Continues below advertisement


தைவான் கடல் பகுதியில் சீனா தனது போர் கப்பல்களை நிறுத்தி அச்சுறுத்த முயற்சித்தால், அதை எதிர்கொள்ள ஜப்பானும் படைகளை நிறுத்தும் என அந்நாட்டு பிரதமர் சனே தகாய்ச்சி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசியது, சீனாவை ஆத்திரமடை யச் செய்துள்ளது. இதையடுத்து, ஜப்பானுக்கு செல்ல வேண்டாம் என சீன மக்களுக்கு அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.


ஜப்பான் நாடாளுமன்றத்தில் பேசியபோது பரபரப்பை கிளப்பிய தகாய்ச்சி


ஜப்பானில், அரசியல் நெருக்கடி ஏற்பட்ட நிலையில், அந்நாட்டு பிரதமர் ஷிகெரு இஷிபா ராஜினாமா செய்ததையடுத்து, கடந்த அக்டோபர் மாதம் ஜப்பானின் முதல் பெண் பிரதமராக சனே தகாய்ச்சி பதவியேற்றார். இந்நிலையில், தைவான் விவகாரம் குறித்து அவர் தெரிவித்த சில கருத்துகளால் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


நவம்பர் 7ம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தில் தகாய்ச்சி பங்கேற்றபோது, எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர், 'தைவான் பிராந்தியத்தில் ஒருவேளை ஜப்பானின் இருப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நிலை உண்டானால், ஜப்பான் தற்காப்புக்காக படைகளை அனுப்புமா என கேட்டிருந்தார்.


அதற்கு பதிலளித்த தகாய்ச்சி, அவர் கேட்டது ஒரு கற்பனை நிலை என்றாலும், தைவான் கடல் பகுதியில் சீனா போர் கப்பல்களை நிறுத்துவது, மற்றொரு நாட்டின் பலவீனத்தை பயன்படுத்துவது போன்றவற்றை செய்தால், அது ஜப்பானின் இருப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்று தெரிவித்தார்.


மேலும், அந்த அச்சுறுத்தல் தாக்குதலாக மாறினால், தற்காப்புக்காக படைகளை நிறுத்தும் உரிமையை நாம் பயன்படுத்துவோம் என தகாய்ச்சி கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


தகாய்ச்சியின் பேச்சால் கோபமடைந்த சீனா


அதோடு, தகாய்ச்சியின் இந்த பேச்சு, சீனாவிற்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே வார்த்தைப் போர் வெடித்தது. எனினும், தான் பேசியதை திரும்பப் பெறும் எண்ணம் இல்லை என்று ஜப்பான் பிரதமர் தகாய்ச்சி உறுதிபடத் தெரிவித்துவிட்டார். இருந்தாலும், எதிர்கால சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, சில விவகாரங்களை பற்றி குறிப்பிடுவதை தவிர்ப்பேன் என்றும் தெரிவித்தார்.


தைவான், ஜப்பானுக்கு மிக அருகில் உள்ள ஒரு பகுதி. இதை தனது பிராந்தியத்தின் ஒரு பகுதியாகவும், ஒரே சீனா என்ற கொள்கையின் கீழ் உள்ளதாகவும் சீனா கூறுகிறது. மேலும், அடிக்கடி அங்கு போர்க் கப்பல்களை நிறுத்துவது, போர் விமானங்களை அனுப்புவது என, தைவானை சீனா மிரட்டி வருகிறது.


இந்நிலையில், ஜப்பான் பிரதமர் தகாய்ச்சி கூறிய கருத்து, தங்கள் இறையாண்மைக்கு எதிரானதாக சீனா கருதுகிறது. இதையடுத்து சீனாவின் வெளியுறவு துணை அமைச்சர் சன் வெய்டாங், சீனாவுக்கான ஜப்பான் துாதரை அழைத்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தார். இதேபோல் சீன ராணுவமும் மிரட்டும் வகையில் செய்தி வெளியிட்டது.


ஜப்பானுக்கு செல்ல வேண்டாம் - மக்களுக்கு அறிவுறுத்திய சீன அரசு


இதற்கிடையே, சீன மக்கள் யாரும் வரும் நாட்களில் ஜப்பானுக்கு செல்ல வேண்டாம் என்றும், தைவான் பற்றிய ஜப்பானின் ஆபத்தான கருத்துக்களால் சீனர்களுக்கு அங்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படலாம் எனவும், ஜப்பானுக்கான சீன துாதரகம் அறிவித்துள்ளது. மேலும், ஜப்பானுக்கு சென்று படிக்கும் திட்டம் இருந்தால், அதை மறுபரிசீலனை செய்ய, தங்கள் நாட்டு மாணவர்களுக்கு சீன அரசின் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.