப்பழக தொடங்கியிருந்த ஒருநாளில், ஒரு குடும்பம் நாய்க்குட்டி ஒன்றை அவர்களின் வீட்டிற்கு அழைத்துச் சென்றது. அவர்கள் சின்னஞ்சிறு உயிரை வரவேற்று கொண்டாடினார்கள். நாட்கள் நகர்ந்தன. திடீரென வளர்ந்த நாயை வீட்டில் வைத்திருப்பதில் சிக்கல் ஏற்பட்டது. என்ன தருகிறார்களோ அதைச் சாப்பிட்டு, வீட்டு வாசலில் ஒரு ஓரத்தில் தூங்கி, முப்பொழுதும் வீட்டுக்காவலில் ஈடும் ஜீவன். ஒருவரையும் ஏதும் செய்யமால் இருந்தாலும், அந்த வீட்டுக்கு வருவோர்க்கு நாயைக் கண்டால் அப்படி ஒரு பயம். நாயை வீட்டிலிருந்து வெளியேற்ற இந்த ஒரு காரணம் போதும்தானே. எந்த குற்றமும் செய்யாத நாயை வீட்டிலிருந்து பத்து பதினைந்து தெரு தள்ளி ஒரு இடத்தில் கொண்டுபோய் விட்டனர். எப்போதும் தன்னைச் சுற்றி அவ்வளவு பேர் இருந்துவிட்டு, இப்போது யாரும் இல்லை என்ற ஏக்கம் அந்த நாய்க்கு.. தன் வீட்டைத் தேடி வந்தடைந்தது. ஆனால், நாயின் வரவு அவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கவில்லை. வெளியேற்ற அடுத்த திட்டம் தயார்.
அன்பு நாயை ஒரு பேருந்தில் ஏற்றி வேறு ஊருக்கு அனுப்பி வைத்தாயிற்று.. இது குடும்ப உறுப்பினர்களுக்கு சற்று நிம்மதியா அமைந்தது. இனி வீட்டிற்கு வருபவர்கள் பயமில்லாமல் இருக்கலாம். ஒரு வாரம் கடந்திருக்கும்.. அதிகாலை வாசல் கதவை திறந்தவர்களுக்கு அதிர்ச்சி; அவர் வளர்ப்பு நாய் வீட்டு வாசலில் படுத்திருந்தது. செல்லப்பிராணிகள் தங்கள் வீட்டையும், தன்னுடன் இருந்தவர்களை மறப்பதில்லை. பின்னாளில், சாலையைக் கடக்கும்போது ஏற்பட்ட விபத்தில் அந்த நாய் உயிரிழந்துவிட்டது.- இப்படி நாய்களை வளர்ப்பவர்களுக்கு பல நிகழ்வுகள் இருக்கும். நாய்கள் தங்கள் குடும்பத்தை, வளர்த்தவர்களை அவ்வளவு எளிதில் மறந்துவிடாது. கொரோனா காலத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதித்திருந்த தன்னை வளர்த்தவரை தினமும் வந்து பார்த்துவிட்டு செல்லும். அவர் இறந்த பின்பும், அந்த மருத்துவமனைத்து ஒரு வாரத்திற்கும் மேல் சென்று ஏமாற்றத்துடன் திரும்பியதாக செய்திகளில் வாசித்திருப்போம்.
போலவே, இன்னுமொரு நிகழ்வு- ஆப்கானிஸ்தான் நாட்டில் தன் வாழ்ந்த வீட்டையே பல நாட்களுக்கு சுற்றி வரும் நாய் ஒன்றின் புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரவேற்பை பெற்றுவருகிறது. பலரும் நாயின் எதிர்பாராத அன்பை பாராட்டி வருகின்றனர்.
ஆப்கானிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம் காரணமாக பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். தங்களது உறவுகள், உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர். இதில் பல வீடுகளில் வளர்த்த, உயிர்தப்பிய செல்லப்பிராணிகள் தங்களது குடும்பத்தினரை தேடிவரும் புகைப்படம் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வருகிறது.
சமீரா தனது ட்விட்டர் பதிவில் " ஒச்கி கிராமத்தில் இந்த நாய் வசித்துவந்த வீட்டைச் சேர்ந்தவர்கள் அனைவரும் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இறந்துவிட்டார்கள். இந்த நாயினை அருகில் வசிப்பவர்கள் தற்போது வளர்த்து வருகிறார்கள். இருப்பினும், தான் வாழ்ந்த வீட்டை, தன் ஓனரின் குடும்பத்தினரை அடிக்கடி வந்து இந்த நாய் பார்த்து செல்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
நேசமிகு நாயின் இச்செயல் இண்டர்நெட்டில் பகிரப்பட்டு வருகிறது.
ஆப்கானிஸ்தானின் பக்டிகா மாகாணத்தில் கடந்த வாரம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் 6.1 ஆக பதிவாகியது. இந்த நிலநடுக்கம் கோஸ்ட் நகரில் இருந்து 44 கி.மீ தொலைவில் மையம் கொண்டிருந்தது.
20 ஆண்டுகளில் இல்லாத பயங்கரம்:
ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றன. இதனால் கடுமையான நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. இந்த நிலநடுக்கம் தலிபான் அரசுக்கு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது.