இதுவரை யாருமே கண்டுபிடித்திராத படிமமாக்கப்பட்ட முட்டையில் டைனோசர் கருவை சீன தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். சுருண்ட நிலையில் அந்த டைனோசர் குட்டி முட்டைக்குள் இருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.


இந்த கருவின் வயது 70 மில்லியன் ஆண்டுகள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. 6 இன்ச் நீளம் கொண்ட முட்டை ஓட்டுக்குள் டைனோசர் குட்டி படிமமாகிக் காணப்படுகிறது. அந்த டைனோசரின் தோற்றம் பறவையை ஒத்து உள்ளது. அதற்கு சிறிய கைகளும், இறக்கைகளுக்குப் பதில் நீண்ட கூர்மையான கால் நகங்களும் உள்ளன.


முட்டையின் நீளம் 17 செ.மீ. அந்த முட்டைக்குள் டைனோசர் குட்டி சுருண்டு இருப்பதால், அதன் நீளம் 27 செ.மீ இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்தக் குட்டி உயிர் பெற்று வந்திருந்தால் 2 முதல் 3 மீட்டர் வரை வளர்ந்திருக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 


இதுபோன்ற முட்டையில் படிமமான டைனோசர்களைப் பார்ப்பது மிக மிக அரிது. 






இது குறித்த தகவல் ஐ சயின்ஸ் என்ற மருத்துவ இதழில் வெளியாகியுள்ளது. இது குறித்து ஆராய்ச்சியாளர் டார்லா ஜெலென்ட்ஸ்கி கூறும்போது, டைனோசர் குட்டிகளின் எலும்புகள் மிகவும் மெலிதானதாக இருக்கும். அதனாலேயே அவை அழுத்தத்தைத் தாங்கி படிமமாவது அரிதான நிகழ்வு.






ஆனால், இந்த டைனோசர் முட்டை படிமம் கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும். நான் 25 ஆண்டுகளாக டைனோசர் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறேன். இதில் முதன்முறையாக இப்படியொரு டைனோசர் முட்டை படிமம் கிடைத்துள்ளது.


உலகம் முழுவதும், இது போன்ற படிமங்கள் குறித்து ஆராய்ச்சி 6 இடங்களில் மட்டுமே நடைபெறுகிறது. அதில் இப்படியொரு படிமம் கிடைத்திருப்பது ஆராய்ச்சியாளர்களுக்கு அடித்த அதிர்ஷ்டப் பரிசு என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.


ஆராய்ச்சியாளர் வாய்சும் மா, கூறும்போது, இப்படி ஒரு டைனோசர் முட்டைப் படிமம் ஆச்சர்யமாக மட்டுமல்லாமல் ஆழகாகவும் இருக்கிறது. ஒரு பறவையைப் போல் இப்படி முட்டைக்குள் சுருண்ட நிலையில் டைனோசர் இருந்ததில்லை என்ரு கூறினார். 


இந்த குட்டி டைனோசருக்கு பேபி யிங்லியாங் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த படிமம், சீன அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.