ரஷ்ய எல்லையில் தங்கள் வீரர்கள் இருப்பது போன்று இணையதளங்களில் உலா வரும் புகைப்படம் உண்மையல்ல என சீனா தெரிவித்துள்ளது. உக்ரைனுக்குள் புகுந்த ரஷ்ய படையினர் கடந்த 24 நாட்களாக தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றன. பல உலக நாடுகளின் கண்டனம் மற்றும் எதிர்ப்பை மீறி ரஷ்யா இத்தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைனில் நடத்திவரும் ஆக்கிரமிப்புப் போரை உடனடியாக ரஷ்யா நிறுத்த வேண்டும் என்று கடந்த புதன்கிழமை சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அந்தத் தீர்ப்பை எதிர்த்த ரஷ்யா, ``ஐ.நா நீதிமன்றத்தின் இந்த முடிவை நாங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது" என நேற்று கூறியிருந்தது. இது ஒருபுறமிருக்க, சீனாவிடம் ரஷ்யா ராணுவ உதவியைக் கேட்டுவருவதாக அண்மையில் அமெரிக்கா குற்றம்சாட்டியிருந்தது. உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கைக்கு இடையே ராணுவம் மற்றும் பொருளுதவி வழங்குமாறு சீனாவிடம் ரஷ்யா கேட்டதாக வெளியான செய்தியை சீனா மறுத்தது.



உக்ரைனில் ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்த ஆயுதங்கள் உள்ளிட்ட உதவிகள் கொடுத்து உதவினால் சீனா அமெரிக்கா இடையிலான இரு தரப்பு வர்த்தகம் மிகப்பெரிய அளவில் பாதிக்கும் என சீன அதிபரை அமெரிக்க அதிபர் எச்சரித்ததாகவும் நேற்று ஒரு செய்தி வந்தது. உக்ரைனில் பொதுமக்கள் இருக்கும் கட்டிடங்கள், மருத்துவமனைகள் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மருத்துள்ள ரஷ்யா, அங்குள்ள ராணுவ அமைப்புகள் மீது மட்டுமே தாக்குதல் நடத்தி வருவதாகத் தெரிவித்திருந்தது. முன்னதாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு, ரஷ்யாவின் ஏவுகணை ஒன்று மரியுபோல் குழந்தைகள் மற்றும் மகப்பேறு மருத்துவமனையைத் தாக்கியதில் ஒரு குழந்தை உட்பட 3 பேர் பலியாகினர். மேலும், 17 பேர் காயமடைந்தனர்.






இந்நிலையில் சீனாவின் கனரக இராணுவ வாகனங்கள் ஏவுகணைகள், ஆயுதங்களுடன் ரஷ்ய எல்லைக்குள் வருவதாக ஒரு புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது உக்ரைனை கைப்பற்றத் துடிக்கும் ரஷ்யாவுக்கு ஆதரவாக சீனா களம் இறங்கியுள்ளதாக கூறப்பட்டிருந்தது. அந்த பதிவில், 200 முதல் 300 வரையிலான இராணுவ ட்ரக்குகள் சீனாவின் Heilongjiang மாகாணம் அருகேயும், ரஷ்யாவின் எல்லையான Suifenhe அருகேயும் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இதை தற்போது சீனா மறுத்துள்ளது. 'தவறான புகைப்படங்களை வெளியிட்டு, வேண்டுமென்றே சிலர் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். சீன படைகள் ரஷ்யாவுக்கு செல்லவில்லை' என, சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சமூக வலைதளத்தில் வெளியான புகைப்படம் 2021ஆம் ஆண்டு மே மாதம் Xinjiang மாகாணத்தில் நடந்த போர் பயிற்சியின் எடுக்கப்பட்டது என தெரிவித்துள்ளது.