சுட்டு வீழ்த்த உத்தரவிட்ட அதிபர்:
அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் வெள்ளை நிற ராட்சத பலூன் ஒன்று பறந்து வருகிறது. இது சீனாவின் உளவு பலூன் என்றும், மொன்டானா மாகாணத்தில் உள்ள அணு ஆயுத தளத்தை கண்காணிக்க பறந்து வந்ததாகவும் அமெரிக்கா குற்றம்சாட்டியது. இதையடுத்து பாதுகாப்பு நடவடிக்கையின் பேரில், உடனடியாக அந்த பலூனை சுட்டு வீழ்த்த அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். ஆனால் அந்த பலூனை சுட்டு வீழ்த்தினால் பொதுமக்கள் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக பெண்டகன் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக தான், இந்த நேரம் வரையில் அந்த பலூன் சுட்டு வீழ்த்தப்படாமல் உள்ளது.
சுட்டு வீழ்த்துவதில் பிரச்னை என்ன?
வானில் பறக்கும் அந்த பலூன் ஆனது சுமார் 3 முழு நீள பேருந்துகளின் அளவிற்கு வடிவத்தில் பெரியது. அதில், அதிக எடையுடன் கூடிய இயந்திரங்களுடன், வழிகாட்டுதல் மற்றும் தகவல்களைச் சேகரிப்பதற்கான மின்னணுவியல், பெரிய சோலார் பேனல்களையும் கொண்டுள்ளது. வானில் சுமார் 80 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டுள்ளது. அமெரிக்காவின் கைவசம் உள்ள அதிநவீன போர் விமானங்கள் கூட அதிகபட்சமாக 65 ஆயிரம் அடி உயரத்திற்கு தான் பறக்க முடியும். அதனால் அந்த பலூனை சுட்டு வீழ்த்துவது சாதாரண காரியமல்ல. அதேநேரம், தற்போதுள்ள ஆயுதங்களை கொண்டு அழிக்கப்படும் அளவிற்கு, எளிதான வடிவமைப்பையும் அது கொண்டிருக்கவில்லை.
சாதாரண பலூனை போன்று ஓட்டை போட முடியாது:
சாதரண பலுனை போன்று ஒரு சிறிய ஓட்டை போட்டு அதில் காற்றை எடுத்துவிட்டால், பலூன் தானாக கீழே இறங்கி விடுமே என நினைக்கலாம். ஆனால், அந்த பலூன் செய்யப்பட்டுள்ள பொருளின் தடிமனானது ஒரு சாண்ட்வெஜ் அளவிலான தடிமனான பிளாஸ்டிக் பொருளை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை அதிநவீன ஆயுதங்களை கொண்டு, அந்த பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தினாலும், அதிலுள்ள அதிக எடையிலான பொருட்கள் கீழே விழுந்தால் பொதுமக்கள் பாதிக்கப்படலாம் என்பதால், அமெரிக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது. அதோடு, தற்போது நிலவும் சூழல்படி மேலும் சில நாட்களுக்கு, சீனாவின் அந்த பலூன் அமெரிக்க வான் பரப்பில் இருக்கும் எனவும் அராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சீனா விளக்கம்:
அமெரிக்க வான்பரப்புக்குள் பறந்தது உளவு பலூன் அல்ல என்றும், அது வானிலை ஆராய்ச்சிக்காக பறக்க விடப்பட்ட ஆகாய கப்பல் என்றும் சீனா விளக்கம் அளித்துள்ளது. அதில், மேற்கில் இருந்து வீசிய காற்று மற்றும் குறைவான சுய இயங்கு தன்மையால், ஆகாய கப்பல் திசை மாறி சென்று விட்டது. அது அமெரிக்க வான் பரப்புக்குள் தவறுதலாக நுழைந்ததற்காக வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்கா கண்டனம்:
”சீன அரசின் விளக்கம் பற்றி கேள்விபட்டோம். ஆனால் உண்மை என்னவென்றால் அது ஒரு உளவு பலூன் என்பது எங்களுக்கு தெரியும். அது அமெரிக்க வான்வெளி மற்றும் சர்வதேச சட்டம் ஆகியவற்றை மீறியுள்ளது. இதை ஏற்றுக் கொள்ள முடியாது” என அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.