சீனாவின் ஹெனான் மாகாணத்தில் வென்ஃபெங் மாவட்டத்தின் அன்யாங் நகரில் உள்ள உயர் தொழில்நுட்ப மையத்தில் செயல்படும், கைசிண்டா டிரேடிங் கோ லிமிடெட் எனும் நிறுவன ஆலையில் நேற்று பிற்பகலில் திடீரென தீப்பற்றியது.


ரசாயன பொருட்கள் உற்பத்தி செய்யும் அந்த தொழிற்சாலையில் ஏராளமான ரசாயனப் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அங்கு பற்றிய தீ உடனடியாக ஆலை முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரிய அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்துள்ளது. தகவலறிந்து 63 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. பல மணி நேரங்கள் போராடி இரவு 8 மணிக்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட தீ, நள்ளிரவு 11 மணியளவில் முழுமையாக அணைக்கப்பட்டது.


36 பேர் உயிரிழப்பு: 


இந்த கோர விபத்தில் தொழிற்சாலையில் பணியாற்றிக் கொண்டிருந்த 36 பேர் உடல் கருகி பலியாகியுள்ளனர். மீட்கப்பட்ட உடல்களை அடையாளம் காணும் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன. 2 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், 2 பேரை காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் எரிந்து நாசமான கட்டட இடிபாடுகளில் சிக்கி காணாமல் போனவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். விபத்து தொடர்பாக ஆலையின் நிர்வாகிகள் சிலரை பிடித்து காவல்துறை விசாரித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


இந்த விபத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. ஆனால் முறையான அனுமதியில்லாமல் ஆபத்தான ரசாயனப் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனிடையே, பலவீனமான பாதுகாப்புத் தரங்கள் மற்றும் அவற்றைச் செயல்படுத்தும் அதிகாரிகளின் ஊழல் காரணமாக சீனாவில் தொழில்துறை விபத்துக்கள் அதிகளவில் ஏற்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.