கிழக்கு லடாக் பகுதியில் சீனா சார்பாக இரண்டாவதாக பாலம் ஒன்று பாங்காங் டுசோ ஏரியின் மீது கட்டப்பட்டு வருவதாக மத்திய வெளியுறவுத்துறை உறுதி செய்துள்ளது. மேலும், கடந்த 1960களில் இருந்து, அப்பகுதியில் உள்ள இரண்டு பாலங்கள் சட்டவிரோதமாக சீனாவின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. 


மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் பேசியுள்ள அரிந்தம் பாக்சி, இந்திய எல்லைக்குள் இதுபோன்ற சட்டவிரோத ஆக்கிரமிப்பை இந்தியா ஏற்றுக் கொண்டதில்லை எனவும், சீனாவின் நியாயமற்ற கோரிக்கைகளையோ, இதுபோன்ற கட்டுமானப் பணிகளையோ ஏற்றுக் கொள்ளவில்லை எனவும் கூறியுள்ளார். 


சமீபத்தில் செயற்கைக்கோள் உதவியுடன் வெளியிடப்பட்ட படங்களில் கிழக்கு லடாக் பகுதியில் தந்திர ரீதியாக முக்கியமான பகுதிகளில் சீனா இரண்டாவதாக பாலம் கட்டி வருவதாக கூறப்பட்டுள்ளது. 



மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ள அரிந்தம் பாக்சி, `பாங்காங் ஏரியின் குறுக்கே ஏற்கனவே கட்டப்பட்டிருந்த பாலத்திற்கு அருகில் மற்றொரு பாலத்தை சீனா கட்டி வருவது குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன. கடந்த 1960களின் இருந்து இந்தப் பகுதிகள் சீனாவால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. நம் எல்லைக்குள் இதுபோன்ற சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை ஏற்றதோ, சீனாவின் முடிவுகளையும், கட்டுமானப் பணிகளையும் ஏற்றுக் கொண்டதோ இல்லை’ எனத் தெரிவித்துள்ளார். 


மேலும் அவர், `பாலம் என்று சொல்லப்படும் கட்டுமானத்தையும், மீண்டும் மற்றொரு பாலத்தையோ, அல்லது ஏற்கனவே இருக்கும் பாலத்தை பெரிதாக்கும் பணியிலோ சீனா ஈடுபட்டு வருகிறது’ எனத் தெரிவித்துள்ளார். 


மேலும் அவர் இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பாக இந்த விவகாரத்தில் அடுத்தடுத்த முன்னேற்றங்கள் பற்றி இந்திய அரசு தொடந்து கண்காணித்து வருவதாகவும், இந்தியாவின் இறையாண்மையையும், எல்லை ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும் கூறியுள்ளார். 



தற்போது பாங்காங் ஏரி மீது சீனா கட்டி வரும் பாலம் காரணமாக, தீவிர ஆயுதங்கள் தாங்கிய கனரக வாகனங்களை அதன் மீது எடுத்து வர முடியும். மேலும், இந்தியா சொந்தம் கொண்டாடும் அதே பகுதியில் இரண்டாவதாக கட்டப்படும் பாலம் இது எனவும் தெரிய வந்துள்ளது. 


பாங்காங் ஏரியின் வடக்குக் கரையோரப்பகுதியில் சுமார் 20 கிலோமீட்டர்கள் தொலைவில் இரண்டாவது பாலம் கட்டப்பட்டிருப்பதாகவும், அந்தப் பகுதியில் இருந்து இந்தியக் கட்டுப்பாட்டு எல்லை தொடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


எனினும், சாலையில் பயணிக்கும் போது 35 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்த இடம், கடந்த 1958ஆம் ஆண்டு இந்தப் பகுதி சீனக் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், இந்தியாவின் எல்லையில் இருந்து சற்று மேற்கில் இருக்கும் இந்த இடத்தை சர்வதேச எல்லையாக இந்தியா கருதுகிறது. 


இரண்டாவதாக கட்டப்பட்டிருக்கும் இந்தப் பாலம் முழுமையடைய இருப்பதாகவும், முதல் பாலத்திற்கு அருகில் இதன் தூண்கள் வெளிப்படையாக தெரிவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 


இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, `இந்திய எல்லையில் சீன அரசு கிராமங்களையும், சாலைகளையும் கட்டி வருகிறது. மத்திய அரசின் கவனத்திற்கு இதனைக் கொண்டு சென்றால், அவர்கள் இதுகுறித்து கவலைப்படாமல் மக்களையும், இளைஞர்களையும் வழிகெடுத்து வருகின்றனர். ஒருநாள் தாங்கள் தவறு செய்து வருகிறோம் என்பதை இவர்கள் உணர்வார்கள்’ எனக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.