அமெரிக்காவுக்கு சவால்விடும் சீனா:


மாறி வரும் உலக சூழலுக்கு மத்தியில் அமெரிக்காவுக்கு பெரும் சவால்விடுத்து வரும் சீனா, அனைத்து வகைகளிலும் தன்னை தயார்படுத்தி வருகிறது. பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் தன்னை பலப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, உக்ரைன் விவகாரத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ரஷியாவை கண்டு, அதிலிருந்து பாடம் கற்று கொண்டுள்ளது. அதன் விளைவாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 


உக்ரைன் மீது போர் தொடுத்த காரணத்தால் ரஷியா மீது அமெரிக்காவும் அதன் கூட்டு நாடுகளும் பொருளாதார தடைகளை விதித்துள்ளது.  இது, தனக்கு நேர்ந்திடாதவாறு தடுத்திடும் நோக்கில் வெளிநாடுகளில் கடற்படை தளங்களை அமைக்க சீனா திட்டமிட்டு வருகிறது. தன் மீது பொருளாதார தடை விதித்தாலும் அதை எதிர்கொண்டு, தங்கள் நாட்டு கப்பல்கள் தடையின்றி செல்வதற்கு வெளிநாட்டில் கட்டப்படும் கடற்படை தளங்களை பயன்படுத்த சீனா திட்டமிட்டு வருகிறது. இதன்மூலம், தங்களின் கடல்வழி பாதையை பலப்படுத்த உள்ளது.


வெளிநாட்டில் கடற்படை தளத்தை அமைக்க திட்டம்:


இதற்காக, அடுத்த இரண்டிலிருந்து ஐந்தாண்டுகளுக்குள் வெளிநாடு ஏதேனும் ஒன்றில் கடற்படை தளத்தை அமைக்க சீனா திட்டமிட்டு வருகிறது. அதற்காக, குறிப்பாக மூன்று இடங்களை சீனா தேர்வு செய்துள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த ஆய்வு நிறுவனமான AidData அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. மத்திய ஆப்பிரிக்க நாடான எக்குவடோரியல் கினியாவின் பாடா நகரத்தையும் பாகிஸ்தானில் உள்ள குவாடர் நகரத்தின் மீதும் சீனா தன் கவனத்தை திருப்பியுள்ளதாக அந்த ஆய்வு கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




சீனா தேர்வு செய்துள்ள மூன்றாவது இடம் புவிசார் அரசியலில் ஏற்கனவே முக்கியத்துவம் பெற்ற இடமாக உள்ளது. அது வேறு எந்த இடமும் அல்ல, இலங்கையில் உள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகம்தான். துறைமுகங்களை அமைக்க சீனாவுக்கு சொந்தமான பொதுத்துறை வங்கிகள் அளித்த கடன் அளவு, வீயூக ரீதியாக கொடுக்கப்படும் முக்கியத்துவம், குறிப்பிட்டு நாட்டுடன் கொண்டுள்ள நல்லுறவு ஆகியவற்றின் அடிப்படையில் சீனா எட்டு இடங்களை தேர்வு செய்துள்ள ஆய்வு கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தற்போதைக்கு, சீனா ராணுவத்திற்கு சொந்தமாக ஒரே கடற்படை தளம்தான் வெளிநாட்டில் உள்ளது. ஆப்பிரிக்க நாடான ஜிபூட்டியில்தான் அந்த கடற்படை தளம் அமைந்துள்ளது. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையேயான மோதல் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்காவுக்கு இணையாக வெளிநாட்டு கடற்படை தளங்களை அமைக்கும் பணியில் சீனா தீவிரம் காட்டி வருகிறது. பல்வேறு சர்வதேச பாதுகாப்பு ஒப்பந்தத்தில் அமெரிக்கா கையெழுத்திட்டுள்ள நிலையில், வடகொரியாவுடன் மட்டும்தான் சீனா பாதுகாப்பு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.


இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக மாறுகிறதா ஹம்பாந்தோட்டை துறைமுகம்?


இதன் காரணமாகவே, சீன ராணுவத்தை பலப்படுத்தும் நோக்கில் வெளிநாட்டில் கடற்படை தளத்தை அமைப்பதற்கு சீனா முக்கியத்துவம் அளித்து வருகிறது. மேற்கத்திய நாடுகள் தடை விதிக்கும் பட்சத்தில், கடல்வழி பாதையை பாதுகாத்து உளவுத்தகவல்களை சேகரிக்க இந்த கடற்படை தளம், சீனாவுக்கு உதவும் என AidData ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.




மற்ற இடங்களை காட்டிலும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா, தன்னுடைய கடற்படை தளமாக மாற்ற அதிக வாய்ப்பிருக்கிறது என மற்றொரு அதிர்ச்சி தகவலை ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டுதான், இந்த துறைமுகம் திறக்கப்பட்டுள்ளது. சீனாவின் பொதுத்துறை வங்கியான சீன எக்ஸிம் வங்கி அளித்த 306.7 மில்லியன் அமெரிக்க டாலர் கடனில்தான் இந்த துறைமுகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சீன அரசின் நேரடி கட்டுப்பாட்டில் ஹம்பாந்தோட்டை துறைமுகம் உள்ளது என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அளிக்கப்பட்ட கடனை இலங்கை அரசு திருப்பி அளிக்க முடியாத காரணத்தால், கடந்த 2017ஆம் ஆண்டு, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா நிறுவனம் ஒன்று, 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்தது. கடன் மூலம் மற்ற நாடுகளை சிக்க வைக்கும் சீனாவின் உத்திக்கு ஒரு எடுத்துக்காட்டே ஹம்பாந்தோட்டை துறைமுகம் என ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிட்னி பல்கலைக்கழகத்தின் யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆய்வு மையத்தில் ஆய்வறிஞராக உள்ள பிளேக் ஹெர்ஸிங்கர், இதுகுறித்து கூறுகையில், "வர்த்தகம் செய்வது போல் கொடி நாட்டுவது காலம் தொட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் நடைமுறை. இம்மாதிரியான இடங்களை கொண்டு தங்களுக்கு தேவையான பொருள்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல அவர்கள் (சீன கம்யூனிஸ்ட் அரசு) பயன்படுத்தி கொள்வார்கள்" என்றார்.


அமெரிக்க, சீன நாடுகளுக்கு இடையேயான இந்த வர்த்தக போரில் இன்னொரு நாடும் மாட்டி கொண்டுள்ளது. அது வேறு யாரும் அல்ல இந்தியாதான். இந்தியாவுக்கு அருகே உள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை தேர்வு செய்திருப்பதன் மூலம் இந்தியாவுக்கும் சேர்த்தே செக் வைத்திருப்பதாக புவிசார் அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஏற்கனவே, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் எல்லை பிரச்னை நிலவி வரும் நிலையில், ஹம்பாந்தோட்டை துறைமுக விவகாரம் இந்தியாவுக்கு மேலும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு லடாக்கில் இந்திய, சீன ராணுவ வீரர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் இருநாட்டு உறவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அருணாச்சல பிரதேசத்தில் சீன ராணுவம் ஊடுருவியுள்ளதாகவும் கிராமங்களை கட்டி வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியான நிலையில், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மூலம் இந்தியா குறித்த உளவுத்தகவல்களை சேகரிக்க சீனா திட்டமிட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


ஏற்கனவே, சீனாவின் உளவு கப்பலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்த இந்தியா எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இந்தியாவின் ஆட்சேபனையை ஏற்று கொண்டு உளவு கப்பலை தங்களின் துறைமுகத்தில் நிறுத்துவதை காலவரையற்று தள்ளிபோட சீனாவை இலங்கை கேட்டு கொண்டது. ஆனால், சீனாவின் அழுத்தம் காரணமாக, உளவு கப்பலை நிறுத்துவதற்கு இலங்கை அனுமதி அளித்தது. இது, இந்தியாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இம்மாதிரியான சூழலில், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனா கடற்படை தளத்தை அமைத்தால் அது இந்தியாவுக்கு பெரும் சிக்கலை உண்டாக்கும் என புவிசார் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.


ஆனால், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் கடற்படை தளத்தை அமைக்க போவதாக வெளியான செய்திக்கு சீனா இன்னும் மறுப்பு தெரிவிக்காமல் இருப்பது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது. அதேபோல, இதுகுறித்து இலங்கை அரசின் கருத்தை கேட்க, அவர்கள் தரப்பை தொடர்பு கொண்ட போதிலும், அவர்கள் இதுவரை பதில் அளிக்கவில்லை.