செவ்வாய் கிரகத்தில் சீனாவின் ஜூராங் ரோவர், முதன்முறையாக, சிவப்பு கிரகத்தில் நீர் இருப்பதற்கான தடயங்களைக் கண்டறிந்துள்ளது. இது செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழும் சூழலுக்கு ஏற்ற சில பகுதிகள் இருப்பதைக் குறிக்கிறது. சயின்ஸ் அட்வான்சஸ் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வறிக்கையின்படி, 2021 இல் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய ஜுராங் ரோவர், பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள பகுதிகள் மற்றும் அதன் துருவங்களிலும் திரவ நீர் இருப்பதற்கான ஆதாரங்களைக் கண்டறிந்துள்ளது.






சீன ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆய்வில், செவ்வாய் கிரகத்தில் பூமியைப் போன்ற காலநிலை இருந்ததாகவும், சுமார் மூன்று பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அதன் மேற்பரப்பில் கடல் இருந்ததாகவும் இதனை நீண்ட காலமாக விஞ்ஞானிகள் நம்பி வருவதாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால் காலநிலை மாற்றங்கள் காரணமாக செவ்வாய் கிரகத்தில் இருந்த நீர் உறைந்து போனதாகவும் நம்புகின்றனர். உறைந்து போன நீர்  பெரும்பாலானவை கிரகத்தின் வெளிப்புற அடுக்கில் (outer crust) இருக்கலாம் என கூறப்படுகிறது. இன்றுவரை, செவ்வாய் கிரகத்தில் திரவ நீர் இருப்பதைக் காட்ட எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என தெரிவிக்கின்றனர்.


இருப்பினும், செவ்வாய் கிரகத்தின் பரிணாம வரலாற்றைப் புரிந்துகொள்வதில் சமீபத்திய ஆராய்ச்சி ஒரு பெரிய திருப்புமுனையாக நம்பப்படுகிறது. சீனாவின் ஜுராங் ரோவரில் இருந்து தரவுகளை ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள், பனி அல்லது பனி வடிவில் உள்ள தண்ணீரை நேரடியாக கண்டறியப்படவில்லை, மாறாக விரிசல் மற்றும் மேலோடுகளுடன் உப்பு நிறைந்த குன்றுகளை (dunes) அது கணித்துள்ளதாக சுட்டிக்காட்டினர். இது 4,00,000 ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் கிரகம் உப்பு நிறைந்த நீர் உலகமாக இருந்ததைக் குறிக்கிறது என்று ஆய்வு கூறுகிறது. செவ்வாய் கிரகத்தின் வெப்பநிலையானது காலை நேரங்களில் அதிக அளவில் மாறுபடுவதால், உப்பு நீர் ஆவியாகி, உப்பு மற்றும் புதிதாக உருவான பிற கனிமங்களை விட்டுவிட்டு, பின்னர் மணல் திட்டுகளுக்கு இடையில் ஊடுருவி, அவற்றை குன்றுகளாக  உருவாக்குகிறது என்று சீன ஆராய்ச்சியாளர்கள் விளக்கினர்.


"செவ்வாய் கிரகத்தின் காலநிலையின் பரிணாம வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கும், மனிதர்கள் வாழக்கூடிய சூழலைத் ஆராய்வதற்கும், எதிர்கால வாழ்க்கைக்கான தடயங்களை வழங்குவதற்கும் இது முக்கியமானது" என்று சீன அறிவியல் அகாடமியின் (CAS) முன்னணி ஆராய்ச்சியாளர் பேராசிரியர் Qin Xiaoguang கூறினார். ரோபோட்டிக் ரோவரின் நேவிகேஷன் மற்றும் டெரெய்ன் கேமரா, மல்டிஸ்பெக்ட்ரல் கேமரா மற்றும் மார்ஸ் சர்ஃபேஸ் கம்போசிஷன் டிடெக்டர் மூலம் பெறப்பட்ட தரவுகளைப் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. குன்றுகளின் மேற்பரப்பு அடுக்கில் நீரேற்றப்பட்ட சல்பேட்டுகள், நீரேற்ற சிலிக்கா, இரும்பு ஆக்சைடு தாதுக்கள் மற்றும் குளோரைடுகள் நிறைந்திருப்பதை அவர்கள் கண்டறிந்துள்ளனர்.