சீனாவில் கர்ப்பப்பை மற்றும் சினைமுட்டைப் பையுடன் அவதிப்பட்ட ஆண் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தெற்கு சீனா மார்னிங் போஸ்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.


சீனாவின் சிச்சுவான் மாகாணத்தைச் சேர்ந்தவர் சென் லி. பாதுகாப்பு காரணங்களுக்காக பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் ஆணாகவே வாழ்ந்து வருகிறது. இவருடை விடலைப் பருவத்தில் சிறுநீரகப் பிரச்சினைக்காக அறுவை சிகிச்சை செய்துள்ளார். அதன் பின்னர் அவருக்கு மாதந்தோறும் சில குறிப்பிட்ட நாட்கள் மட்டும் சிறுநீர் கழிக்கும்போது ரத்தமும் சேர்ந்து வந்துள்ளது. 20 ஆண்டுகளாக அவர் இந்த உபாதையுடனேயே வாழ்ந்து வந்துள்ளார். ஆனால் இதற்கான காரணம் அவருக்குப் பிடிபடவில்லை. ஒருமுறை 4 மணி நேரத்துக்கும் மேல் கடுமையான வயிற்றுவலியில் துடித்துள்ளார் லீ. இதற்காக அவர் மருத்துவமனையிலும் அனுமதியாகியுள்ளார். அப்போது அவருக்கு அபண்டிசிடிஸ் இருப்பது கண்டறியப்பட்டது. அதற்காக அவருக்கு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. அதனால்தான் இத்தனை காலம் வலி ஏற்பட்டதோ என்று நினைத்து நிம்மதிப் பெருமூச்சுவிட்டார் லீ. ஆனாலும் அவருக்கு வலி தொடர்ந்தது.


கடந்த ஆண்டு அவர் முழு மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டார். அப்போதுதான் அவருக்கு அந்த அதிர்ச்சி காத்திருந்தது. அவருடைய உடலில் பெண்கள் ஹார்மோன் இருப்பது உறுதியானது. அது மட்டுமல்ல அவருக்கு இத்தனை காலமும் சிறுநீருடன் கலந்து வந்த ரத்தம் மாதவிடாய் என்பது உறுதியானது. பின்னர் அவர் குவாங்ஸோ சிறப்பு மருத்துவமனையில் அனுமதியானார். அங்கு அவருக்கு மேலும் பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டன. அங்கே அவருக்கு இன்னும் பல பேரதிர்ச்சிகள் வந்து சேர்ந்தன. மருத்துவர்கள் லீயின் உடலில் பெண் ஹார்மோன் மட்டுமல்ல, ஓவரிக்களும், கர்ப்பப்பையும் இருக்கிறது என்றனர். அவரது உடலில் ஆண்ட்ரோஜென் என்ற ஆண் ஹார்மோனின் அளவு குறைவாக இருந்ததை உறுதி செய்தனர். 


30 ஆண்டுகளாக ஆணாகவே வாழ்ந்துவிட்ட லீ தன்னை தற்போது தான் ஒரு இன்டர்செக்ஸ் என்பதை அறிந்து கொண்டார். இன்டர்செக்ஸ் என்ற சொல் உடற்கூறியல் மற்றும் மரபணு ரீதியாக உறுப்புகள் மற்றும் பாலியல் குணாதிசயங்களின் தொடர்ச்சியான மாறுபாடுகளைக் குறிக்கிறது, இது நபர் ஒரே நேரத்தில் பெண் மற்றும் ஆண் குணாதிசயங்களையும், உறுப்புகளையும் கொண்டவரைக் குறிக்கிறது. அவருக்கு ஆண், பெண் என்ற இரு பாலின உறுப்புகளும் உள்ளன. இதனையடுத்து லீ தனது பெண் பிறப்புறுப்பை அப்புறப்படுத்தும் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். இந்த அறுவை சிகிச்சை மூன்று மணி நேரம் நடந்தது. 


அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர் லுவோ ஸிபிங் இந்த சிக்கலான அறுவை சிகிச்சை பற்றி கூறுகையில், லீயால் இனி ஒரு ஆணாக வாழ முடியும். ஆனால் அவரது டெஸ்டிகல்ஸ் விந்துக்களை உற்பத்தி செய்யாது என்று தெரிவித்துள்ளனர்.