China Vs US: என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேன்றீங்களே.! அமெரிக்காவிடம் விடாப்பிடியாக மல்லுக்கட்டும் சீனா...

அமெரிக்காவிற்கும் சீனாவிற்குமான வர்த்தகப்போர் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. விடாப்பிடியாக இரு நாடுகளும் தங்களுக்குள் விதித்துக்கொண்டுள்ள வரி தற்போது எங்கு வரை சென்றுள்ளது தெரியுமா.?

Continues below advertisement

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பல்வேறு நாடுகளுக்கு பரஸ்பர வரிகளை விதித்திருந்தாலும், சீனா மட்டுமே அவருக்கு பதிலடி கொடுத்து வருகிறது. நீ ஏற்றினால் நானும் ஏற்றுவேன் என்ற அடிப்படையில், தற்போது இருநாடுகளுக்கு இடையேயும், வரி 100 சதவீதத்தையும் தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இப்படியே பேனால், இது எங்கு போய் முடியும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Continues below advertisement

ட்ரம்ப் விதித்த பரஸ்பர வரி - சீனா கொடுத்த பதிலடி

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தான் பதவியேற்ற உடன், அமெரிக்காவின் வருமானத்தை பெருக்கும் வகையில், நண்பனான இந்தியா உட்பட பல்வேறு நாடுகளுக்கு பரஸ்பர வரிகளை விதித்தார். அதன்படி, சீனாவிற்கு 34 சதவீத வரி விதிக்கப்பட்டது. ட்ரம்ப்பின் அறிவிப்பிற்கு எந்த நாடும் எதிர்வினை புரியவில்லை. இந்நிலையில், சீனா மட்டும் ட்ரம்ப்புக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, சீனாவில் இறக்குமதி செய்யப்படும் அமெரிக்க பொருட்கள் அனைத்திற்கும் 34% வரியை விதித்து, அமெரிக்காவிற்கு அதிர்ச்சி அளித்தது. மேலும், பல அமெரிக்க நிறுவனங்கள் சீனாவில் வர்த்தகம் செய்ய கட்டுப்பாடுகளையும், சில நிறுவனங்களுக்கு தடையையும் விதித்தது. 

இதைத் தொடர்ந்து டென்ஷனான ட்ரம்ப், சீனா அறிவித்த வரியை ஏப்ரல் 8-க்குள் திரும்பப்பெறாவிட்டால், அந்நாட்டிற்கு 50% கூடுதல் வரி விதிக்கப்படும் எனவும், அந்நாட்டுடனான பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்பட்டு, மற்ற நாடுகளுடன் உடனடியாக பேச்சுவார்த்தை தொடங்கப்படும் என எச்சரித்தார். ஆனாலும் அசராத சீனா, ட்ரம்ப் கூடுதல் வரியை விதித்தால், தாங்களும் அதற்கு கூடுதல் பதில் வரி விதிப்போம் என எச்சரித்தது.

இதையடுத்து, ட்ரம்ப் உத்தரவுப்படி, சீனாவிற்கான வரி 104%-ஆக அதிகரித்தது. இதைத் தொடர்ந்து, அமெரிக்காவிற்கான வரி 84%-ஆக உயர்த்தப்படுவதாக சீனா அறிவித்தது. இதனால், உலகளவில் வர்த்தகத்தில் பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டு, பல்வேறு நாடுகளின் வர்த்தக பங்குச்சந்தைகள் பெரும் வீழ்ச்சியை சந்தித்தன.

இந்நிலையில், சீனாவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அந்நாட்டிற்கான வரியை 125 சதவீதமாக உயர்த்தினார் ட்ரம்ப். அதோடு, மற்ற நாடுகளுக்கான வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்ததுடன், சீனாவை தவிர மற்ற நாடுகளுடன் பேச்சுவார்த்தை தொடங்கும் என அறிவித்தார். இதற்காவது சீனா அஞ்சும் என அவர் எதிர்பார்த்திருந்த நிலையில், அமெரிக்காவின் செயல்களுக்கு அஞ்ச மாட்டோம் என்றும், தாங்களும் வரியை மேலும் உயர்த்துவோம் என்றும் சீனா அறிவித்தது.

இதையடுத்து, சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை 145 சதவீதமாக உயர்த்தி ட்ரம்ப் அறிவித்தார். இதைத் தொடர்ந்து, சீனாவும் அமெரிக்க பொருட்களுக்கான வரிகளை 125 சதவீதமாக உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும், வரிகள் என்ற பெயரில் அமெரிக்கா கொடுமைப்படுத்துவதாகவும் சீனா குற்றம்சாட்டியுள்ளது.

“அமெரிக்க-சீன வர்த்தக உறவுகள் துண்டிக்கப்படும் அபாயம்“

இப்படி, இரு நாடுகளும் விடாப்பிடியாக வரிகளை உயர்த்திக்கொண்டே போனால், அமெரிக்கா-சீனா இடையே வர்த்தகங்கள் முற்றிலும் துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், சீனாவை பணிய வைக்க, பங்குச் சந்தைகளிலிருந்து சீன நிறுவனங்களை நீக்குவது, அமெரிக்காவில் உள்ள சீன சொத்துக்களை பறிமுதல் செய்வது, அமெரிக்காவில் படித்துவரும் 3 லட்சம் சீன மாணவர்களின் விசாக்களை நிறுத்தி வைப்பது அல்லது ரத்து செய்வது போன்ற நடவடிக்கைகளை எடுக்க அமெரிக்க தலைமைக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், அமெரிக்க-சீன வர்த்தகப் போரின் முடிவை உலகமே எதிர்பார்த்து காத்துள்ளது. அதே சமயத்தில், இது எங்கு போய் முடியுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola