பிரிட்டன் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக லண்டனுக்குச் செல்லும் சீனக் குழு நாடாளுமன்றத்தில் சவப்பெட்டியில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலை பார்க்க அனுமதி வழங்கப்படாது என தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தி பிபிசியில் வெள்ளிக்கிழமை அன்று வெளியாகியுள்ளது.


 






ஷின்ஜியாங்கில் மனித உரிமை மீறல் சம்பவங்களை விமர்சித்ததற்காக பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு சீன தடை விதித்துள்ள நிலையில், சீனாவிலிருந்து பிரதிநிதிகளை அழைப்பது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள்  கவலை தெரிவித்துள்ளனர். ஆனால், இதை சீனா மறுத்துள்ளது.


சீனா விதித்த தடை காரணமாக, நாடாளுமன்ற எஸ்டேட்டில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்திற்கு செல்ல சீன பிரிதிநிதிகளுக்கு பிரிட்டன் நாடாளுமன்ற கீழ்சபையின் சபாநாயகர் அனுமதி மறுத்துள்ளார். இதன் காரணமாக, சீன அரசாங்கத் தூதுக்குழு நாடாளுமன்றத்திற்கு உள்ள வைக்கப்பட்ட மகாராணியின் உடலை பார்க்க அனுமதி மறுக்கபட்டுள்ளது என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.


இது தொடர்பாக சபாநாயகர் அலுவலகம் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. பாதுகாப்பு விஷயங்களில் கருத்து தெரிவிக்க மாட்டோம் என நாடாளுமன்ற கீழ் சபை தெரிவித்துள்ளது. வெளியுறவு அலுவலகத்தின் ஆலோசனையைப் பெற்ற பிறகு விருந்தினர் பட்டியலை பக்கிங்ஹாம் அரண்மனை தயாரிக்க உள்ளது. விதிகளின் படி, தூதரக உறவுகளைக் கொண்ட நாடுகளின் பிரதிநிதிகளை பிரிட்டன் அழைக்கும் என பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ்ஸின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.


பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், இது தொடர்பான அறிக்கையை இன்னும் பார்க்கவில்லை என சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் கூறியுள்ளார்.


இது தொடர்பாக விரிவாக பேசிய அவர், "நான் சொல்ல விரும்புவது ராணி இரண்டாம் எலிசபெத்தின் அரசு இறுதிச் சடங்கு பிரிட்டனுக்கு ஒரு முக்கியமான நிகழ்வு. பிரிட்டன் அழைப்பின் பேரில் வெளிநாட்டு பிரதிநிதிகள் நிகழ்வில் பங்கேற்பது ராணிக்கு மரியாதை செலுத்துவதற்கும் அந்நாட்டுடன் உறவு வைத்திருப்பதன் முக்கியத்துவத்தின் அடையாளமாகும்.


விருந்தினராக, பிரிட்டன் இராஜதந்திர நெறிமுறைகளையும் முறையான நடத்தைகளையும் கடைப்பிடிக்க வேண்டும்" என்றார். இறுதிச் சடங்கில் உலகத் தலைவர்கள், அரச குடும்பங்கள் மற்றும் பிற முக்கியஸ்தர்கள் கலந்துகொள்வார்கள். சீன துணை அதிபர் வாங் கிஷான் சீனாவை பிரதிநிதித்துவப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என பிரிட்டன் வெளியுறவு அலுவலக வட்டாரம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.