உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்த அம்பாந்தோட்டை துறைமுகத்தில் உயர் தொழில்நுட்ப சீன ஆராய்ச்சிக் கப்பலை நிறுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதை ஒத்திவைக்க இலங்கை கோரிக்கை விடுத்ததையடுத்து, சீனத் தூதரகம் இலங்கையின் மூத்த அலுவலர்களுடன் அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.


சுதந்திரம் பெற்றதிலிருந்து சந்தித்திராத பொருளாதார நெருக்கடியால் நிலைகுலைந்த இலங்கையில் மக்கள் போராட்டம் நடைபெற்று அதிகார மாற்றம் நிகழ்ந்த நிலையில், சீனாவின் விண்வெளி மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு ஆய்வுக் கப்பலான 'யுவான் வாங் 5' ஆகஸ்ட் 11 முதல் 17 வரை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்த திட்டமிடப்பட்டது.


இதற்கு மத்தியில், இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சகம் கொழும்பில் உள்ள சீன தூதரகத்திற்கு ஆகஸ்ட் 5 தேதியிட்ட குறிப்பில், "இந்த விவகாரம் குறித்து மேலும் ஆலோசனை செய்யப்படும் வரை யுவான் வாங் 5 கப்பலின் அம்பாந்தோட்டைக்கு வருவதை ஒத்திவைக்க அமைச்சகம் கோர விரும்புகிறது" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.


இந்த கப்பல் தனது நடவடிக்கைகளை உளவு பார்க்க பயன்படுத்தப்படும் என இந்தியா கவலைப்படுவதாகவும், இது தொடர்பாக இலங்கையிடம் புகார் அளித்துள்ளதாகவும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


இந்நிலையில், கப்பல் வருவதை ஒத்திவைக்கக் கோரி இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் குறிப்பைப் பெற்றதையடுத்து, இந்த விவகாரம் குறித்து விவாதிக்க கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் முயற்சி செய்துள்ளது. திட்டமிட்ட கப்பல் பயணத்தை ஒத்திவைக்க இலங்கை கோரிக்கை விடுத்ததையடுத்து, இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க, சீனத் தூதர் குய் ஜென்ஹாங்குடன் ரகசிய சந்திப்பை நடத்தியதாகவும் சில இலங்கை செய்தி இணையதளங்கள் தகவல் வெளியிட்டன.


ஆனால் இந்த சந்திப்பு குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகளை அதிபர் அலுவலகம் மறுத்துள்ளது. ஜூலை 12 அன்று, இலங்கையில் நிலவும் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில், அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனக் கப்பலை நிறுத்த அப்போதைய அரசு ஒப்புதல் அளித்தது.


சீனக் கப்பல் இலங்கை துறைமுகத்தில் எரிபொருள் நிரப்பப்படும் என்றும், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் வடமேற்கு பகுதியில் செயற்கைக்கோள் கட்டுப்பாடு மற்றும் ஆராய்ச்சி கண்காணிப்பை மேற்கொள்ளும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.


தெற்கு ஆழ்கடல் துறைமுகமான ஹம்பாந்தோட்டை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ராஜபக்ச குடும்பத்தின் சொந்த ஊரில் அமைந்துள்ள இந்த துறைமுகமானது சீனக் கடனுதவியில் மேம்படுத்தப்பட்டது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண