வீட்டிலேயே செய்யப்பட்ட ஹெலிகாப்டர் ஒன்றை சோதனை செய்வதற்கு முற்பட்ட சீனாவை சேர்ந்த நபரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் ஒரு நபர், படகு இன்ஜினை கொண்டு தயாரிக்கப்பட்ட ஹெலிகாப்டரை சோதனை செய்ய முயன்றுள்ளார். பொறியியல் நிபுணத்துவமோ அல்லது பைலட் உரிமமோ ஏதும் இன்றி, விமானத்தை உருவாக்கியதாக 59 வயதாகும் சென் ருய்ஹுவா என்பவர் சாலையோரத்தில் பிடிப்பட்டுள்ளார். அவரது விமானத்தை சோதனை செய்வதிலிருந்து நிறுத்தப்பட்டதாக உள்ளூர் காவல்துறையினர் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர். "நான் உட்பட இரண்டு பேர் மட்டுமே பறக்கவிடும் சோதனையில் ஈடுபட்டிருந்தோம், பார்வையாளர்கள் யாரையும் நாங்கள் அனுமதிக்கவில்லை," என்று போலீஸ் விசாரித்தபோது சென் கூறியிருக்கிறார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஹெலிகாப்டர்களை பொழுதுபோக்காகத் தயாரிக்கத் தொடங்கி இருக்கிறார். பின்னர் புதுமையான முயற்சிகள் செய்ய உந்துதல் ஏற்பட்டு அதனை பறக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட துவங்கி உள்ளார். அவரது முந்தைய ஹெலிகாப்டர் மாடல்கள் பறக்காமல் சொதப்பிய நிலையில், சமீபத்தில் அவர் கண்டுபிடித்த ஹெலிகாப்டர் நூற்றுக்கணக்கான மீட்டர்கள் வரை பறக்கக்கூடியது என்று அவர் கூறினார்.



ஹெலிகாப்டரை எவ்வாறு உருவாக்குவது என்பதை இணையத்தில் காணொளிகளைப் பார்த்து கற்றுக்கொண்டதாக அவர் மேலும்தெரிவித்துள்ளார். "நான் இந்த ஹெலிகாப்டரை தயாரிக்க சுமார் ஒரு வருடம் வேலை செய்துள்ளேன்; இதுவரை, பொழுதுபோக்கிற்காக சுமார் 2,00,000 யுவான்கள் (US$31,250) செலவழித்துள்ளேன்" என்று அவர் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார். தான் கடைசியாக செய்த ஹெலிகாப்டர் மாடலில் ஆன்லைனில் வாங்கிய சில பாகங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், சில ஹார்டுவேர் ஸ்டோர்களில் வாங்கியதாகவும் கூறிய அவர், அதற்காக பயன்படுத்திய மோட்டார், படகு இயந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்று கூறியுள்ளார். சென் தமது ஹெலிகாப்டரை பொழுதுபோக்காகவோ அல்லது மகிழ்ச்சிக்காகவோ உருவாக்கவில்லை என்றும், அதை விவசாய நடவடிக்கைகளுக்காகவும் பயன்படுத்த விரும்புவதாகவும் கூறுகிறார். "உதாரணமாக, இது ஒரு ட்ரோனாக மாற்றப்பட்டு, விவசாய நிலங்களில் பூச்சிக்கொல்லிகளை தெளிக்க விவசாய இயந்திரமாக பயன்படுத்தப்படலாம் அல்லது தீயை அணைப்பதற்கு உதவலாம்" என்று சென் கூறினார். இருப்பினும், ஹெலிகாப்டரை சோதனை ஓட்டத்திற்கு எடுத்துச் செல்ல முயன்றபோது, ​​காவல்துறையின் தலையீட்டால், அவரால் முழுவதுமாக சோதனை செய்ய முடியவில்லை என்று குறிப்பிட்டார்.



"அவர் ஹெலிகாப்டருடன் அங்கு நிற்பதைப் பார்த்து, அவர் என்ன செய்கிறார் என்று அவரிடம் கேட்டோம், நாங்கள் அவரிடம் சென்று கேட்பதற்கு முன்பே அவர் விமானத்தை சோதனை செய்து கொண்டிருந்தார் என்பது தெரிந்தது", என்று வாங் என்ற காவல்துறை அதிகாரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். சீனாவின் பிரதான நிலப்பரப்பில் வீட்டில் தயாரிக்கப்பட்ட விமானங்கள் தடைசெய்யப்பட்ட விஷயம் ஒன்றும் இல்லை. ஆனால், விமான ஆணையத்தின் அனுமதியின்றி அவற்றை பறக்கவிட முடியாது. அதுமட்டுமின்றி அதனை பரக்கவிடும் நபர்களில் ஒருவருக்கு பைலட் உரிமமும் தேவை. "பாதுகாப்பு அபாயம்" எனக் கருதி, விமானத்தை மீண்டும் பறக்கவிட வேண்டாம் என்று சென்னுக்கு காவல்துறை அறிவுறுத்தியது. அதன்பிறகு, அவர்கள் பலமுறை அவரது வீட்டிற்குச் சென்று கண்காணித்து வந்துள்ளனர். அவர் மீண்டும் அந்த ஹெலிகாப்டரை சோதிக்க முயற்சிப்பார் என்று பயந்துள்ளனர். நீண்ட வாக்குவாதத்திற்கு பிறகு, சென் பைலட் உரிமம் பெறும் வரை, ஹெலிகாப்டர் பறக்க அனுமதி வாங்கும்வரை தனது ஹெலிகாப்டரை பறக்க விட மாட்டேன் என்று உறுதியளித்தார்.